சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமான ஊருதான்...

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமான ஊருதான்...
Updated on
2 min read

சுதந்திரத்தை விட மிக முக்கியமானது சுகாதாரம். இப்படிச் சொன்னவர், சுதந்திரத்துக்காக கடுமையாக போராடிய தேசத் தந்தை மகாத்மா காந்தி. தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்ததாலேயே அவர், சுகாதாரத்தினை சுதந்திரத்துக்கும் மேலாக ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார்.

இதன் அடிப்படையிலேயே, இந்தியாவை தூய்மையாகவும், சுகாதாரமிக்கதாவும் மாற்றும் நோக்கில், ‘ஸ்வச் பாரத்’ (தூய்மையான இந்தியா) என்னும் முழக்கத்தினை முன்வைத்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது மத்திய அரசு. பொதுமக்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் எந்தவொரு திட்டமும் வெற்றிபெறாது என்பதை உணர்ந்து, இதை நாடு தழுவிய இயக்கமாக நடத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இதைப் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடம் கொண்டு சேர்க்க, நம்மூர் கமலஹாசன் முதற்கொண்டு நாடு முழுவதும் உள்ள பல பிரபலங்களை மத்திய அரசே நேரடியாக தேர்ந்தெடுத்துள்ளது.

சொர்க்கமே என்றாலும்….

“சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா,” எனப் பெருமை பேசுவது ஒருபக்கம். ஆனால், வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளை நம்மூர் திரையரங்குகளில் பார்க்கும்போது, அதில் வரும் பளபளக்கும் சாலைகளையும், நகரினுள்ளே ஓடும் தேய்ம்ஸ் போன்ற அழகான நதிகளில் நீந்தும் படகுகளையும் பார்த்து, சென்னையுடன் ஒப்பிட்டு “அதுபோல் சிங்காரச் சென்னையாக நம்மூரும் மாறினால் எவ்வளவு அழகாயிருக்கும்?” என்ற சிந்தனை மனதில் ஒரு கணமாவது தோன்றி மறைவதை மறைக்கமுடியாது. ஆம். சிங்கப்பூர், டோக்யோ, நியூயார்க் போல் நம்மூரும் மாறினால் நன்றாகத் தானிருக்கும்.

அப்படி ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதற்கான முயற்சிகளை யார் மேற்கொள்வது? எல்லா கொள்கை முடிவுகளையும் எடுக்கவல்ல அதிகாரங்கள் படைத்த அரசியல்வாதிகளா? அரசியல்வாதிகள் வகுத்துத் தரும் திட்டங்களுக்கு உருவத்தைக் கொடுக்கும் அதிகாரிகளா? அரசாங்கமும், அரசு அதிகாரிகளும், வல்லுனர்களைக் கொண்டு வியூகங்கள் வகுத்து, கோடிகளைக் கொட்டி அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்க முன்வந்தாலும், பொதுமக்கள் முழுமனதோடு ஒத்துழைக்காதபோது அவை விழலுக்கு இழைத்த நீராய் வீணாகிப்போவது உறுதி. “நடைபாதையில் நடப்படும் மரக்கன்றுகளை எடுத்துக் கொள்வோம்.

அதை மாநகராட்சி ஊழியர்கள் நட்ட பிறகு, அதை கால்நடைகள் தின்றுவிட்டு போவதை, நமக்கென்ன என்ற விதத்தில் கண்டும் காணாமல் போகும் மனப்போக்கைச் சொல்லலாம். தன்னார்வலர்கள் முயற்சியெடுத்து நூற்றுக்கணக்கான செடிகளைக் கொண்டு போய் நடுகின்றனர். அப்பகுதிவாசிகளோ, அதை பாதுகாக்காமல் அலட்சியமாக இருப்பதையும் பார்க்கிறோம்,” என்கிறார் சமூகசேவகர் கே.ராமதாஸ்.

மாற்றம் யார் கையில்?

நமது நகரம் சிங்கார சென்னையாக மாறவேண்டும் என நினைக்கும் மக்கள் அதற்கான மாற்றங்களை தங்களிடமிருந்து தொடங்கினால் மட்டுமே நாம் விரும்பக் கூடிய எத்தகைய மாற்றமும் சாத்தியப்படும். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சென்னை நகரின் புகைப்படங்களில் சாலைகள், அகலமாகவும், சுத்தமாகவும் இருந்ததைப் பார்க்கமுடிகிறது.

