

தமிழிசை சவுந்தரராஜன், தலைவர், பாஜக, தமிழகம்
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலையேற்று சென்னையில் பல இடங்களில் தூய்மைப் பணியைத் தொடங்கியி ருக்கிறோம். நகரில் உள்ள 200 வார்டுகளிலும் ஒரு வாரகாலத்துக்கு துப்புரவுப் பணியை மேற்கொண்டோம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு பகுதியிலும் 2,3 தெருக்களைத் தேர்ந்தெடுத்து துப்புரவுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும்படியும் தொண்டர்களுக்குக் கூறியிருக்கிறோம்.
கலாச்சாரரீதியாக சுத்தத்துக்கு முக்கியத்துவம் தருபவர்களாக நாம் இருக்கிறோம். வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். அதுபோல், நமது நகரம் சுத்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிமும் ஏற்படவேண்டும். மக்கள் மனது வைத்தால் நகரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். குப்பைத் தொட்டிகளில் குப்பையைப்போடாமல் அதைச் சுற்றிலும் போடும் மனப்போக்கினை மாற்றிக்கொள்ளவேண்டும். அதுபோல், குறிப்பிட்ட இடங்களில் குப்பைகளை சேமித்து வைக்கும் நீலநிற ராட்சத்த் தொட்டிகள், ஈ,கொசு போன்றவற்றை ஈர்த்து நோய் பரப்பும் தொழிற்சாலைளைப் போல் ஆகிவிட்டன. அவற்றை அப்புறப்படுத்தவேண்டும்.
தெருக்களில் வைத்துள்ள சிறிய குப்பைத் தொட்டிகள் எப்போதும் நிரம்பிவழிந்துகொண்டிருப்பதால், தேவைப்படும் இடங்களில் அதிக அளவில் குப்பைத்தொட்டிகளை மாநகராட்சி வைக்கவேண்டும். பெயரளவில் தூய்மைப் பணியில் ஈடுபடாமல், சுகாதாரத்துக்கு மாநகராட்சி முதல் முக்கியத்துவத்தைத் தரவேண்டும். மக்களும் முனைப்புடன் ஒத்துழைத்தால் மட்டுமே சுத்தமான சென்னையை காணமுடியும்.
வீணை காயத்ரி, இசைக்கலைஞர், இசைப்பல்கலைக்கழக துணைவேந்தர்
சாலையில் எச்சில் துப்புவது போன்ற நடவடிக்கைகள் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதோடு, அருகில் இருப்போருக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் அவ்வழக்கத்தை நாம் தவிர்க்கவேண்டும். பொதுஇடங்களை கழிப்பறைகளாக மாற்றும் வழக்கையும் விட்டொழிக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் பொதுக் கழிப்பிடங்களைக் கட்டப்படவேண்டும்.
பசுமையான நகராக சென்னை மாறவேண்டும் என்பதே என் கனவு. அதற்கு நிறைய செடி, மரங்களை நடவேண்டும். மக்களும் தங்களது வீடுகளில் முடிந்தளவுக்கு செடி, மரங்களை வளர்க்கவேண்டும். அது நகரை குளுமையானதாகவும் மாற்றும். சென்னை நகரம் நீண்ட கடற்கரைக்குப் பெயர்பெற்றது. அவற்றை, வெளிநாடுகளில் உள்ளதுபோல் மேலும் அழகூட்டவேண்டும். அங்கு கலை, இசை நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடு செய்யலாம். நகரில் உள்ள பழமையான மதவழிபாட்டுத் தலங்களைப் புதுப்பிக்கவேண்டும். அது நகருக்கு மேலும் அழகு சேர்க்கும்.
எக்ஸ்னோரா எம்.பி. நிர்மல், சுற்றுச்சூழல் ஆர்வலர் சென்னை
நகரம் நமக்கு கிடைக்கப்பெற்றபோது, அடர்த்தியான வனப்பகுதிகள், ஏராளமான மரங்கள், அழகான ஆறுகள், கால்வாய் ஆகியவை இருந்தன. காலப்போக்கில், மக்கள் தொகை பெருக்கத்தாலும், நகரின் வளர்ச்சியாலும் அவற்றில் பெரும்பாலானவை அழிந்தோ, மாசுபட்டோ போய்விட்டன. ஏராளமான ஏரிகள் தூர்க்கப்பட்டு வீடுகளாக மாறிவிட்டன. சதுப்பு நிலம் என்பது சிறந்த நீராதாரம். 5,200 ஏக்கர் பரப்பு கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இன்று 500 ஏக்கராக சுருங்கி, குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது.
சிறந்த நீராதாரத்தைக் கொன்றுவிட்டோம். குடிநீரின் தரம் குறைந்துவிட்டது. மெரினாவில் மாடுகளைக் கழுவியும், கழிவுகளைக் கலந்தும் கலங்கப்படுத்திவருகிறோம். வடசென்னை வளர்ச்சியின்றி, ஆலைகள், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புறக்கணிக்கப்பட்டும் வருகிறது. தென்சென்னைக்கும், வடசென்னைக்கும் பெரிய இடைவெளி காணப்படுகிறது. நமக்கு சென்னை தரப்பட்டபோது, எப்படி அப்பழுக்கற்று இருந்ததோ அத்தகைய சென்னையை மீட்டெடுக்க நாம் போராடவேண்டும்.
குப்பைகளை சாலையில் போட்டு வீணாக்குகிறோம். அதனை எப்படி பயனுள்ள வகையில் உரமாக மாற்றுவது என்று சிந்தித்து, செயல்பட்டால் குப்பையால் ஏற்படும் மாசும் குறையும். குப்பை காசாகவும் மாறும்.
கலாமின் ‘சிங்காரச் சென்னை கனவு’
“வெளிநாடுகளில் நான் கண்டதைப்போல், சுத்தமான ஆறுகளும், ஏரிகளும் இணைக்கப்பட்டு, அதன் மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர் விநியோகத் திட்டங்களை சென்னை பெற்றிருக்கவேண்டும். மாசினை ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருள் (fossil fuel) பயன்பாட்டினைத் தவிர்த்து, உயிரிஎரிபொருள் மற்றும் சூரியமின்சக்தியால் வாகனங்கள் இயங்குவதைப் பார்க்கவேண்டும். பசுமைக்கட்டிடங்கள் அதிகம் ஏற்படுத்தப்படவேண்டும். சென்னையில் பாதசாரிகளுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் தனிப் பாதைகள் அமைக்கப்படவண்டும்,” என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், தனது ‘சிங்காரச் சென்னை’ வேட்கையை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.