Published : 28 Mar 2015 14:39 pm

Updated : 28 Mar 2015 14:39 pm

 

Published : 28 Mar 2015 02:39 PM
Last Updated : 28 Mar 2015 02:39 PM

இயற்கை விவசாயம் மானியத்தை மிச்சப்படுத்தும்: வேளாண் அறிஞர் கிளாட் ஆல்வாரஸ் நேர்காணல்

கிளாட் ஆல்வாரஸ் - கோவாவைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி இயற்கை வேளாண் அறிஞர், சுற்றுச்சூழல் போராளி. சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவான 'கோவா அறக்கட்டளை'யின் இயக்குநர். நெதர்லாந்தின் டெக்னிஷே ஹோகெஸ்கூலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கல்வியாளராக இருந்து சுற்றுச்சூழல் போராளியாக மாறியவர்.

Organic Farming Association of India என்ற அமைப்பு தொண்ணூறுகளில் தொடங்கப்பட்டபோது, அந்த அமைப்பின் நிறுவனச் செயலாளராக இருந்தவர், தற்போது அதன் மத்தியச் செயலக இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். அவர் எழுதிய Organic Farming Sourcebook புத்தகமும், நம் நாட்டுப் பாரம்பரிய விதைகள் திருடப்பட்டது தொடர்பாக எழுதிய 'The Great Gene Robbery' கட்டுரையும் புகழ்பெற்றவை.


கிளாட் ஆல்வாரஸ்

சுருக்கமாகச் சொல்வதென்றால், இயற்கை வேளாண்மைக்கு மிகப் பெரிய உந்துசக்தி. இந்திய இயற்கை விவசாய சங்கத்தின் ஐந்தாவது தேசிய மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, சமீபத்தில் சென்னை வந்திருந்தவரிடம் உரையாடியதில் இருந்து:

தமிழகத்தில் இயற்கை வேளாண்மையின் போக்கு எப்படி இருக்கிறது?

நாட்டின் வேறெந்தப் பகுதியைவிடவும் தமிழகத்தில் இயற்கை வேளாண்மை பரவலாக நடைபெற்று வருகிறது. புதுமையான இயற்கை வழிமுறைகளைக் கண்டறிவதில் சிறந்த மாநிலமாக இருக்கிறது. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பும்போது எழும் பல தொழில்நுட்பச் சிக்கல்களுக்குத் தமிழக இயற்கை விவசாயிகள் தீர்வு கண்டுள்ளனர். பூச்சித் தாக்குதல், பயிரில் ஊட்டச்சத்தை தக்கவைப்பது என்று அவர்கள் தீர்வு கண்ட சிக்கல்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இயற்கை வேளாண்மையின் அவசியத்தைப் பற்றி தமிழக விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தனிப் பயிற்சி தர வேண்டிய தேவையும் எழவில்லை. இயற்கை வேளாண்மை குறித்து நிறைய புத்தகங்கள், இதழ்கள் தமிழில் வந்துகொண்டே இருக்கின்றன. நம்மாழ்வார் போன்றவர்களும் நிறைய வேலை பார்த்துள்ளனர். இயற்கை வேளாண்மை குறித்த அறிவும், தகவலும் நிறைய இருக்கின்றன. இவை எல்லாமே நல்ல அறிகுறிதான்.

அவர்களுக்கு உள்ள ஒரே பிரச்சினை இயற்கை வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்துவதுதான். அதுதான் அவர்களுடைய முக்கியப் பிரச்சினையும்கூட. அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் இன்றைக்கு அதிகரித்துள்ள 40க்கும் மேற்பட்ட இயற்கை வேளாண் கடைகளின் எண்ணிக்கையே அதைச் சொல்லிவிடும். என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் இயற்கை விவசாயம் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்துள்ளது.

இயற்கை வேளாண்மை பற்றி பேசும்போது எல்லாமே தன்னார்வ-தனியார் முயற்சிகளாகவே உள்ளன. அரசு எப்படிப்பட்ட ஆதரவை அளித்து வருகிறது?

இயற்கை விவசாயத்துக்கு அரசு ஆதரவு இல்லையே என்ற ஆதங்கம் பொதுவாக முன்வைக்கப்படுகிறது. இது சீக்கிரமே மாறிவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதற்கான அறிகுறிகள் பரவலாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் எங்களுடைய இந்திய இயற்கை விவசாயச் சங்கத்தின் ஐந்தாவது தேசிய மாநாட்டைச் சண்டிகரில் நடத்தினோம். இதில் முன்னோடி பசுமைப் புரட்சி மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா முதல்வர்கள் பங்கேற்றனர்.

