

என் மகனுடைய பிறந்த நாளைக் கொண்டாட வித்தியாசமான ஒரு இடத்துக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகே உள்ளது முத்துப் பேட்டை. 2004 சுனாமி பேரழிவைத் தடுத்து நிறுத்திய காட்டைப் பார்க்க வேண்டுமென என் மகன் ஆசைப்பட்டான். அதனால் அவனுடைய பிறந்தநாளின்போது இந்த இடத்துக்கு அழைத்துச் சென்றோம்.
வித்தியாச அழகு
பிச்சாவரத்தில் அலையாத்திக் காடுகள் இருந்தாலும் முத்துப்பேட்டையில்தான் அலையாத்தியின் பரப்பு அதிகம். அதிலும் முத்துப்பேட்டை அலையாத்தி திட்டுத் திட்டாகக் காட்சியளிக்கிறது. அதேநேரம் பிச்சாவரத்தில் மரத் தொகுதிகள் இடையே படகில் செல்லலாம். முத்துப்பேட்டையில் திட்டுகளின் வெளிப் பகுதியில் இருந்துதான் மரங்களைப் பார்க்க முடிகிறது.
படகில் நாங்கள் ஏறியவுடன் சிறிய வாய்க்கால் போலச் சென்ற கழிமுகப் பகுதி, ஓர் இடத்தில் சட்டென விரிந்தது. தண்ணீரில் வளரும் அலையாத்தித் தாவரங்களின் வேர்கள் தண்ணீருக்கு வெளியே சுவாசிக்க நீண்டிருந்த வித்தியாசமான சூழல் புதுவித அழகாக இருந்தது.
இளைப்பாற மரப்பாலம்
சுற்றிலும் அலையாத்தி மரங்களையே பார்க்க முடிந்தது. திட்டுத் திட்டாக அலையாத்தி மரங்களுக்கிடையே படகு சென்றது. நீர்க்காகம் ஒன்று எங்கள் படகோடு சேர்ந்து பறந்து வந்தது. படகில் பயணித்து அலையாத்திக் காடுகளின் அழகையும், பறவைகளையும், மீனவர்கள் மீன் பிடிப்பதையும் அலையாத்திக் காடுகள் கடலோடு சேரும் பகுதியையும் காணலாம்.
இளைப்பாற காட்டுக்கு இடையே மரப்பாலம் இருக்கிறது. அதில் நடந்து சென்று அலையாத்தி மரங்களை நெருக்கமாகப் பார்க்கலாம். ஆறு மணி நேரம் சுற்றிப் பார்த்தோம். மிகப் பெரிய காட்டுப் பகுதி என்பதால் முழுமையாகப் பார்க்க முடியவில்லை.
பறவைகள் கண்டோம்
அலையாத்திக் காடுகள் கோடிக் கரையில்தான் முடிகின்றன. கோடிக் கரைக்கு அருகே இருப்பதால் பருவகாலத்தில் வலசை பறவைகளையும், உள்நாட்டு பறவைகளையும் முத்துப் பேட்டையில் அதிகம் காண முடிந்தது. நாரை, கொக்கு, நீர்க்காகம் போன்றவற்றைப் பார்த்தோம்.
முத்துப்பேட்டைக்கு அருகிலேயே உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கும் நீர்ப் பறவைகளை நிறைய பார்க்கலாம்.
இயற்கை நேசம்
திரைப்படப் படப்பிடிப்புகள் அடிக்கடி நடைபெற்றுள்ள இடம் என்பதால் பிச்சாவரம் பற்றி நன்கு வெளியில் தெரிந்திருக்கிறது. ஆனால், முத்துப்பேட்டை பற்றி அவ்வளவு தெரியவில்லை. அழகாக இருப்பது மட்டுமில்லாமல், இந்த அலையாத்திக் காடுகள் சுனாமியைத் தடுத்திருப்பதை நினைக்கும்போது மனதில் பெருமிதம் தோன்றுகிறது.
நேரில் செல்லும்போது ஒரு பகுதியின் இயல்பை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. இயற்கையைப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் இது போன்ற இயற்கைச் சுற்றுலாவை அனைவரும் தேர்ந்தெடுக்கலாமே!
- பூம்புகார் எம். அம்சலெட்சுமி