Last Updated : 13 Dec, 2014 03:12 PM

 

Published : 13 Dec 2014 03:12 PM
Last Updated : 13 Dec 2014 03:12 PM

வண்ணத் தூதுவர்களின் ஆயிரம் மைல் பயணம்

பேருயிர் யானைகளைப் போலவும், பறவைகளைப் போலவும் சின்னஞ்சிறிய வண்ணத்துப்பூச்சிகளும் தான் பிறந்த மண்ணைவிட்டு, அயல் பகுதிக்கு வலசை போகும் வழக்கம் கொண்டவை. அது எப்படி நடக்கிறது என்ற கேள்வி உடனே எட்டிப் பார்க்கிறதா? சந்தேகமே வேண்டாம், கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இதை நேரிலேயே பார்க்கலாம்.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சின்னஞ்சிறிய வண்ணத்துப்பூச்சிகள் சில ஆயிரம் கி.மீ கடந்து செல்கின்றன. உலகில் பெரும் புகழ்பெற்ற ‘மொனார்க்' வகை வண்ணத்துப்பூச்சிகள் ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவரை பயணிப்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதேபோல இந்திய இயற்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்தவை 'டார்க் புளூ டைகர்' இன வண்ணத்துப்பூச்சிகள். இவை விசாகப்பட்டினத்திலிருந்து மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்குப் பனிக்காலம் தோறும் பயணிக்கின்றன.

மழையோடு வரும்

ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட வகை வண்ணத்துப்பூச்சிகள் தமிழகத்தில் வாழ்கின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆசனூர் காட்டுப் பகுதியிலிருந்து உணவு தேடி, உறவு தேடிப் பல்லாயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் வலசை போவது, கண்ணைவிட்டு அகலாமல் மனதில் ஆழப் பதிந்துவிடும் அரிய காட்சி. நாமும் ஓர் சருகைப் போல மெலிந்து, வண்ணத்துப்பூச்சிகளைப் பின்தொடர மாட்டோமா என்று ஏங்க வைக்கும் அற்புத நிகழ்வு.

இரு வேறு முகங்கள்

இந்த நிகழ்வைக் காண மாணவர்களும், ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந்த முறை பெருமளவில் குவிந்திருந்தனர். இயற்கையின் மீதும், சூழலின் மீதும் கரிசனம் கொள்ளும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை உணர முடிந்தது.

ஆனாலும் மைசூர்-திம்பம் மலைப் பாதையில் வலசைவரும் வண்ணத்துப்பூச்சிகள் அப்பகுதியில் அதிவேகமாக விரையும் வாகனச் சக்கரங்களில் ஆயிரக்கணக்கில் நசுங்கி உருத் தெரியாமல் நைந்துபோவதை எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து போகும் மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

காடுகள் கடந்து

மரணத்தின் கையிலிருந்து தப்பி உயிர் பிழைத்த வண்ணத்துப்பூச்சிகள் மேட்டுப்பாளையம் காட்டுப் பகுதி வழியாக ஆனைகட்டி, அட்டப்பாடி, அகழி கடந்து கேரளக் காட்டுப் பகுதியான அமைதிப் பள்ளத்தாக்கில் சங்கமிக்கின்றன. மழை, ஈரப்பதம், காற்றின் வேகம், நிலவும் வெப்பம், உணவுத் தாவரங்களின் இருப்பு ஆகியவற்றை அவதானித்து வலசை வருகின்றன வண்ணத்துப்பூச்சிகள்.

‘டார்க் புளூ டைகர்', ‘காமன் குரோ' என்று வகைவகையாய் ஆங்கிலத்தில் பெயர் சொன்னாலும், மனதில் ஒட்டவில்லை! இவற்றுக்குச் சரியான தமிழ்ப் பெயர்கள் இல்லை என்பது குறையாகப்பட்டது. டார்க் புளூ டைகரைத் தமிழில் ‘அடர் நீலப் புலி' என்று மொழிபெயர்ப்பது சரியாகப் படவில்லை. அடிப்படையாக அடர்பச்சை, கறுப்பு, காவி நிறங்களில் அமைந்த 3 வகை வண்ணத்துப்பூச்சிகள் இந்த ஆண்டு அதிகமாகக் காணக் கிடைத்தன.

