பாலாற்றைப் புனரமைக்கும் ‘பசுமை வேலூர்’

பாலாற்றைப் புனரமைக்கும் ‘பசுமை வேலூர்’
Updated on
2 min read

ஒரு காலத்தில் பழைய வடஆர்க்காடு மாவட்டத்தைத் தன் பெயருக்குப் பொருத்தமாகச் செழிக்க வைத்த பாலாறு, இன்றைக்குச் சுற்றுச்சூழல் சீரழிவால் பாழ்பட்டுக் கிடக்கிறது. தண்ணீருக்குப் பதிலாக வெறும் மணல் நிரம்பிக் காட்சியளிக்கும் பாலாற்றை மீட்கும் முயற்சியை ‘பசுமை வேலூர்’ இயக்கம் தொடங்கி உள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதியில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆண்டு முழுவதும் நீர் ஓடிய பாலாற்றில் காலப்போக்கில் நீர்வரத்து குறைந்தது. ஆக்கிரமிப்புகள், குப்பை கொட்டுவது, கழிவுநீர் கலப்பது, தோல் மற்றும் ரசாயனக் கழிவுகள், மணல் கொள்ளை எனப் பலமுனை தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இன்றைக்கு அழிவின் பிடியில் பாலாறு சிக்கித் திணறுகிறது.

புது முயற்சி

இந்தப் பின்னணியில் பாலாற்றைச் சீரழிவில் இருந்து மீட்கும் புதிய முயற்சியை ‘பசுமை வேலூர்’ இயக்கம் தொடங்கியுள்ளது. வேலூர் நகரில் பாலாற்றின் இரு கரைகளையும் தூய்மைப்படுத்தும் இந்தப் பணிக்கு ரூ.1.50 கோடி செலவிடப்பட உள்ளது.

‘‘பாலாற்றங்கரையில் பிறந்து வளர்ந்தவன் நான். எனது கண் எதிரே இந்த ஆறு பாழ்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. விவசாயம் செழித்த இந்தப் பூமி, இன்றைக்கு எதற்கும் அருகதையற்றதாக மாறிவருகிறது. இந்த மண்ணில் விவசாயம் மீண்டும் செழிக்க வேண்டும். அதற்குப் பாலாறு உயிர்பெற வேண்டும்’’ என்கிறார் ‘பசுமை வேலூர்’ இயக்கத்தின் வழிகாட்டிகளில் ஒருவரான வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன்.

ஆய்வும் திட்டமும்

வெயிலூர் என்று குறிப்பிடப்படும் வேலூரை மாற்றப் பசுமை வேலூர் இயக்கம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலூர் நகரின் முக்கிய சாலைகளில் நன்கு வளர்ந்த மரங்களைப் பராமரித்தது. பிறகு, 5 ஏக்கரில் நர்சரி அமைத்து மரக்கன்று வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

பாலாற்றை மீட்பதற்காகக் கடந்த ஓராண்டில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு அறிக்கையைப் பொதுப்பணித் துறை நீராதாரத் தலைமை பொறியாளருக்கு அனுப்பி, தூய்மை செய்யும் பணிக்கு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

பாலாற்றின் நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றப்பட உள்ளன. மாசடைந்த மணல் தூய்மைப்படுத்தப்பட உள்ளது. ஆற்றின் இரு கரைகளில் பழம் தரும் மரங்களான வேம்பு, நாவல், நாட்டு வாதுமை மரங்கள் நட்டு பூங்காவாக மாற்றவும், அடுத்த ஆண்டு பொங்கல் விழாவைப் பாலாற்றில் நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டு வருகிறது.

காடு வளர்ப்பு

பசுமை வேலூர் இயக்கத்துக்கு ரஜினி, கமல், விஜய், சூர்யா ரசிகர் மன்றங்கள் சார்பில் நிதி கிடைத்துள்ளது. வணிகர்கள், ரோட்டரி, லயன் சங்கங்களும் இந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் பாலாற்றில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

‘‘பசுமை வேலூர் இயக்கம் சார்பில் அடுத்தகட்டமாக வேலூரில் உள்ள மலைகளில் மரக்கன்று வளர்க்க வனத் துறை, வருவாய் துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். காடு வளர்ப்பு, விவசாய வளர்ச்சிக்குப் பாடுபடும் இயக்கமாக 'பசுமை வேலூர்' மாறும். பள்ளி, கல்லூரி மாணவர்களையும் இதில் இணைக்க உள்ளோம். ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், வாணியம்பாடி நகரங்களில் பாலாறு தூய்மை பணி விரைவில் நடைபெறும்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்த அமைப்பை நடத்தும் ஜி.வி. செல்வம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in