

பண்டைக் காலம் தொட்டு வீட்டுக் கால்நடை வளர்ப்பில் முக்கியமானதாக இருப்பது கோழி வளர்ப்பு. மண்ணைக் கொத்தி வளமாக்குவதிலிருந்து, உணவுத் தட்டில் விருந்தாவதுவரை கோழியின் பயன்பாடு அதிகம்.
தற்போது கிராம மக்களிடையே கோழி வளர்க்கும் ஆர்வம் குறைந்துள்ளது. இதன் பலனாக முட்டை, கோழி இறைச்சி உண்பது குறைந்து கிராமப்புறங்களில் புரதச்சத்து குறைபாடும் அதிகரித்துவருகிறது.
கோழிகள் மூலம் வருமானமும், சத்துள்ள உணவுப் பொருட்களும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் வனராஜா, கிராமப்பிரியா என்ற கோழி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது கொல்லைப்புறக் கோழி வளர்ப்பில் ஒரு புதிய மாற்றத்தையும், கிராமவாசிகளுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அறிமுகம்
தரமான இறைச்சி, முட்டைகளைத் தரக்கூடிய வனராஜா, கிராமப்பிரியா கோழி இனங்களை ஹைதராபாத்தில் உள்ள கோழி திட்ட இயக்குநரகம் சமீபத்தில் உருவாக்கியது.
நாட்டுக் கோழிகளைப் போன்ற அனைத்து அம்சங்களுடனும், ஆனால் அவற்றைவிட கூடுதலாக முட்டையிடும் திறன், இறைச்சியைக் கொடுக்கக்கூடிய இந்தக் கோழிகள் விரைவில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கோழி விதைத் திட்டம் மூலம் அறிமுகமாக உள்ள இந்தக் கோழிகளை, ஒரு சில மாதங்களில் அனைவரும் பெறலாம் எனக் கோவை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டுக் கோழிகளுக்கு உள்ளதைப் போலக் கொல்லைப்புறங்களையே தீவன இடமாக மாற்றி, இந்தக் கோழிகளை வளர்க்கலாம். இதன் மூலம் குறைந்த செலவில் கிராமவாசிகளுக்கு வரப்பிரசாதமாக இத்திட்டம் இருக்கும்.
நல்ல லாபம்
கோழி விதை திட்ட ஆராய்ச்சியாளரும், கோவை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியருமான க. சிவக்குமார் கூறியதாவது:
புறக்கடையில் வளர்ப்பதற்கு என்றே உருவாக்கப்பட்டவை வனராஜா, கிராமப்பிரியா கோழிகள். இவை இரண்டுமே நாட்டுக் கோழிகளைப் போன்ற தோற்றம், உடல் வாகு, நோய் எதிர்ப்பு திறன், பழுப்பு நிற முட்டை, அதிக முட்டையிடும் திறன் கொண்டவை.
திட்டம் அறிமுகமானதும் முன்பே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்குக் குஞ்சுகளாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களில் பதிவு செய்து கோழிக் குஞ்சுகளைப் பெற முடியும். கடந்த ஒரு மாதமாகக் கோழிக் குஞ்சுகள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஆரோக்கிய உணவு
வனராஜா கோழிகள் ஒன்றரை வருடத்தில் 110 முட்டைகள்வரை இடும். கிராமப்பிரியா கோழி ஒன்றரை வருடத்தில் 200 முதல் 230 முட்டைகள்வரை இடக்கூடியது. அதேபோல இவை 6 மாதங்களில் சராசரியாக 2 கிலோ எடையைப் பெற்றுவிடுகின்றன. நல்ல, திடகாத்திரமான கோழிகள் விரைவில் இறைச்சிக்குத் தயாராகிவிடும்.
விவசாயிகள் மத்தியில் இந்தக் கோழி ரகங்கள் குறித்துப் புதிய இலக்கை நிர்ணயித்து, கடந்த ஒரு மாதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பதிவு செய்வது முடிந்தவுடன் கோழி வளர்ப்பு குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். கிராமங்களில் 10 முதல் 20 கோழிகளை வளர்க்கும்போது அதிக முட்டையும், இறைச்சியும் கிடைக்கும். அதை விற்றால் நல்ல லாபமும், ஆரோக்கியமான உணவும் கிடைக்கும் என்றார்.
ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பைத் தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் கோழி வளர்ப்பும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவக்குமார் தொடர்புக்கு - 0422-2669965