பஞ்சாபில் இயற்கை விவசாயத்துக்கு என்று தனி வாரியம், மாவட்டம்தோறும் ஒரு கிராமத்தில் இயற்கை வேளாண் மாதிரிப் பண்ணை என இயற்கை வேளாண்மை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளைத் தொடங்க இருப்பதாகப் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரோ ஒவ்வொரு ஆண்டிலும் 10 சதவீதம் இயற்கை வேளாண்மைக்கு மாறுவோம். 10 ஆண்டு முடிவில் மாநிலம் முழுவதும் இயற்கை வேளாண்மைக்கு மாறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அதேபோலப் பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் இயற்கை வேளாண்மை மட்டும்தான் விவசாயம் தழைப்பதற்கான ஒரே வழி என்று பேசியுள்ளார். இது எல்லாமே இயற்கை வேளாண்மையை நோக்கி அரசும் நகர்வதற்கான தெளிவான அறிகுறிகள். அதிகாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள் என அனைத்தும் இந்தத் திசையை நோக்கி நகரும்.

எங்களுடைய கோரிக்கை இதுதான். பட்ஜெட்டில் விவசாய ஒதுக்கீட்டில், 50 சதவீதத்தை இயற்கை வேளாண்மைக்கு ஒதுக்குங்கள். வேதி விவசாயம் குறித்துப் போதுமான ஆராய்ச்சிகள் ஏற்கெனவே நடத்தப்பட்டுவிட்டன. இனிமேலும் அதற்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை. நிதி, ஆராய்ச்சி, செயல்திட்டங்களில் பாதியை இயற்கை வேளாண்மைக்குத் திருப்புங்கள்.

அப்படிச் செய்தால் மிகப் பெரிய மாற்றம் உருவாகும். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும், வேதி உரங்களின் பயன்பாடும் குறையும். மண் சீரழிவது தடுத்து நிறுத்தப்படும். தண்ணீர் பயன்பாடு குறையும். ஒவ்வோர் ஆண்டும் வேதி உரங்களுக்காக 70,000 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இயற்கை விவசாயத்துக்கு மாறினால், வேதி உரத்துக்கான மானியச் செலவு அவசியமில்லை. அந்த உரங்கள் இல்லாமல் அதே அளவு உற்பத்தியை இயற்கை விவசாயத்தில் பெறலாம்.

தற்போது மானியத்துக்குச் செலவழிக்கும் பணத்தை இயற்கை விவசாயிகளுக்குப் பரிசு-ஊக்கத்தொகை கொடுக்கப் பயன்படுத்தலாம். வேதி விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு 2-3 ஆண்டுகள் ஆகலாம், அந்த மாற்றம் நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் உற்பத்தி குறையலாம். அதை ஈடுகட்ட இந்தத் தொகையைப் பயன்படுத்தலாம். கால்நடைகள், மண்புழு உரம் தயாரிப்பு, சாண எரிவாயு போன்றவற்றுக்கு ஊக்கத்தொகையும் தரலாம். இந்த யோசனைகள் செயல்படுத்தப்பட்டால் இயற்கை விவசாயத்துக்கு மிகப் பெரிய ஊக்கம் கிடைக்கும்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியின்போது தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்த மரபணு மாற்றுப் பயிர்களின் களப் பரிசோதனைகளுக்கு மத்தியப் பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கத் தயாராக உள்ளது போல் தெரிகிறதே...

இயற்கை விவசாயத்துக்கு அரசு ஊக்கம் அளிக்கத் தொடங்கிவிட்டால் மரபணு மாற்றுப் பயிர்களை அறிமுகப்படுத்துவது, ஆராய்ச்சி செய்வதற்கான நெருக்கடி குறைந்துவிடும். மரபணு மாற்றுப் பயிர் தருவதாகச் சொல்லும் பலன்களை இயற்கை விவசாயமே தந்துவிடும்.

இயற்கை வேளாண் பொருட்களை இந்தியா பெருமளவு ஏற்றுமதி செய்து வருகிறது. மரபணு மாற்றுப் பயிர்களுக்கு ஊக்கம் அளித்தால், அது இயற்கை வேளாண்மையையும், அதன் ஏற்றுமதியால் கிடைக்கும் வருவாயையும் பாதிக்கும். மரபணு மாற்றுப் பயிர்களில் எதிர்பார்க்கும் விளைவு கிடைக்காது. அதைச் சார்ந்திருப்பது எந்தப் பலனையும் தர போவதில்லை. எனவே, மரபணு மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டியதில்லை, மாற முடியாது என்பதுதான் நிதர்சன நிலை.

இயற்கை வேளாண்மையால் மக்கள்தொகை முழுவதற்கும் உணவளிக்க முடியுமா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறதே.

