

அந்தத் தோட்டத்துக்குள் நுழைந்தவுடனேயே ஒரு பக்கம் வெண்டை, கத்தரி, அவரை, கொத்தவரங்காய், பீன்ஸ், பாகற்காய், சுரைக்காய், புடலை, கோவைக்காய், தக்காளி, முள்ளங்கி, வாழைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், மிளகாய் என காய்கறிப் பயிர்கள் செழித்து விளைந்துள்ளன. மலைக் காய்கறிகள் எனப்படும் காலிபிளவர், கேரட்கூட அந்தத் தோட்டத்தில் விளைகின்றன.
மற்றொரு பக்கம் அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தவசிக் கீரை, அகத்தி, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளி, முருங்கைக் கீரை, முடக்கத்தான், தூதுவளை, வல்லாரை, வேளைக்கீரை எனக் கிட்டதட்ட எல்லாக் கீரை வகைகளுமே கண்களுக்குக் குளிர்ச்சியாய் வளர்ந்துள்ளன.
இன்னொரு புறம் மரத் தோட்டமாகக் காட்சியளிக்கிறது. அப்பகுதியில் மா, பலா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, வாழை எனப் பழ மரங்கள் நூற்றுக்கணக்கில் நிறைந்திருக்கின்றன. அரிசி, உளுந்து, பச்சைப் பயறு போன்ற உணவு தானியங்களும் அங்கு உற்பத்தியாகின்றன.
இவ்வளவு உணவுப் பொருட்களை விளைவிக்கும் இந்தத் தோட்டத்துக்கு இரண்டு முக்கியச் சிறப்புகள் உண்டு. செயற்கை உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ அறவே பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறையில் உற்பத்தி நடைபெறுவது முதல் சிறப்பு. அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் தோட்டத்தில், அவருடைய நேரடி மேற்பார்வையில் இந்த இயற்கை சாகுபடி நடைபெறுகிறது என்பது மற்றொரு சிறப்பு.
நஞ்சில்லா உணவு
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தோட்டத்தில்தான் இந்த இயற்கை வேளாண்மை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. திண்டிவனம் பகுதியில் திரும்பும் திசையெல்லாம் வண்ண வண்ணக் கொடிகளும், குடைகளும் நடப்பட்டு விளைநிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விற்பனைக்காக காத்துக் கிடக்க, தைலாபுரம் தோட்டத்தில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு வகை பயிர்கள் ஒரே இடத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன.
தைலாபுரத்தில் உள்ள தனது குடும்பம், திண்டிவனத்தில் உள்ள மகள் குடும்பம், சென்னையில் உள்ள மற்றொரு மகள் குடும்பம், சென்னையில் வசிக்கும் மகன் அன்புமணி குடும்பம் எனத் தனது குடும்ப உறவுகள் அனைவரது உடல்நலனும் இந்தத் தோட்டத்தின் விளைபொருள்களால்தான் பாதுகாக்கப்படுகின்றன என்பதைப் பெருமிதத்துடன் கூறுகிறார் டாக்டர் ராமதாஸ். அரிசி, காய்கறிகள் உட்பட தைலாபுரம் தோட்டத்தில் விளையும் நஞ்சில்லா உணவு வகைகள்தான் இவர்கள் அனைவரது குடும்பங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
தைலாபுரம் தோட்டத்தில் சுமார் 30 ஆண்டுகளாக இயற்கை சாகுபடி முறையில் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்கிறார் ராமதாஸ்.
உற்சாக விவசாயம்
பொங்கல் கொண்டாட்டத்துக்காக தைலாபுரம் தோட்டம் சுறுசுறுப்பாகத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், தனது தோட்டத்தின் இயற்கை வேளாண்மை சாகுபடி பற்றி உற்சாகமாக விவரித்தார் ராமதாஸ்.
“திண்டிவனத்தில் முழு நேர மருத்துவத் தொழிலில் ஈடுபட்டிருந்த 1974-ம் ஆண்டில் தைலாபுரத்தில் 25 ஏக்கர் நிலம் வாங்கினேன். அப்போது கரடு முரடாக இருந்த அந்த நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பண்படுத்தினேன். அப்போது திண்டிவனத்திலிருந்து தினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடுவேன். காலை 10 மணிவரை நிலத்தை சமப்படுத்துவது, உழுவது, பண்படுத்திய நிலத்தில் பயிர் வைப்பது எனப் பல வேலைகளில் நானே ஈடுபடுவேன். அதற்குப் பிறகு திண்டிவனம் புறப்பட்டுச் சென்று, மருத்துவத் தொழிலைப் பார்ப்பேன். பத்தாண்டுகளுக்கு முன்பு எனது மருத்துவமனையைத் திண்டிவனத்தில் உள்ள எனது மருமகனிடம் ஒப்படைத்துவிட்டு, தைலாபுரம் தோட்டத்திலேயே வீடு கட்டி இங்கேயே நிரந்தரமாகக் குடியேறிவிட்டேன். இங்கு நடைபெறும் ஒவ்வொரு வேளாண் நடவடிக்கையிலும் நேரடியாக நானே ஈடுபடுகிறேன்.
