

காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா தனது பொருளியல் கோட்பாடுகளை விளக்க வரும்போது, ஐந்து வகையான மாதிரிகளை முன்வைக்கிறார்.
ஒட்டுண்ணிப் பொருளியம், கொள்ளைப் பொருளியம், முனைவுப் பொருளியம், கூட்டிணக்கப் பொருளியம், தொண்டுப் பொருளியம் என்று வரிசைப்படுத்தி ஒவ்வொன்றின் தன்மைகளைக் குறிப்பிடுகிறார்.
உழைக்கும் மக்களிடம் இருந்து உறிஞ்சிக் கொழுக்கும் முறை, முதல் வகை. பல கொடுங்கோன்மை அரசுகள் இதைச் செய்துவந்தன. அதைப் போலவே கொள்ளைப் பொருளிய முறை என்பது மக்களிடம் கடும் வன்முறையைப் பயன்படுத்தி, அவர்களுடைய உழைப்பைச் சுரண்டுவது. இந்த இரண்டிலும் வன்முறை மிகக் கடுமையாக இருக்கும்.
மக்களாட்சி - பொதுவுடமை
முனைவுப் பொருளியம் என்பது சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு யார் ‘திறமையாளர்களோ', அவர்கள் செல்வத்தைத் திரட்டிக்கொள்ளும் முறை. பல மக்களாட்சி நாடுகளில் இது நடைமுறையாக உள்ளது.
கூட்டிணக்கப் பொருளியம் முற்றிலும் பகிர்வை அடிப்படையாகக் கொண்டது. தேனீக்கள் தனக்காக மட்டும் உழைக்காமல், தனது கூட்டமைப்பில் உள்ள யாவருக்காகவும் உழைக்கின்றன. பொதுவுடமைச் சிந்தனையாளர்கள் இம்மாதிரியான முறையையே கனவு கண்டார்கள். இறுதியாக உள்ளது பிறருக்காக உழைப்பது. தனது தேவைகளைக் குறைத்துக்கொள்வது. தன்னார்வ வறுமை இதன் அடிப்படை.
அறமே அடிப்படை
பொதுவாகக் காந்தி தனது தேவைகளைப் பெரிதும் குறைத்துக்கொண்டார். இந்தியாவின் கடைசி ஏழைக்கு மின்சாரம் கிடைத்த பின்பே, தனது குடிசைக்கு மின்சாரம் வர வேண்டும் என்றார். இந்த முறை மனித இனத்தின் பண்பாட்டு வளர்ச்சியான மிக உயர்ந்த சான்றாண்மையை அடிப்படையாகக் கொண்டது. வள்ளுவர் இதைச் செந்தண்மை என்று கூறுகிறார். உயர்ந்த விழுமியங்களை உள்ளடக்கியது.
பொருளை உருவாக்குபவர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் அறம் இருக்க வேண்டும். பட்டினப்பாலை என்ற சங்க இலக்கியம் 'கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது' என்று தனது கருத்தைப் பதிவு செய்கிறது. இப்படிப்பட்ட அறத்தை, விழுமியத்தைத்தான் வலியுறுத்துகிறார் குமரப்பா.
உள்ளூர்மயம்
இன்று மிகப் பரவலாகப் பேசப்படும் உணவுத் தொலைவு (Food mile) சூழலியல் மாசுபாட்டுக்கு காரணமாக இருப்பதாக அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது இந்தியாவில் விளைவிக்கப்படும் தேயிலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படும்போது, அதற்காகச் செலவிடப்படும் எரிபொருள் மாசுபாட்டை உருவாக்குகிறது.
எனவே, அந்தந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் பொருள்கள், அங்கேயே - உள்ளூரிலேயே நுகரப்பட வேண்டும். இந்தக் கருத்துக்கு முன்னோடி குமரப்பா என்றால் மிகையாகாது. உள்ளூர்மயம் என்பதை மிகவும் அழுத்தமாகப் பரிந்துரைத்தவர் குமரப்பா. இன்றைய உலகமயம் என்ற பன்னாட்டு வணிகமயத்துக்கு மாற்றாக, அவர் கூறிய உள்ளூர்மயம் (Localisation) மிகவும் இன்றியமையாதது.
இந்தியாவுக்கு உகந்தது
பரவல்மயப்பட்ட பொருளாக்க முறைதான் இந்தியாவுக்கு ஏற்றது என்பதை அறிவியல் ரீதியில் குமரப்பா விளக்கினார். செல்வம் = உழைப்பாளிகள் + முதலீடு (W (Wealth) = E (Employees) + M (Money)). செல்வ வளம் உழைப்பாளிகளின் உழைப்பாலும், அதில் போடப்படும் முதலீடு - கருவிகள், இதரவற்றால் உருவாவது. இந்தியாவைப் பொறுத்த அளவில் உழைப்பாளிகள் அதிகம். ஆனால், முதலீடு குறைவு. எனவே, திட்டமிடும்போது அதிக அளவில் உழைப்பாளிகள் ஈடுபடுத்தப்படுவதுடன், குறைந்த அளவு முதலீடும் எந்திரங்களும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இன்றைக்குப் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து சில ஆயிரம் பேருக்கு வேலை தரும் போக்கு உள்ளது. இதற்கு மாற்றாகச் சிற்றூர் தொழில்களை வளர்க்கக் குமரப்பா பெரும்பாடுபட்டார். அனைத்திந்தியச் சிற்றூர் தொழில்கள் இணையத்தை (All India Village Industries Association) ஏற்படுத்தி, அதன் செயலராகப் பணியாற்றினார். இதன் தலைவராகக் காந்தி இருந்தார். இதில் குமரப்பா எண்ணற்ற ஆராய்ச்சிகளைச் செய்து, பொருட்களை உருவாக்கினார். மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தாவில் மகன்வாடி என்ற இடத்தில் அவருடைய ஆய்வுகள் நடந்தன.
எல்லாமே உள்ளூர்
சேவா கிராம ஆசிரமத்தில் காந்திக்காகக் கட்டப்பட்ட வீட்டைவிடவும் மிக எளிமையாக, குறைந்த விலையில் (அன்றைய மதிப்புப்படி 150 ரூபாயில்) அவர் கட்டிக்கொண்ட வீடு இன்றைக்கும் உள்ளது. மண்ணெண்ணெய்க்கு மாற்றாகத் தாவர எண்ணெயில் எரியும் விளக்கு, எளிமையாக நெல் அரைக்கும் திரிகைகள், சைக்கிள் சக்கரத்தைப் போலப் பந்துபொறுத்திகள் (ball bearing) இணைக்கப்பட்ட மாட்டுவண்டி என்று எத்தனையோ கண்டுபிடிப்புகள். இதைத் தனது கிராம உத்யோக் பத்திரிகா இதழில் அவர் வெளியிட்டும் வந்தார். அவரது நூல்கள் யாவும் கையால் செய்யப்பட்ட தாளில் அச்சானது என்பதுடன், இன்றைய தாள்களின் தரத்துக்குச் சற்றும் குறைவின்றி அவை இருந்தன என்பதைப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com