எங்களுடைய அனுபவமும் வாதமும் தெளிவாக இருக்கின்றன. வேதி விவசாயத்தால் கிடைக்கும் உற்பத்தியையும் இயற்கை வேளாண் உற்பத்தியையும் ஒப்பிடுங்கள். அது எந்தப் பயிராக இருந்தாலும் சரி, உற்பத்தி அளவு ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஒரு வேளை பயிரிடப்படும் நிலத்தின் மண் வளம் வேதி விவசாயத்தால் சீரழிந்து இருந்தால், அதை மீட்பதற்கு நிச்சயம் 2-3 ஆண்டுகள் ஆகும். மண்ணில் இடப்பட்ட நஞ்சு நீக்கப்பட வேண்டுமில்லையா. அந்த இடைக்காலத்தில் 10-30 சதவீத உற்பத்தி குறையலாம். நேரடியாக நஞ்சை நீக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கே இந்த இழப்பு ஏற்படும். மாறாகப் பஞ்சகவ்யம், அமிர்தக்கரைசல் போன்றவற்றைப் பயன்படுத்தி மண்ணை மீட்டெடுக்கும்போது உற்பத்தி இழப்பு சொற்பமாகக் குறையும்.

அதனால் இயற்கை விவசாயம் எல்லா மக்களுக்கும் உணவளிக்க முடியாது என்ற வாதம் பொய். உற்பத்தி குறைவாக இருக்கும் என்பது முறையற்ற ஒரு வாதம்தான். சொல்லப் போனால், இயற்கையான ஊட்டம் கிடைப்பதால் இயற்கை விவசாயத்தில் சில நேரம் உற்பத்தி அதிகமாகக்கூட இருக்கும். எங்கள் அமைப்பில் உள்ள விவசாயிகளின் அனுபவங்கள் அதைத்தான் சொல்கின்றன.

இயற்கை விவசாயம் தரும் பலன் குறித்து நம்மைவிட மிக நன்றாக அறிந்த வேளாண் பல்கலைக்கழகங்களே இதைச் சொல்லியிருக்கின்றன. நமது வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள் வேதி விவசாயத்தையும், இயற்கை விவசாயத்தையும் ஒப்பிட்டுப் பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளன. அதில் இயற்கை விவசாயம் அதிக மகசூல் தருகிறது என்று ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வேதி விவசாய நிறுவனங்கள் செலுத்தும் செல்வாக்கால் இந்த ஆராய்ச்சிகள் பரவலாக வெளியிடப்படவில்லை. இந்த முடிவுகளை வெளியிட அரசு முன்வராமல் இருந்திருக்கிறது. இந்தப் போக்கு மிகவும் மோசமானது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆராய்ச்சி முடிவுகளைப் பெற்று Ecological Agriculture in India scientific evidence on positive impacts and successes என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்றைக்கும் இந்த நாட்டில் விவசாயிகள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதேநேரம் கார்ப்பரேட் நிறுவனங்கள், அதைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். அரசு கணக்கெடுப்புகளே இதைச் சொல்லிவிடும். இதைக் கருத்தில் கொள்ளாமல் பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் செல்வாக்குக்குத் தலைவணங்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது விவசாயத்தை அழிக்கக்கூடியது.

எல்லாவற்றிலும் தாராளமயம், சந்தைதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்று இந்த அரசு சொல்கிறது. அப்படியானால், விவசாயியின் நிலத்துக்கான விலையைச் சந்தையே நிர்ணயித்துக் கொள்ளட்டுமே. சந்தை விலை கிடைக்கும்பட்சத்தில் எதற்காக அதை அனுமதிக்காமல், இந்த அரசு குறைந்த விலைக்கு விவசாயியின் நிலத்தைப் பிடுங்கப் பார்க்கிறது?

கார்ப்பரேட் நிறுவனங்கள் - விவசாயத்தை ஒப்பிடுவோம். விவசாயி இந்த நாட்டு மக்களுக்கு உணவு தருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களையே தயாரிக்கின்றன. அதேபோல விவசாயம் எத்தனை பேருக்கு வேலை தருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலை தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களால் வேலை இழந்தோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு. இந்தியாவில் தற்போது செயல்படுத்தப்படும் தொழில் மாதிரி வேலைகளை அழிக்கக்கூடியது. இது வேலையற்ற வளர்ச்சியைத் தருகிறது.

உருவாக்கப்படும் தொழிற்சாலைகள் தானியங்கிமயமாக்கப்பட்ட, மிகக் குறைந்த வேலைகளை மட்டுமே தரக்கூடியவை. வெறும் நூற்றுக்கணக்கில் வேலைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். அதற்காகப் பிடுங்கப்பட்ட நிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலை இழக்கிறார்கள். சொந்தக் காலில் நின்றவர்கள் கூலி வேலைகளைத் தேடி நகரத்துக்குச் செல்கிறார்கள்.

கடந்த ஓராண்டில் பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை. விவசாயத்தையோ, அதன் முக்கியத்துவத்தையோ இந்த அரசு குறைந்தபட்சமாகக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய செயல்திட்டத்தில் விவசாயம் கடை நிலையில் இருக்கிறது. நேர்மாறாகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலத்தை அப்படியே எடுத்துக் கொடுக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. இது எதுவும் நல்லதற்கல்ல.

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைஇயற்கை விவசாயம்மானியம்மிச்சம்வேளாண் அறிஞர்கிளாட் ஆல்வாரஸ்நேர்காணல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author