பட்டுக்கூடு உற்பத்தியில் சாதனை: பொள்ளாச்சி தம்பதியின் புதுமை

பட்டுக்கூடு உற்பத்தியில் சாதனை: பொள்ளாச்சி தம்பதியின் புதுமை
Updated on
2 min read

விவசாயத்துக்குத் தொடர்பே இல்லாத பல தொழில்களில் இருந்துவிட்டு, கடந்த ஒரு வருடமாக மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் களம் இறங்கினார் பொள்ளாச்சியைச் சேர்ந்த சந்திரசேகர். இந்த ஒரு வருடத்தில், பட்டுப்புழு வளர்க்கப் புதிய முறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முன்னோடியாகவும் மாறியுள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் - தனபாக்கியம் தம்பதியர், முதல் தர பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்து வருகின்றனர் . சுழல் சந்திரிகை முறையைச் சற்று வித்தியாசமான முறையில் கையாண்டு ஒரே அளவுள்ள தரமான பட்டுக் கூடுகளை இவர்கள் உற்பத்தி செய்கின்றனர்.

புதிய முறை

பட்டுப்புழு வளர்ப்பு முறை குறித்துச் சந்திரசேகர் கூறியது:

“பட்டுப்புழு வளர்ப்பில் தட்பவெப்ப நிலையும், தீவனமும் மிக முக்கியம். பெரும் பாலானோர் நெட்ரிகா முறையில் பட்டுப்புழு வளர்க்கிறார்கள். ஆனால் அதில் ஒரே அளவான கூடுகள் கிடைக்காது. சிறுநீர்க் கூடுகளும், இரட்டைக் கூடுகளும் அதிகமாக இருக்கும்.

மல்பெரி இலைகளைத் தீவனமாகக் கொடுக்கும்போது ஈரப்பதம் அதிகமானால், அங்குச் சிறுநீர்க் கூடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலை மாற்றத்துக்கு ஏற்பக் காற்றோட்டம் இருப்பது அவசியம். ஆனால் நெட்ரிகா முறையில் அதற்கு வாய்ப்பில்லை. இதனால் ஒரே அளவிலான கூடுகள் கிடைக்காது.

ஒரே அளவு

தற்போது வந்துள்ள சுழல் சந்திரிகையில், ஒரே அளவான கூடுகள் கிடைக்கும். ஆனால், பட்டுப் புழுக்களை நாம்தான் ஒவ்வொன்றாக அதில் எடுத்துவிட வேண்டும். இதில் புழுக்கள் வீணாகப் போகவும், நோய்த் தாக்கவும் வாய்ப்புண்டு என்பதால் இரண்டு முறைகளையும் இணைத்துப் பட்டுப்புழு வளர்க்க ஆரம்பித்துள்ளோம். நான்கு தோலுரிப்புகள் முடிந்து, புழு பழுத்து வரும் நிலையில் கூடு கட்ட இடம் தேடும். அந்த நேரத்தில், சுழல் சந்திரிகையில் பயன்படும் கூடுகட்டும் அட்டைகளை, வளர்ப்புப் படுக்கைகளை ஒட்டி கட்டி தொங்க விடுகிறோம்.

அதிகப் பட்டுநூல்

தீவனத்தை உண்டு முடித்து, மேலே தொங்கும் அட்டைகளில் தங்களுக்கான இடத்தைத் தேர்வு செய்து புழுக்கள் தானாகவே கூடு கட்டத் தொடங்குகின்றன. தீவனம் வைக்கப்படும் வளர்ப்புப் படுக்கைக்கும், கூடுகட்டும் அட்டைக்கும் இடைவெளி கிடைக்கிறது. இதனால் கூடுகளின் இருபுறமும் நல்ல காற்றோட்டம் இருக்கும். இதனால் சிறுநீர்க் கூடுகளும், நோய்த் தாக்குதலும் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.

மேலும் நெட்ரிகாவில் இருப்பது போல, இந்த அட்டையில், கூடு கட்டுவதற்கு அதிக நூல் தேவையில்லை. ஒரு புழுவுக்கு நாற்புறமும் அட்டைகள் வைத்த அறை போன்று அமைப்பு கிடைப்பதால், பட்டு நூல் வீணாகாமல் கூடு கிடைக்கிறது. இதனால் கூடுகளின் எடை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு அறையும் தனித்தனியாக இருப்பதால், இரட்டைக் கூடுகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

சுழலும் சந்திரிகையில், வளர்ப்புப் படுக்கையிலிருந்து புழுக்களை எடுத்து நாம்தான் கூடுகட்டும் அட்டைகளில் விட வேண்டும். கூடுகளைப் பிரித்தெடுத்த பின் சுத்தம் செய்வதும் கடினம். ஆனால் நாங்கள் பயன்படுத்தும் முறையில், புழுக்கள் தானாகவே இடம் தேடிக் கூடு கட்டுவதால், எந்தச் சிரமமும் இல்லை. சுத்தம் செய்வதும் எளிது.

ஆறு நாளில் கூடு தயார்

இளம்புழு வளர்ப்பு மையத்திலிருந்து 9 நாள் கழித்துப் பட்டுப்புழுக்களை வாங்குகிறோம். நாள் ஒன்றுக்கு இரண்டு தீவனம் என்ற முறையில், 4-வது தோலுரிப்பு வரை சராசரியாக 12 தீவனம் கொடுக்கப்படுகிறது. குளிர் அதிகமிருந்தால் 2 தீவனம் அதிகமாகும். தீவனம் உண்பதை நிறுத்தி, புழு பழுக்கும்போது கூடு கட்ட இடம் தேடும்.

அப்போதுதான், அட்டைகளைக் கட்டி தொங்க விடுவோம். அதன் பின் அதிகபட்சம் 2 நாட்களில் கூடு கட்டிவிடும். அட்டைகளை வைத்த பிறகு ஆறு நாட்களில் கூடுகள் தயாராகி, சந்தைக்கே கொண்டு சென்றுவிடலாம்.

முன்னுதாரணம்

வழக்கமாக இருந்து வந்த சந்தை மதிப்பு கடந்த மூன்று மாதங்களாக வீழ்ச்சியடைந் துள்ளது. இருந்தாலும் மற்ற வளர்ப்பு முறைகளைவிட, இதில் தரமான, எடையுள்ள, ஒரே அளவிலான கூடுகள் கிடைப்பதால், முதல் தரத்தில் ஏலம் எடுத்துக்கொள்கிறார்கள். மற்றவைகளை விட கூடுதலான விலையும் கிடைக்கிறது. அதிக வேலை இருப்பதால் இந்த முறையைப் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை” என்கிறார்.

இவரது பட்டுப்புழு வளர்ப்பு முறை பொள்ளாச்சி பகுதியில் முன்னுதாரணமாக இருக்கிறது எனப் பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுழலும் சந்திரிகை முறையைச் சற்று மாற்றி, சோதனை முயற்சியைச் சாதனையாக்கியுள்ளது இந்தத் தம்பதி.

சந்திரசேகர் - தனபாக்கியம் தம்பதியைத் தொடர்புகொள்ள: 85084 74027

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in