

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ஏ.சண்முகானந்தம், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், எழுத்தாளர். ஒளிப்படக் கலையைக் கற்றுக்கொண்ட காலத்தில் இருந்து பூச்சிகளைப் படமெடுப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.
மீனாட்சி வெங்கடராமன் எழுதிய A Concise Field Guide to Indian Insects, Arachnids என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இவர் எடுத்த பூச்சிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய 'தமிழகத்தின் இரவாடிகள்: ஓர் அறிமுகம்' (தடாகம் வெளியீடு) என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பல்லுயிரிய பாதுகாப்பு நிறுவனம், பெலிகன் ஃபோட்டோ கிளப் உள்ளிட்ட அமைப்புகளில் தீவிரமாக இயங்கிவருகிறார்.
"பூச்சிகளை நான் படமெடுப்பதற்கு முக்கியக் காரணம், உயிரினங்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்கூட, பூச்சிகள் மீது அதிகக் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான். எடுத்துக்காட்டாகப் பல பூச்சிகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் இல்லை அல்லது பழைய பெயர்கள் வழக்கற்றுப் போய்விட்டன. 500 வகை வண்ணத்துப்பூச்சிகள் நம்மிடையே இருந்தாலும், அவற்றில் பலவற்றுக்குத் தமிழ் பெயர் என்ன என்பது தெரியாமலே இருக்கிறது" என்று தன் ஆதங்கத்தை முன்வைக்கிறார். பூச்சிகளின் தமிழ்ப் பெயர்களைக் கண்டறியும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.