தாது உப்பு பரிமாற்றம்

வலசையின்போது ஈரமண்ணில் படிந்துள்ள தாதுஉப்பை உறிஞ்சி சேமித்துக் கொள்கின்றன ஆண் வண்ணத்துப்பூச்சிகள். இனப்பெருக்கக் காலங்களில் ஆற்றல் பெறவே துவர்ப்புச் சுவையுள்ள தாது மண்ணை உறிஞ்சுகின்றன இவை.

அதிகத் தாது உப்பைச் சேமித்து வைத்துள்ள ஆணுடன் இணைசேர்வதில் பெண் வண்ணத்துப்பூச்சி ஆர்வம் காட்டுகிறது. உறவின்போது தாதுஉப்பைப் பெண்ணுக்கு ஊட்டுகிறது ஆண் வண்ணத்துப்பூச்சி.

பரஸ்பர ஏற்பாடு

அமைதிப் பள்ளத்தாக்கில் உள்ள பசுமை மாறா காட்டு மரங்களில் தேனடையைப் போல் ஆயிரக்கணக்கில் வண்ணத்துப் பூச்சிகள் குழுமியுள்ளன. பல வகை வண்ணத்துப்பூச்சிகள் ஒன்றாகப் பறந்தாலும், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தாவரங்களையே நாடிச் செல்கின்றன. இன்ன வகை தாவரங்களுக்கு இன்ன வகைப் பூச்சிகள் என்ற இயற்கையின் நியதி மீறப்படுவதில்லை!

பருவங்கள் தோறும் காடுகளில் பூக்கும் மலர்கள் வண்ணத்துப் பூச்சிகளை வரவேற்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளும் காடுகளின் பசுமைப் பரப்பைச் செழுமையாக்கும் மகத்தான பணியை வாழ்நாள் முழுதும் செய்கின்றன. தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வண்ணத்துப்பூச்சிகள் பறவைகள், ஊர்வனவற்றுக்கு உணவாகவும் உள்ளன.

அடையாளம் இழக்குமா?

இயற்கை நியதிகள் அதனதன் அளவில் சரியாகச் செயல்பட்டாலும், சுற்றுச்சூழல் மாசு, காடழிப்பு, காட்டுத்தீ, காட்டுச் சாலை, மரங்களை வெட்டுதல், புவி வெப்பமடைதல், காபி, தேயிலைத் தோட்டத்தில் தெளிக்கும் உயிர்க்கொல்லி போன்ற மனிதச் செயல்பாடுகளால் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வு அடையாளம் இழந்து போகிறது.

வசீகரம் மிகுந்த வண்ணத்துப்பூச்சிகளை 'இயற்கை வரைந்த பறக்கும் ஓவியம்' என்றெல்லாம் கொண்டாடுவதுடன், அவற்றைப் பாதுகாக்க என்ன தேவை என்றும் யோசிக்க வேண்டும்.

வண்ணத்துப்பூச்சிகளின் வலசையில்தான் ஓர் உயிர்ப்பான காடு உறைந்துள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் வலசை செல்வதற்குப் பரந்த காடுகளும் காட்டுப் பாதைகளும் தேவைப்படுகின்றன. இந்தக் காடுகளே எல்லா உயிர்களுக்கும் வாழ்வளிக்கின்றன. சிற்றுயிர் வண்ணத்துப்பூச்சியும் பேருயிர் யானையும் வாழத் துண்டாடப்படாத காடுகள் நமக்குத் தேவை.

கட்டுரையாளர்,

சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: kurinjisadhasivam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x