Last Updated : 22 Apr, 2014 11:16 AM

 

Published : 22 Apr 2014 11:16 AM
Last Updated : 22 Apr 2014 11:16 AM

சுற்றுச்சூழல் மூடநம்பிக்கை: கீழே விழுந்த பறவைக் குஞ்சை என்ன செய்வது?

கூட்டிலிருந்து ஒரு குருவிக் குஞ்சு கீழே விழுந்து கிடக்கிறது. நீங்கள் அதைப் பார்த்துவிடுகிறீர்கள். அப்போது ஒரு பருந்து அந்தக் குஞ்சைக் கொத்திச் செல்வதற்காக மேலிருந்து கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பாம்பும்கூட அந்தக் குஞ்சைப் பிடித்துச் செல்ல வருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பருந்தையும் பாம்பையும் துரத்திவிட்டுவிட்டுக் குருவிக் குஞ்சை எடுத்து, அதன் கூட்டைத் தேடி அதில் விடுவதா? அல்லது உங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்ப்பதா? அல்லது விலங்குகள் நலச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களை வந்து எடுத்துப்போகச் சொல்வதா? அல்லது அந்தக் குஞ்சை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவதா? எது சரியான செயல்?

அந்தக் குஞ்சை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவதுதான் சரி. இதென்ன கொஞ்சம்கூட இரக்கமில்லாத முறையாக இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதுதான் சரி. இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். பருந்தும் பாம்பும் அந்தக் குஞ்சைத் தின்னக் கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்புறம் பருந்தும் பாம்பும் எப்படி உயிர்வாழ்வதாம்? இயற்கையில் உள்ள உணவுச் சங்கிலியே ஒன்றை ஒன்று இரையாக்கிக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.

பூச்சியைத் தவளை தின்கிறது, தவளையைப் பாம்பு தின்கிறது, பருந்தை ஆந்தை தின்கிறது. இப்படித்தான் இருக்கும் உணவுச் சங்கிலி. அதை இடையூறு செய்தால் மொத்த உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படும். இயற்கையில் எங்கே கைவைத்தாலும் ஏதாவதொரு இடத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடும். அவ்வளவு நுண்மையான சமநிலையில்தான் இயற்கை அமைந்திருக்கிறது.

இருந்தாலும் அந்தக் குஞ்சு பாவமல்லவா? அதை அதன் கூட்டிலாவது கொண்டுபோய் சேர்க்கலாமல்லவா? இல்லை, பெரும்பாலும் அந்தக் குஞ்சைத் தாய்ப்பறவை தன் கூட்டில் சேர்க்காது. சரி, நம் வீட்டிலாவது கொண்டுவந்து வளர்க்கலாமல்லவா? எப்படி வளர்ப்பீர்கள்? நம் வீட்டு நாய்க்குட்டியை வளர்ப்பது போலவா? அல்லது கூண்டுக்கிளியை வளர்ப்பது போலவா?

பறப்பதற்காகப் பிறந்த ஒரு பறவையை நம் வீட்டில் கொண்டுவந்து வளர்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அது மட்டுமல்லாமல் அதன் உணவுப் பழக்கமும் பிற பழக்கங்களும் எதுவும் நமக்குத் தெரியாது. இதற்குப் பேசாமல் அந்தக் குஞ்சை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.

பறவைகளின் மேல் நமக்கு உண்மையில் இரக்கம் இருந்தால், அவை வாழ்வதற்கு ஏற்ற சூழலை நாம் உருவாக்கித்தர வேண்டும். பறவைகள் வாழ்வதற்கேற்ற சூழல்தான் நாம் வாழ்வதற்கேற்ற சூழல் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். காடுகளை அழிக்காமல் இருக்க வேண்டும். பூச்சி மருந்துகள், செயற்கை உரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மருந்துகளும் உரங்களும் நீரிலும் மண்ணிலும் கலக்கும்போது தீமைசெய்யும் ஒரு சில பூச்சிகளோடு நன்மை செய்யும் எண்ணற்ற பூச்சிகளும் அழிந்துவிடுகின்றன. இரைக்காகப் பூச்சிகளை நம்பியிருக்கும் பெரும்பாலான பறவைகளுக்கான இரையும் அழிந்துபோய்விடுகிறது.

இல்லையென்றால் பூச்சி மருந்தினால் பாதி உயிரோடு இருக்கும் பூச்சிகளை உண்டு பறவைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டால் அந்த இனமே, அத்தோடு அழிந்துவிடும். எனவேதான் பறவைகளைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அதன் மூலம் நம் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்றால், நமக்கு இரக்கம் மட்டும் போதாது. சரியான அக்கறையும் அறிவும் வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x