உலகுக்கு உயிர் தரும் அமுதசுரபிகள்

உலகுக்கு உயிர் தரும் அமுதசுரபிகள்
Updated on
1 min read

நீரும் நிலமும் சேர்கிற இடங்கள் அனைத்தும் சதுப்பு நிலங்களே. ஊருணி, குளம், குட்டை, ஏரி, கண்மாய், அணை, கழிமுகம், கடலோரம், கடற்கரை, முகத்துவாரம், சதுப்பளம், உப்பளம், காயல், சேறும் சகதியுமான ஈரமான நிலம் ஆகிய எல்லாமே சதுப்புநிலங்கள் அல்லது நீர்நிலைகள் எனப்படுகின்றன.

தண்ணீர் கோட்டைகள்

சதுப்புநிலங்கள்தான் நாம் குடிக்கும் குடிநீருக்கான ஊற்றுக்கண்ணாக, வெள்ளப் பெருக்கை தாங்கிக்கொள்ளும் இயற்கைச் சுனையாக, கடலரிப்பையும் புயலையும் தடுத்து ஆட்கொள்ளும் இடமாகவும் பல்லுயிர்களின் புகலிடமாக, மனதுக்கு மகிழ்ச்சி தரும் இடமாக உள்ளன.

ஆழிப் பேரலை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் பாதிப்பை இவை குறைக்கின்றன. சென்னையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

சதுப்புநில நாள்

1971-ல் காஸ்பியன் கடல் பகுதியில் ஈரான் நாட்டின் ராம்சர் நகரத்தில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்புநிலங்கள், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து பேசினர். அந்தக் கூட்டம் பிப்ரவரி 2-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அந்த நாளே உலக சதுப்புநில நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா உட்பட 168 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு உள்ளன.

உலகில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த 2,000 சதுப்புநிலங்கள் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியாவில் 26 இடங்கள் ராம்சர் தகுதி பெற்றுள்ளன. அதில் தமிழகத்தின் கோடிக்கரை, பழவேற்காடு அடங்கும்.

உயிர் நீர்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள் வீட்டு மனைகளாகவும், குப்பை கொட்டும் இடமாகவும், தொழிற்சாலை கழிவுகளைக் கலக்கும் இடமாகவும், பேருந்து நிலையமாகவும், வணிக வளாகங்களாகவும் மாறுவதைத் தடுக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலம் இப்படித்தான் பெருமளவு அழிக்கப்பட்டது. வேடந்தாங்கல், இன்றைக்கு அழிந்து கொண்டிருக்கிறது.

சதுப்புநிலங்களின் அழிவு, நாளைக்கு நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் ஆதாரத்தை முற்றிலும் சிதைத்துவிடும். இதனால் எதிர்காலத்தில் தண்ணீருக்கு திண்டாடும் நிலையும், பஞ்சத்தால் வாடும் நிலையும் மோசமாக ஏற்படலாம். நன்னீர் ஆதாரங்களை ஆக்கிரமிப்பதற்கு முன்னதாக, அழிக்கப்படுவதற்கு முன்னதாக இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

ஏனென்றால், நன்னீர்தான் இந்தப் பூவுலகை உயிரோடு வைத்திருக்கிறது.

உலக சதுப்புநில நாள்: பிப். 2

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in