

பூவுலகில் உயிர்களுக்கு இடையேயான உயிர்ச் சங்கிலியும், உணவுச் சங்கிலியும் அறுந்துவிடாமல், அனைத்துயிர்களும் இணக்கமாக வாழ்ந்திட வேண்டும். அத்தகைய வாழ்க்கைச் சூழலே உலகம் நிலைத்திருக்க வழி என்கிறார்கள் சூழலியலாளர்கள். இதற்கு அச்சாணியாக இருந்து, காலங்காலமாகச் சக மனிதர்களுக்கு உணவு படைத்துவருபவர்கள் விவசாயிகள்.
தீதும் நன்றும்
இன்றைக்கு உணவும் பெருமளவு நஞ்சாகிவிட்டது, உணவு உற்பத்தி முறை சீர்கெட்டதும், சூழலியல் மாசுபட்டதுமே இதற்கு முக்கியக் காரணம். அதிக உணவு உற்பத்தி, பசுமைப் புரட்சி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டவை உணவு நஞ்சாவதற்கு முக்கியக் காரணம். எந்த மக்கள்தொகையைக் காரணம் காட்டிப் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதோ, அந்தக் காரணம் இன்றுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லையே! வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள், தினசரி மூன்று வேளை முழு உணவின்றி இருப்பவர்கள் என்று வகைப்படுத்தியிருக்கிறோமே தவிர, பசியைப் போக்கிடவில்லை. மண்ணும், மணி நீரும் மாசுபட்டுச் சுற்றுச்சூழலும் மனிதர்களும் புதுப்புது நோய் கண்டவர்களாகிவிட்டதுதான் மிச்சம்.
குறிப்பிட்ட ஓர் இயற்கை வாழிடத்தில் வாழும் உயிர்களுக்குத் தேவையான உணவு, அப்பகுதியிலேயே கிடைக்கும். அந்த உணவே “குறையினும் மிகினும் நோய் செய்யும் அதுவே மருந்தாகவும் செய்யும்’’. ஒவ்வொரு வட்டாரமும் வெவ்வேறு மண் தன்மையையும் நீரின் தனித்த குணத்தையும் பெற்றிருப்பதே இதற்குக் காரணம். அதனால், அவ்விடத்தில் வாழும் மனிதர்களும் உயிரினங்களும் அப்பகுதியில் விளையும் உணவைச் சார்ந்திருப்பதே சிறந்தது.
நம் உணவே நல்லுணவு
இன்றைக்குக் காஷ்மீர் ஆப்பிளும், ஆஸ்திரேலிய ஓட்சும் நம் கையருகே வந்துவிட்டன. இது நமக்கு மட்டுமல்லாமல், நம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் நன்மை செய்வதில்லை. ஓரிடத்தில் விளையும் உணவுப் பயிர் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும்போது, மண்ணின் இயல்புக்கு ஏற்ப இருப்பதுடன், ஊட்டமும் குறையாமல் கிடைக்கும். விவசாயிகளுக்கு வாழ்க்கை கிடைக்கும்.
இயற்கை வேளாண்மை என்பது ஏதோ, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முறையல்ல. காலம்காலமாக நமது மூதாதையர்கள் அணு அணுவாகச் செதுக்கிய உழவுக் கலைதான். இன்றைக்கு இயற்கை விவசாயத்துக்கான மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் பசுமை அங்காடிகளும் அதிகரித்துவருகின்றன. இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்க, நாமும் அதைச் செய்ய வேண்டுமென்பதில்லை. அதன் அவசியத்தையும் சிக்கல்களையும் புரிந்து கொண்டு, அதன் வளர்ச்சிக்குப் பங்களித்தால் போதும்.
அந்த வகையில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்பவர்கள், பசுமை அங்காடிகளுடன் நுகர்வோரும் கைகோக்க வேண்டும். இப்படி முத்தரப்பும் இணைந்து சுதந்திரமான, தற்சார்புடைய விவசாயத்தை நிலைபெறச் செய்வதன் மூலம் சூழலியலைச் சீர்கெடுக்காமல் உணவுத் தன்னிறைவைப் பெறலாம். அதுவே இன்றைய அவசர, அவசியத் தேவை
கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்
தொடர்புக்கு: mazhai5678@gmail.com