

'மடி விதையை விடப் பிடி விதை முளைக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. மடியில் இருக்கும் விதையை எடுத்து விதைப்பதைவிட, கைப்பிடியில் இருக்கும் விதை உடனடியாகப் பயன் தரும். அதாவது, உரிய நேரத்தில் எவ்விதத் தடையும் இல்லாமல் விதை கிடைக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
ஆனால், நமது ஆட்சியாளர்கள் விதைக்கான இறையாண்மையை இழந்துவிடத் தயாராகிவருவது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. அந்நிய நேரடி முதலீடு என்ற ஒரே கண்ணாடியைக் கொண்டு எல்லாவற்றையும் பார்க்கின்றனர்.
அமைச்சரின் பார்வை
அண்மையில் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். மரபீனி மாற்ற விதைகளை (Genetically modified seeds) எதிர்ப்பது முறையல்ல என்றும், அப்படிச் செய்வது அறிவியலுக்கு எதிரானது என்றும் அதில் கூறியுள்ளார். நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம், கத்தரி, கடுகு, உருளைக்கிழங்கு, கரும்பு, கொண்டைக்கடலை போன்ற மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் கள ஆய்வுக்கு அனுமதி அளிக்க அவர் முனைந்துள்ளார். ஆனால் பல மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று.
(ஈன் என்ற சொல் ஆங்கிலத்தின் Gene என்று மாறும், இதற்கு ஈனுதல் என்று பெயர். 'ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும்' என்பது திருக்குறள். Generator என்றால் மின்சாரத்தை ஈனுவது என்று பொருள். மரபுக் கூறுகளை ஈனுவதால், ஜீனை மரபீனி என்று அழைக்கிறோம். மரபணு என்று கூறுவது பொருள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது, அணு என்றால் atom என்று பொருளாவதையும் கவனிக்க வேண்டும்)
மரபீனி மாற்ற விதைகள் முற்றிலும் வணிக நோக்கத்துக்காகப் பன்னாட்டு கும்பணிகளின் அந்நிய நேரடி முதலீட்டைக் குறிவைத்துக் களம் இறக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்திய விதைச் சந்தையும் வேளாண்மை இறையாண்மையும் காவு வாங்கப்படும்.
பொறுக்கு விதைகள்
விதைகளைப் பொறுத்த அளவில் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அவை அடங்கும். முதலில் பொறுக்கு விதைகள் (selection breeds) இவை காலங்காலமாக உழவர்களிடமிருந்து வருபவை. பல்லாயிரம் ஆண்டுகள், பல பருவங்கள், பல பூச்சிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு, உழவர்களால் தேர்வு செய்யப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பவை.
இவை அந்தந்த மண்ணுக்கேற்ற வகையில் பொருந்தி இருப்பவை. வறட்சியைத் தாங்குபவை, நோய் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவை. மீண்டும் மீண்டும் முளைக்கும் திறன் கொண்டவை மட்டுமல்லாது, விளைச்சலையும் முறையாகக் கொடுப்பவை. உழவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறப்பு கொண்டவை.
ஒட்டு விதைகள்
அடுத்தது கலப்பின விதைகள் எனப்படும் ஒட்டு விதைகள். இவை வீரிய விதைகள் என்று அறிமுகம் செய்யப்பட்டவை. ஆனால், நிஜத்தில் சோதா விதைகள். இவற்றுக்கு வறட்சியைத் தாங்கும் திறன் குறைவு, நோய் எதிர்ப்பாற்றலும் குறைவு. விளைச்சலை மட்டுமே கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றைப் பெரும்பாலும் கும்பணிகள் அல்லது அரசு நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இவை மீண்டும் முளைக்கும், ஆனால் முந்தைய அளவுக்கு விளைச்சல் தராது. இவை உழவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இவற்றின் விலை அதிகம். எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ தக்காளி வீரிய விதையின் விலை ஏறத்தாழ 40,000 ரூபாய்! மீண்டும் மீண்டும் சந்தைக்குச் சென்று விதையை வாங்கி வர வேண்டும். என்ன ஒரு தந்திரம்!
மரபீனி மாற்ற விதைகள்
அடுத்தது, கும்பணிகளும் அவர்களுக்கு ஆதரவான சில அறிவியலாளர்களும், ஆளும் ஆட்சியர்களில் சிலரும் இப்போது அறிமுகப்படுத்த முனையும் மரபீனி மாற்ற விதைகள். இவை இரண்டு பயிர்களுக்கு இடையில் கலப்பு செய்யப்பட்டவையல்ல, ஒரு பயிரையும், ஒரு நுண்ணுயிரியின் மரபீனியையும் இணைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றைப் பெரும் பன்னாட்டு கும்பணிகள் மட்டுமே தயாரிக்கின்றன.
அரசுகள்கூட இந்த விதைகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில், அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் (டங்கல் வழங்கிய கொடை!) அவற்றை முழுமையாகக் கும்பணிகள் கட்டுப்படுத்துகின்றன. இவை மீண்டும் முளைக்கும் திறன் அற்றவை. அதனால், விதைக்கு உழவர்கள் மீண்டும் மீண்டும் கும்பணிகளையே எதிர்பார்த்து இருக்க வேண்டும். விலையும் மிக அதிகம்.
கட்டுரையாசிரியர்,
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com