விடுதலைக்குப் பிறகு, நகரத்தை நோக்கி மக்கள் வரத் தொடங்கவே, சென்னை நகரம் வெகு வேகமாக விரிவடைந்து, திருவள்ளூர் மற்றும் காஞ்சி மாவட்டங்களின் பல பகுதிகள் அதன் எல்லைக்குள் வந்துவிட்டன. அதனால், மக்கள்தொகையும், இடநெருக்கடியும் அதிகரித்து, சென்னை நகரம் திக்குமுக்காடிவருகிறது. அதனால், வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து புகைமாசு, தொழிற்சாலைகள் அதிகரிப்பால் நிலத்தடி நீர் மாசு, முறையான வடிகால் வசதியில்லாததால் சாக்கடையாக மாறிய கூவம், பக்கிங்காம், அடையாறு ஆறுகள், என நகரம் நரகமாக மாறிவருகிறது.

ஒரு நாளில் 5,200 டன் குப்பை

ஒரு நாளில் 4,500 டன் திடக்கழிவு மற்றும் 700 டன் கட்டிட இடிபாடுகள் என 5,200 டன் குப்பைகள் மலைபோல் குவிந்து வருகின்றன. அவற்றை முழுமையாக அகற்றி, அப்புறப்படுத்துவதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. பொதுமக்கள் ஒத்துழைத்தால் பல நூறு டன் திடக்கழிவை மறுசுழற்சி செய்யமுடியும். அதனால் குப்பைகள் குவிவதை பெருமளவு தடுக்கமுடியும். “குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்துக் கொடுங்கள்,” என மாநகராட்சி பல முறை அறிவித்தும், அதற்கு நகரவாசிகள் ஒத்துழைக்காததால், குப்பையை மறுசுழற்சி செய்யும் முயற்சி வெற்றி பெறாமல் போய்விட்டது. குப்பையைத் தரம் பிரித்துக் கொடுத்து, அவை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்பட்டால், கொடுங்கையூர், பெருங்குடி போன்ற குப்பை சேகரிக்கும் இடங்களில் டன் கணக்கில் குவியும் குப்பையின் அளவு கணிசமாகக் குறையும்.

தேவை மனமாற்றம்

இதுபோல், குப்பைகளைச் சேகரிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் குப்பையைப் போடாமல் அதைச் சுற்றியுள்ள இடங்களில் போடுவதால் அதை சேகரிப்போர், முறையாக சுத்தம் செய்ய முடிவதில்லை. எனவே, அரசு என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும், பொதுமக்களாகிய நாம் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் எத்தகைய முயற்சியும் வெற்றிபெறும்.

சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள், அங்கு இருக்கையில் அதிக அபராதத்துக்குப் பயந்து, தேடிச் சென்று குப்பைத் தொட்டியில் கழிவுகளையும், குப்பைகளையும் போடுகிறார்கள். ஆனால், அவர்கள் சென்னை திரும்பியதுமே விமான நிலைய வாயிலிலேயே குப்பைகளை போடத் தொடங்கிவிடுகின்றனர். வெளிநாட்டில் இருக்கும்போது குப்பையைத் தொட்டியில் போட்டவர், மறுநாள் சென்னை வந்ததுமே மாறிப்போகிறார். நம்முடைய நாடும், வெளிநாடுகளைப் போல் சுத்தமாக இருக்கவேண்டும் என்று மனதார நினைத்தால் நிச்சயம் அதை இங்கும் கடைப்பிடிக்கமுடியும். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

நாம் ஒருவர் தவறு செய்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்றெண்ணாமல், மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்குவது ஒன்றேதான் நிரந்தரமான மாற்றத்துக்கு வழிவகுக்கும். வீட்டைச் சொர்க்கம் போல் சுத்தமாக வைத்திருக்க நினைக்கிறோம். அதுபோல் பொதுஇடங்களும் மாறவேண்டாமா? அதற்கு நம்மாலான முயற்சிகளை நாம் செய்யவேண்டும். சென்னையை சிங்காரமாக மாற்றுவதற்குத் தேவையான மாற்றங்களை நம்மிடமிருந்து தொடங்குவோம். நாம் வசிக்கும் நகரம் சொர்க்கமா? நரகமா? என்பதை தீர்மானிக்கவேண்டியது நம் கைகளில்தான் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in