

நவீன வாழ்க்கையில் நமது பெரும்பாலான செயல்பாடுகள் மின்சாரத்தைச் சார்ந்தே உள்ளன. ஆனால், மின்சாரத் தயாரிப்புக்காக நாம் கொடுக்கும் விலையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இப்படி நமது உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கப்போகும் திட்டங்களுள் ஒன்றாகச் சென்னை அருகேயுள்ள செய்யூரில் நிறுவப்பட உள்ள அனல்மின் நிலையம் கருதப்படுகிறது.
சென்னை -புதுச்சேரி சாலையில் மதுராந்தகம் அருகேயுள்ள செய்யூரில் 4,000 மெகாவாட் திறன்கொண்ட இந்த மாபெரும் அனல்மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அனல் மின் நிலையத்துக்கு கொண்டுவரப்படவுள்ள லட்சக்கணக்கான டன் நிலக்கரியை இறக்க, துறைமுகமும் கட்டப்பட உள்ளது. இந்தத் துறைமுகம் பனையூர் பெரியகுப்பம், பனையூர் சின்னக்குப்பம் மீனவக் கிராமங்களும் இடையே அமைக்கப்பட உள்ளது.
இயற்கை வளம், விவசாய வளம், மீன் வளம் போன்றவை நிரம்பிய செய்யூரின் இன்றைய நிலைமை என்ன? அங்கே அமைக்கப்பட உள்ள அனல்மின் நிலையம் எப்படிப்பட்ட ஆபத்துகளை உருவாக்கும் என்பதைக் காட்சிமொழியில், சட்டென்று பிடிபடுவது போலச் சொல்கிறது தி அதர் மீடியா வெளியிட்டுள்ள 'கரண்ட் அஃபேர்ஸ்' என்ற ஆவணப் படம்.
இந்த ஆவணப் படத்துக்கான பிரதியை எழுதியிருப்பவர் ஜெனி டாலி. இதற்கான ஆராய்ச்சிப் பணியில் கே.சரவணன், ஸ்வேதா நாராயண், நித்தியானந்த் ஜெயராமன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இயக்கம் அனுஷ்கா மீனாட்சி, ஈஸ்வர் ஸ்ரீகுமார்.
இயற்கை வளம்
ஆவணப் படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் தாவரங்கள், வேளாண் விளைபொருள்கள், மீன் வகைகள் செய்யூரின் இயற்கை வளத்தைப் பறைசாற்றுகின்றன. இப்பகுதி மீன்வளம், கடல்வளமும் நிரம்பியிருப்பதற்குக் காரணம் ஆலம்பரை, முதலியார்குப்பம் என இரண்டு முகத்துவாரங்கள் இப்பகுதியைச் சூழ்ந்திருப்பதுதான். மிகவும் நுணுக்கமான இயற்கை தாவரக் கட்டமைப்பான அலையாத்திக் காடுகள் (Mangroves), இப்பகுதியில் உள்ளன. கடல்நீரும், நன்னீரும் கலக்கும் பகுதிகளில் வளரக்கூடிய அரிய தாவரங்களே அலையாத்திக் காடுகளை உருவாக்குகின்றன. இக்காடுகளின் அடியில் உள்ள தண்ணீரில்தான் இறால்கள் இயற்கையாகச் செழித்து வளரும்.
மீன் வளம் நிரம்பிய இந்தப் பகுதியில் 8 மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்துவருகின்றனர். இப்படி ஒரு பக்கம் கடல் வளத்தை நம்பி மக்கள் வாழ்ந்தாலும், மற்றொரு பக்கம் விவசாயமும் இங்கே செழித்திருக்கிறது.
விவசாய வளம்
இதற்குக் காரணம் கடற்கரையையும் விவசாய நிலங்களையும் பிரிக்கும் மணல்மேடுகள். இவை, நன்னீரைத் தேக்கி வைத்து விவசாயிகளுக்கு உதவுகின்றன. விவசாயம் செழிக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த மணல்மேடுகள்தான் 2004 சுனாமியைத் தடுத்து, இந்த ஊர் மக்களைக் காப்பாற்றி இருக்கின்றன.
இங்குள்ள விவசாய நிலங்களுக்கு வெடால், சித்திரக்காடு, ஆர்க்காடு, ஊத்தூர், பழையூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நீர்நிலைகள்தான் ஆதாரம். 8ஆம் நூற்றாண்டிலேயே அமைக்கப்பட்ட நீர்நிலைகளும்கூட இதில் அடக்கம். இவற்றின் மூலம் 16,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
அது மட்டுமில்லாமல் குளிர்காலத்தில் செய்யூரில் உள்ள காயல் பகுதிக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இமயமலைப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் வலசை வந்து செல்கின்றன. இப்படி மீன்வளம், இயற்கைவளம், பறவைகள் வளம் நிரம்பிய பகுதியாக செய்யூர் திகழ்கிறது.
கேள்விக்குறி
இந்த இயற்கை வளம் அனைத்தும் அனல்மின் நிலையம் வரும்வரை மட்டுமே அப்படியே இருக்கும். அனல்மின் நிலையத் திட்டம் ஆரம்பித்த பின் விவசாயம், மீன்பிடி தொழில்களும், மக்களின் வாழ்வாதாரமும் நிரந்தரமாகக் கேள்விக்குறியாகும்.