தனி ருசி
தொடக்கத்திலிருந்தே ரசாயன உரங்கள் எதுவும் பயன்படுத்தாமல், தொழு உரம் மற்றும் இலை தழைகளைப் பயன்படுத்தி மட்டுமே சாகுபடி செய்துவருகிறேன். இயற்கை சாகுபடிக்கான நம்மாழ்வாரின் இயக்கம் தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு எங்கள் தோட்டத்திலும் மண்புழு உரம், பஞ்சகவ்யம் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். வேப்பிலை, வசம்பு, பூண்டு போன்றவற்றை அரைத்து, தண்ணீரில் ஊற வைத்து, அந்தக் கரைசலைப் பயிர்களில் தெளிக்கிறோம். இது சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகிறது. இவ்வாறு நஞ்சான ரசாயனம் எதுவுமின்றி எங்கள் தோட்டத்தில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களின் ருசியே தனி ருசிதான். இந்த ருசி கடைகளில் விற்கப்படும் எந்த உணவுப் பொருளிலும் கிடைக்காது” என்று இயற்கை வேளாண்மை விளைபொருள்களின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போனார்.
பூச்சிக்கொல்லி ஆபத்து
நம் நாட்டின் பெரும்பகுதி மக்கள் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களைத்தானே சாப்பிடுகின்றனர் எனக் கேட்டபோது, தன் பெரும் கவலையை வெளிப்படுத்தினார் ராமதாஸ்.
“ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் வயல்களில் விளையும் உணவு வகைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. உலகம் முழுவதும் கொடிய விஷமாகக் கருதித் தடை செய்யப்பட்டுள்ள 12 வகையான பூச்சிக்கொல்லிகள் நம் நாட்டில் மட்டும் சுதந்திரமாக விற்பனை செய்யப்படுகின்றன. அந்தக் கொடிய விஷ மருந்துகளை நம்மூர் விவசாயிகள் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர்.
உதாரணமாக, சென்னை மாநகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலர் கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்கள் பிற நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு கொடிய விஷத்தைப் பூச்சிக்கொல்லி மருந்தாகத் தெளிக்கின்றனர். அந்தக் கீரை பார்ப்பதற்குப் பச்சைப் பசேலென இருக்கும். ஆனால், அந்தக் கீரையைச் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் ஏராளம். இதுபோலவே பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரம் பயன்படுத்தி உற்பத்தி ஆகும் என நஞ்சு கலந்த உணவையே பெரும்பாலோர் உண்கின்றனர்.
இந்தக் கொடிய சூழலிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை நமது நாட்டிலும் தடை செய்ய வேண்டியது முதல் கடமை. அவற்றையும் மீறி அந்தக் பூச்சிக்கொல்லிகளை விற்போரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
ஊக்கம் தேவை
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு அதிக மானியம் வழங்குவதோடு, சரியான சந்தை வாய்ப்பையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். நாட்டுப் பசு, எருமை மாடு வாங்கவும், வளர்க்கவும் விவசாயிகளுக்கு அரசு உதவிகளை செய்ய வேண்டும்.
இயற்கை வேளாண்மையின் மகத்துவம் பற்றி நம்மாழ்வார் நடத்திய பிரச்சாரம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நமது விவசாயிகள் மத்தியில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
இயற்கை வேளாண்மை என்பது மக்களின் உடல்நலத்தோடு தொடர்புடையது. நீடித்த வேளாண்மை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது. இதை உணர்ந்த காரணத்தால்தான் தொடக்கத்திலிருந்தே இயற்கை விவசாயத்தில் நான் அதிக ஈடுபாடு காட்டி வருகிறேன். இயற்கை விவசாயத்தை பரவலாக்க மத்திய, மாநில அரசுகளும் முன்வர வேண்டும்" என்றார்.
முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் தலைநகர் சென்னையில் குடியேறி இருக்கும்போது, தைலாபுரம் என்ற கிராமத்திலிருந்து அரசியல் நடத்திவருகிறார் டாக்டர் ராமதாஸ். இந்த விஷயத்தில் மற்ற அரசியல்வாதிகளுக்கு முன்னோடியாகவே திகழ்கிறார் ராமதாஸ்.
தொடர்புக்கு: devadasan.v@thehindutamil.co.in