

சாலையில் கண்டபடி குப்பைகளை வீசியெறியாமல் இருப்பது, புகை கக்கும் வாகனங்களை ஓட்டுவது போன்றவதைத் தவிர்த்து பஸ், ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வது போன்றவற்றை சுற்றுச்சூழல் மாசினைக் குறைக்கும் நடவடிக்கைகளாகப் பார்க்கிறோம். இவற்றை தவிர்த்து, மனிதர்கள் புழங்கும் கட்டிடங்களையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை கட்டிடங்களாக மாற்றும் நடவடிக்கைகள் வலுப்பெற்றுவருகின்றன.
சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்தும் நிலக்கரி வழியிலான அனல் மின்சார பயன்பாட்டினைக் குறைத்து, அதற்குப் பதிலாக சூரிய மின் சக்தி உள்ளிட்ட மாற்று வழி மின்சக்தியை அதிக அளவு பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு மட்டுமல்ல, பொதுமக்களிடமும், தனியார் நிறுவனங்களிடமும் ஏற்பட்டுவருகிறது. இப்பின்னணியில், பசுமைக் கட்டிடங்கள் எனப்படும் மின்சக்தியை சேமிக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினைக் குறைக்கக்கூடிய பசுமைக் கட்டிடங்களைக் கட்டும் போக்கு சமீபகாலங்களில் அதிகரித்துவருகிறது.
பசுமைக் கட்டிடமா?
பொதுவாக, கட்டிடங்களை, குறிப்பாக பெரிய அளவிலான அடுக்குமாடித் கட்டிடங்களைக் கட்டும்போது இயற்கை வளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். கட்டிமுடித்தபிறகு, அதிக மின்நுகர்வு மூலம் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கவும் வழியேற்படும். ஆனால், பசுமை கட்டிடங்களை உருவாக்கும் போதும் மற்றும் பயன்பாட்டுக்கு வந்தபிறகும், இயற்கை வளங்கள் பாதிப்பு என்பது மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும். இக்கட்டிங்களின் வடிவமைப்பின் நோக்கமானது, மாசினை உருவாக்கும் அனல்மின்சாரம் உள்ளிட்ட மரபுசார் மின் சக்திப் பயன்பாட்டினை குறைப்பது உள்ளிட்ட இயற்கைச் சூழலை பாதிக்காத அம்சங்களை உள்ளடக்கியதாகும். உடையதாகும். கட்டுமானத்தின்போதும், அதற்குப்பிறகும், சுழற்சி, மறுசுழற்சி முலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவதே இதன் முக்கிய அம்சம்.
பசுமைக் கட்டிடங்களுக்கான தரத்தை நிர்ணயிக்கும் தனியார் அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. அது LEED என்னும் தரச்சான்றிதழை வழங்கிவருகிறது. இந்தியாவில் கட்டிடங்களுக்கு பசுமை கட்டிடம் எனச் சான்றளிக்கும் அதிகாரத்தினை அதனிடமிருந்து இந்திய தொழிலகக் கூட்டமைப்பு பெற்றிருக்கிறது. இதுதவிர, GRIHA என்ற தரச்சான்றிதழை, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வழங்கி வருகிறது. இதுதவிர, மூன்றாவதாக, கட்டிடத்தின் மின்சிக்கன அம்சங்களைப் பொருத்து BEE என்ற அமைப்பும் பசுமை கட்டிடத்துக்கான தரச்சான்றிதழை வழங்கிவருகிறது.
புதுப்பிக்கபடக்கூடாத (நிலக்கரி..) ஆற்றல் மீதான சார்புத் தன்மையை குறைக்கவும், மற்றும் உபயோகிக்கப்படும் மரபுசார் மின்ஆற்றலை திறம்படப் பயன்படுத்தவும் பசுமைக் கட்டிடங்கள் உதவுகின்றன. தவிரவும், சுழற்சி மற்றும் மறுசுழற்சி செய்தல், புதுபிக்கவல்ல ஆற்றலை அதிகம் பயன்படுத்துவதும் இக்கட்டிடங்களின் முக்கியம் அம்சம்.
மதிப்பிடப்படும் முறை?
கட்டிடம் கட்டுவதற்குத் தேர்வு செய்யப்படும் இடம், வெளிப்புறத் தோற்றம், அதிகத் திறன் வாய்ந்த இடுபொருட்கள் மற்றும் கட்டுமான முறைகளை பயன்படுத்துவது, கட்டும் இடத்திலேயே கிடைக்கக்கூடிய ஆதாரங்களைச் சிறப்பாக பயன்படுத்துவது, சூரியஒளி அதிகம் புகும்தன்மை, மின்விசிறி, குளிர்சாதனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான காற்றோட்ட வசதி, குறைந்த ஆற்றலில் இயங்கும் மின்விளக்குகள், நீர் மேலாண்மை, மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி போன்ற பொருட்களைப் பயன்படுத்துதல், சூழ்நிலையை ஒத்த நிலையான கட்டிடப் பொருள்களை தேர்வு செய்தல் (அதிக முறை சுழற்சி செய்தல், குறைந்த உமிழ்வு கொண்ட வேகமாக புதுப்பிக்கவல்ல ஆற்றல் )
போன்ற பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பசுமைக் கட்டிடத்துக்கான சான்று வழங்கப்படுகிறது. அதனை அவ்வப்போது குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் புதுப்பித்துக் வரவேண்டும் என்பதும் கட்டாயம்.
சென்னையில் அதிகம்
நாட்டில் அதிக அளவிலான பசுமைக் கட்டிடங்களைக் கொண்ட நகரமாக சென்னை விளங்கி வருகிறது. சென்னையில் சுமார் 50 பெரிய கட்டிடங்கள் பசுமைக் கட்டிடங்களுக்கான சான்றிதழைப் பெற்றுள்ளன. அண்ணா நூற்றாண்டுவிழா நூலகம், புதிய சட்டப்பேரவை வளாகம் (அரசினர் பல்நோக்கு மருத்துவமனை) ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க், ஆழ்வார்பேட்டையில் உள்ள மேனன் எடர்னிட்டி, ஆகியவை நகரில் இருக்கும் பசுமைக் கட்டிடங்களுல் சில.
தரச்சான்றிதழ் வாங்கித்தான் பசுமைக் கட்டிடங்களை கட்டவேண்டுமா என்ன? நமது வீட்டையும் அதுபோல் மாற்றி, நகரின் சுற்றுச்சூழல் நலனுக்கு நம்மால் ஆனதைச் செய்வோம்.