ஏனென்றால், கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரி, பனையூர் சின்னக்குப்பம், பனையூர் பெரியகுப்பத்துக்கு இடைப்பட்ட 83 ஏக்கர் பரப்பளவில், 3,10,000 டன் அளவுள்ள கிடங்கில் கொட்டப்பட உள்ளது.
ஒவ்வொரு நாளும் அனல் மின்நிலையத்தில் சராசரியாக எரிக்கப்பட உள்ள 45,000 கிலோ நிலக்கரியில் இருந்து 5,000 டன் சாம்பல் வெளியேறும். இந்தச் சாம்பலைச் சேமித்து வைக்க மட்டும் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தேவை என்று திட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. அப்படிச் சாம்பல் வெளியேற்றப்படும்போது விளங்காடு நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
மக்களின் அச்சம்
அதனால் இப்பகுதியில் தற்போது செழித்துள்ள விவசாயமும், வெப்பநீர் வெளியேற்றம், மாசுபாட்டால் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இப்பகுதி மக்களிடையே உள்ளது.
இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் முறையான அறிவிப்பு இல்லாமலேயே நிலக்கரியை இறக்கத் துறைமுகம் அமைக்கப்படுவது பற்றியும், நிலக்கரி சேமிப்புக் கிடங்கு பற்றியும் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் கருத்துகளை வெளிப்படையாகப் பேச மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்தத் திட்டத்தால் எந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை என்று மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் 2012ஆம் ஆண்டு அனுமதி வழங்கியிருக்கிறது.
மேலும் மின்நிலையம் அமைக்கப்பட உள்ள நிலப்பகுதி பெரும்பாலும் தரிசு நிலம் என்றும், முகத்துவாரம், நீர்வளம், மீன்பிடித் தொழில், மீன் இனப்பெருக்கம், மணல் மேடு போன்ற எதுவுமே இப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை என்றும் இத்திட்டம் தொடர்பாக அமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது. அதனால் மின்நிலையம் அமைக்கப்பட்டால், அவை எதுவும் பெரிய பாதிப்பைச் சந்திக்காது என்று அறிக்கை தெரிவிக்கிறது. "நல்லவேளையாக இப்பகுதியில் மனிதர்களே இல்லை என்று மட்டும்தான் அமைச்சகத்தின் அறிக்கை சொல்லவில்லை" என்கிறது இந்த ஆவணப் படம்.
உண்மை நிலை
அதேநேரம், செய்யூர் பகுதியில் உள்ள மீனவர்களும், விவசாயிகளும் இத்திட்டத்தால் வரக்கூடிய பாதிப்புகளைப் பற்றி விழிப்புணர்வுடனே இருக்கிறார்கள். நிச்சயமாக நீர்வளமும் விவசாயமும் பாதிக்கப்படும் என்றும், தங்கள் நிலத்தை மின்நிலையத்துக்குக் கொடுப்பதால் வாழ்க்கை பறிபோகும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல், சாம்பல் கலந்த நீரால் வெடால், சித்திரக்காடு, கொக்கரந்தாங்கல் விவசாயப் பகுதிகள் பாதிக்கப்படலாம். ஏனென் றால், நிலக்கரிச் சாம்பல் சிமெண்ட் போல மண்ணை மூடிவிடும், நிலங்கள் வளமற்றுப் போகும்.
சென்னை, புதுவை துறைமுகங்களைச் சுட்டிக்காட்டி, துறைமுகம் கட்டுவதால் கடல் அரிப்பு எப்படி மோசமடையும் என்பதையும், கப்பல் போக்குவரத்து அதிகரித்தால் மீன்பிடித் தொழில் எப்படிச் சரியும் என்பதையும் மீனவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல், கழிவுநீர், புகை போன்றவற்றால் கிட்டத்தட்ட 25 கி.மீ. சுற்றளவுக்கு நிலம், நீர், காற்று மாசடையலாம். பாதரசம், ஆர்செனிக், காட்மியம், குரோமியம், ஆண்டிமணி, யுரேனியம், ஈயம், ஸ்ரோண்டியம் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் வெளியேறலாம். தற்போது ஆரோக்கியமாக உள்ள இப்பகுதி மக்களின் உடல்நலம் கெட வாய்ப்பு உண்டு.
சிந்திப்போமா?
என்னதான் நவீன வாழ்க்கைக்கு மின்சாரம் அவசியம் என்றாலும், இயற்கையைச் சீரழித்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வேண்டாம். தங்கள் வாழ்வாதாரத்தை அதற்காகப் பறிகொடுக்க முடியாது என்று இந்த ஆவணப்படத்தில் பேசும் விவசாயிகள், மீனவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு நிமிடமும் மின்சாரத்தைச் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கும் நாம் அனைவரும், மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய கேள்விகளை முன்வைக்கிறது இந்த ஆவணப் படம்.
மின்சாரத்தைத் தயாரிக்கவும், மின் பயன்பாட்டைக் குறைக்கவும் எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன. பெரும்பாலான நேரம் அவற்றைச் சிந்திக்காமல் இருக்கும் நாம், இந்தத் திட்டத்தால் வாழ்வை இழக்கப் போகிற ஆயிரக்கணக்கான விவசாயிகள், மீனவர்கள் பற்றி இனியாவது சிந்திப்போமா?
ஆவணப் படத் தொடர்புக்கு: nity682@gmail.com, 044-24465491