நிலத்தைவிட்டு வெளியே போ!

நிலத்தைவிட்டு வெளியே போ!
Updated on
2 min read

இந்திய உழவர்களின் வாழ்க்கை முறை அவர்களை ஒன்றிணைய விடுவதில்லை என்பதையும், அரசின் கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள் பரந்துபட்ட உழவர்களின் மீது சுமையை ஏற்றிவிடுவதாகவும் உள்ளன என்று பார்த்தோம்.

உழவர்கள் சந்திக்கும் நான்காவது சிக்கல், சந்தையின் ஆதிக்கம். இந்திய வேளாண்மைச் சந்தை உழவர்களின் கைகளில் இல்லை. நேரடியாகக் களத்தில் இறங்கி விளைவிக்கும் உழவர்கள், தங்களது விளைபொருள்களுக்கு விலை வைக்க இயலாத சூழல் உள்ளது. குறிப்பாக ஒரு தொழிற்சாலை உற்பத்திப் பொருள் ஆலையை விட்டு வெளியேறும்போது, அதற்கான அதிகபட்சச் சில்லறை விலை (MRP) முத்திரையிடப்பட்டு வெளிவருகிறது. அதற்குரிய அடக்க விலை உறுதி செய்யப்படுகிறது. லாபம் என்ற பங்கும் வைக்கப்படுகிறது. ஆனால், உழவர்களின் பொருட்கள் அப்படிப்பட்ட எவ்வித விலை உறுதிப்பாட்டுக்கும் உட்படுத்தப்படுவதில்லை.

ஏன் விலையில்லை?

ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட மூலப்பொருளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருளின் அடக்கவிலை உறுதியாகத் தெளிவுபடுத்தப்படுகிறது. குறிப்பிட்ட முத்திரை அல்லது சின்னம் பொறிக்கப்பட்டு ஒரே மாதிரியான விலையில் சந்தையில் அது உலா வருகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட முத்திரைச் சோப்பு எல்லாப் பகுதிகளிலும் ஒரே விலையில் கிடைக்கிறது. ஏன் புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் பல இடங்களில் பல மாதிரி எடுக்கப்பட்டாலும், பெரும்பாலும் ஒரே விலைக்கு (சில இடங்களில் மட்டும் அதிக விலை என்பது விதிவிலக்கு) கிடைக்கிறது.

ஆனால், உழவர்களின் விளைபொருள்களுக்கு அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட விலை கிடைப்பதில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மிக முதன்மையான காரணம், அரசிடம் தெளிவான விலைக் கொள்கையோ, கொள்முதல் கொள்கைகளோ இல்லை. ஏன் சாகுபடிக் கொள்கைகூட இல்லை. கடும் வறட்சிக்கு இலக்காகியுள்ள பகுதிகளில் கரும்புக்கும், வாழைக்கும் அரசு கடன் வழங்குகிறது. அதேபோல நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி கறுப்பு ஒன்றியங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கரும்புக்கும், வாழைக்கும், மஞ்சளுக்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. கரும்பு ஆலைகள் நிறுவப்படுகின்றன.

அதேநேரம் நீரைப் பாதுகாக்கும் வானவாரி எனப்படும் மானாவாரி உழவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில், அக்கறை காட்டுவதில்லை. அரசும் கண்டு கொள்வதில்லை. இப்படியான முரண்பாடான கொள்கைகள் இன்னும் நிலவுகின்றன.

சூறையாடல்

ஆக நமது உழவர்கள் தற்சார்பின்மை, உதிரித்தன்மை, அரசியல் பாராமுகம், சந்தைச் சூதாட்டம் போன்ற நெருக்கடிகளில் இருந்து விடுபட்டால் மட்டுமே தம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். இன்று நம்முடைய ஆட்சியாளர்கள், உழவர்கள் நிலத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பல இடங்களில், பல குரல்களில் மீண்டும் மீண்டும் பேசி வருகின்றனர்.

நிலம் என்பது இன்றைக்கு மிகப் பெரிய அளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கான மூலப்பொருளாக மாறி வருகிறது. புதிதாக அமைந்துள்ள அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. மலைவாழ் மக்களில் தொடங்கி உழவர்கள், மீனவர்கள் என்று எல்லா அடித்தட்டு, பரந்துபட்ட மக்களின் வாழ்விடங்களையும் குறி வைத்துப் பன்னாட்டு கும்பணிகள் (Companies) படையெடுத்துள்ளன. நூற்றில் பத்துப் பேருக்கு வேலைவாய்ப்பைத் தருகிறோம் என்று 90 பேரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். லாட்டரிச் சீட்டு கும்பணிகளைப் போல பல்லாயிரம் பேருக்கு வாழ்வு தரும் கடல் வளத்தை, மலை வளத்தை, வயலை அழித்துச் சில பத்து பேருக்கு வழங்குவதை வளர்ச்சி என்று கூறுகின்றனர்.

இயற்கை வளங்களைச் சூறையாடி எல்லாவற்றையும் சந்தைக்குள் தள்ளும் போக்கு, நாட்டின் தற்சார்புக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். இதன் விளைவுகள் மிகக் கடுமையானவை. இதைப் பற்றி விரிவாக ஆராய வேண்டும்.

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in