Published : 01 Apr 2014 12:02 pm

Updated : 01 Apr 2014 12:02 pm

 

Published : 01 Apr 2014 12:02 PM
Last Updated : 01 Apr 2014 12:02 PM

இயற்கை அழிவு: அணி நிழற் காடு

காடுகளைக் காப்பாற்றுவது பற்றி இன்றைக்கு நாம் நிறைய பேசுகிறோம். அதற்குக் காரணம், பூமியின் உயிர்ப்புக்குக் காரணமாக இருக்கும் காடுகள், அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டதுதான். ஆனால், நமது பாரம்பரியம் மரங்களையும் காடுகளையும் போற்றியது மட்டுமில்லாமல், காடுகளைக் காக்க நமது முன்னோர் உயிர்த் தியாகமும் செய்துள்ளனர்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் இயற்கை வளம் நிறைந்த காட்டுப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் சமூகம், பொருளாதாரம் மேம்பட, அதற்கு ஆதாரமாக விளங்கும் பல்லுயிரிய (Biodiversity) உறைவிடமாகத் திகழும் காடுகள் முறையாகப் பேணப்பட வேண்டும். ஒரு நாட்டின் இயற்கை அரணாகவும், தட்ப வெப்பநிலையைச் சீர்செய்யும் சக்தியாகவும் காடுகளே திகழ்கின்றன. மண் அரிப்பு, மண் சரிவைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாப்பதுடன், நீர் சுழற்சியையும் பராமரித்துச் சூழலியலின் தரத்தைக் காத்து வருபவை காடுகளே. அதனால்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பெருந்தகை, “மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழற் காடும் உடையது அரண்” என்று காட்டின் பெருமையைப் பறைசாற்றியுள்ளார்.


மண்ணுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கி, வளமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கிவரும் காரணத்தால்தான் காடுகள் ‘அமுதசுரபி’ எனப் போற்றப்படுகின்றன. பல்வேறு உணவுப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும், மரங்களையும் வழங்குவதுடன் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களையும் தந்து, அதன்மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகின்றன.

ஆனால், காலப் போக்கில் பணபலம் படைத்தவர்களின் பேராசையாலும் சமூக விரோதச் சக்திகளாலும் காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டுவருகின்றன.

காடு நாள்

உயிரினங்களின் வாழ்வாதாரமாகத் திகழும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1971-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய வேளாண் மாநாட்டில் (European Confederation of Agriculture) கலந்துகொண்ட அறிஞர்கள் சிந்தித்தனர். விளைவாக, காட்டுவளத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அதே ஆண்டு ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (United Nations Food & Agriculture Organisation) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதியை உலகக் காடு நாளாகக் கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேறியது.

இந்த நாளில் சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்து செல்வதுடன், வசந்த காலத்தை வரவேற்பதாகவும் இந்த நாள் அமைகிறது. அத்துடன், இது வறட்சியான காலமாக இருந்தாலும், இந்தக் காலத்தில் தான் தாவர இனங்களிடையே அதிக வளர்ச்சி காணப்படுவதும் தனிச் சிறப்பு.

காடு காத்தவர்கள்

இந்தப் பின்னணியில் நம் நாட்டில் காடுகளைக் காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்தவர்கள், மரங்களின் மீது மாறாத பற்று கொண்டவர்களின் நீண்ட வரலாற்றை நினைவுகூர வேண்டும்.

கி.பி.1730-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ‘கெஜ்ரி’ கிராமத்தில் தான் வளர்த்த வன்னி மரங்களைக் காப்பதற்காக 363 பிஷ்னாய் மக்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். மரங்களைக் காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்த நிகழ்வு, உலகின் வேறு எந்த மூலையிலும் நடைபெறவில்லை. அதற்குக் காரணம், வறட்சியான ராஜஸ்தான் மாநிலத்தில் மரங்களே மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாரமாகத் திகழ்ந்ததுதான். அதனால்தான் அரசனின் ஆணையின்படி வன்னி மரங்களை வீரர்கள் வெட்ட முற்பட்டபோது, அவற்றைக் கட்டிப்பிடித்து அவர்கள் உயிர் நீத்தனர்.

அதேபோல 1974-ம் ஆண்டில் உத்தராகண்ட் மாநிலத்தில் சிப்கோ இயக்கம் தோன்றியது. ‘சிப்கோ’ என்றால் இந்தியில் ‘கட்டியணைப்பது’ என்று பொருள். கௌராதேவி என்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண் தலைமையில் 27 பெண்கள், ரேணி கிராமத்தில் ஆயிரக்கணக்கான மரங்களைக் கட்டியணைத்து காப்பாற்றினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் மரம் வெட்டுவதை, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி முழுமையாகத் தடை செய்தார். பின்னர் இந்த இயக்கம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா தலைமையில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது.

ஹியூகோ உட் (Hugo Wood) என்ற ஆங்கிலேய இந்திய வனப் பணி அலுவலர் (1870-1933), தான் உருவாக்கிய தேக்குமரக் காடுகளுக்கு இடையே தன் கல்லறையை உருவாக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். ஆனைமலை டாப் ஸ்லிப்பில் உள்ள அவரது கல்லறையிலே எழுதப்பட்டுள்ள வாசகங்கள், மரங்களின் மீது அவர் கொண்டிருந்த அழியாக் காதலை வெளிப்படுத்துகின்றன. "நீங்கள் என்னைக் காண வேண்டுமென்றால், சுற்றிலும் பாருங்கள்" என்ற வாசகம் அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லறையைச் சுற்றிலும் நெடிதுயர்ந்த தேக்கு மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் பிறந்து, இந்தியா வந்து இங்கே மரம் வளர்த்து, காடுகளைக் காக்கும் பணியில் ஈடுபட்ட ஓர் உன்னத ஆன்மாவின் உயர் பண்புகள், அவர் கல்லறையைக் காண்பவர்களின் கண்களைப் பனிக்கச் செய்கின்றன.

நிதர்சன நிலை

ஆனால், காடுகளின் இன்றைய நிலை என்ன என்று நினைத்துப் பார்க்கவேண்டும். உலகில் காடுகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பரப் பளவில் 23.4% காடுகளும் மரங்களும் உள்ளன.

ஒரு நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிகளே இயற்கை வளம் செறிந்த பகுதிகளாகவும், பல்லுயிரியம் நிறைந்த இடங்களாகவும் திகழ்கின்றன. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளும், வடகிழக்கு இமயமலைப் பகுதிகளும் காடுகள் செழித்துப் பல்லுயிரிய உறைவிடங்களாகத் திகழ்கின்றன. இங்கிருந்துதான் வற்றாத ஜீவநதிகள் உருவாகி இந்தியாவை வளம் கொழிக்கச் செய்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இயற்கைக் காடுகளின் பரப்பளவு 17.59%. ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 33% காடுகளாக இருக்க வேண்டும். அப்படிக் காடுகள் நிறைந்து இருந்தால்தான் உயிரினங்கள் நலம் பெறும்.

- வ.சுந்தரராஜு, இந்திய வனப் பணி முன்னாள் அலுவலர்
தொடர்புக்கு: sundarifs.raju@gmail.com
காடுகள்காடு காத்தவர்கள்காடுகளின் நிலைமை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x