

டால்பின், டியூகாங், வேல் ஷார்க்... இதெல்லாம் ஏதோ வெளிநாட்டுக் கடல் உயிரினங்கள், நமக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். சென்னைக் கடற்கரையிலேயே டால்பின்களைப் பார்க்க முடியும். இதன் தமிழ்ப் பெயர் ஓங்கல்.
டியூகாங் எனப்படும் கடல்வாழ் சைவப் பாலூட்டி, ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்கரையை ஒட்டியப் பகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. இதன் தமிழ் பெயர் ஆவுளி அல்லது ஆவுளியா. உலகின் மிகப் பெரிய மீன் இனமான வேல் ஷார் வங்காள விரிகுடா கடற்பகுதியில் வாழ்கிறது. இவ்வளவு காலமும் இதன் ஆங்கிலப் பெயரைத் தமிழில் மொழிபெயர்த்து ‘திமிங்கிலச் சுறா' என்றே பலரும் எழுதி வருகிறார்கள். இதன் பெயர் பெட்டிச் சுறா அல்லது அம்மணி உழுவை. இந்தத் தமிழ்ப் பெயர்கள் அனைத்தும் மீனவர்களிடையே காலங்காலமாகப் புழங்கி வருபவை.
பூர்வகுடிகள்
இந்தியாவில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் பழங்குடிகளுக்கு இணையாகக் கடற்கரை மண்ணின் பூர்வகுடிகளாக இருப்பவர்கள் மீனவர்கள். நீண்ட பாரம்பரியம் கொண்ட அவர்களது பாரம்பரிய அறிவின் ஓர் அடையாளம்தான், கடல்வாழ் உயிரினங்களுக்கு அவர்கள் சூட்டியுள்ள ஆயிரக்கணக்கான பெயர்கள்.
ஆனால், இந்தப் பாரம்பரிய அறிவு முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, அவர்களிடையே புழங்கி வரும் மீன் பெயர்கள் பரவலாக இல்லாவிட்டாலும்கூட இயற்கை ஆர்வலர்களிடமும், பாடப் புத்தகங்களிலுமாவது இடம்பெற்றுள்ளனவா என்று கேட்டால் இல்லை என்பதைத் தவிர, புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.
பெயர் தொகுப்பு
இந்தப் பின்னணியில் கிட்டத்தட்ட ஆயிரம் மீன் இனங்களின் பெயர்களையும் 200க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்களின் பெயர்களையும் நமக்கு அறிமுகப் படுத்துகிறது ‘பன்மீன் கூட்டம்' என்ற சிறு நூல். சில இடங்களில் பெயர்களுடன் சுவாரசியத் தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுத்திருப்பவர் உவரியைச் சொந்த ஊராகக் கொண்ட பத்திரிகையாளர் மோகன ரூபன்.
உலகின் முக்கிய நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹெர்மன் மெல்வில் எழுதிய ‘மோபி டிக்' நாவலை ‘திமிங்கில வேட்டை' என்ற பெயரில் ஏற்கெனவே இவர் மொழிபெயர்த்திருக்கிறார்.
‘பன் மீன் வேட்டத்து என்ஐயர் திமிலே' என்ற குறுந்தொகை (123) வரி தொடங்கி, அவருடைய அம்மாவின் ‘புள்ளையும் கார்வாரும்' (கார்வார் - அடாவடியான ஆள் அல்லது 3 அடி நீளமுள்ள கடல் மீன்) என்ற ஏசல்வரை இந்த நூலைத் தொகுப்பதற்கான உத்வேகத்தை அவருக்கு அளித்துள்ளன. எளிய மக்களின் புழங்கு மொழி, நேரடி அனுபவம், வயசாளிகளின் நினைவு ஆகியவற்றின் வழியாகப் பயணித்து, இந்தப் பெயர்களைத் தொகுத்திருக்கிறார்.
ஒரே மீனுக்கும் பகுதிக்குப் பகுதி மாறுபடும் பெயர்கள் பற்றித் தெளிவு பெறவும், அழிந்துவரும் மீன் இனங்கள், கவனம் பெறாத மீன் இனங்களின் பெயர்களைக் கண்டறியவும் இது போன்ற தொகுப்புகள் அவசியம். அந்தத் திசை நோக்கி முதல் அடி எடுத்து வைத்துள்ளது இந்நூல்.
பொக்கிஷம் காப்போம்
உலகில் உலா வரும் மீன்களின் எண்ணிக்கை 35 ஆயிரம். இவை அடையாளம் காணப்பட்டவை மட்டுமே. கடலில் வாழும் உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக வகை பிரிக்கப்பட்டுவிட்டதாகக் கூற முடியாது. இந்த 35 ஆயிரத்தில் 2,500 மீன் இனங்கள், அதாவது ஏழு சதவீதம் தமிழகக் கடலில் இருக்கின்றன. இது எவ்வளவு பெரிய பொக்கிஷம்? ஆனால், இந்த இயற்கைப் பாரம்பரியத்தின் அருமை போற்றப்படவில்லை.
இந்நூலில் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது போல், பன்னாட்டுப் பெரு நிறுவனங்களும் மீன் ஏற்றுமதி நிறுவனங்களும் கடல் தரையைப் பகுதி பகுதியாகத் துடைத்து எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், வேளா போன்ற மீன் இனங்கள் உலகை விட்டே அழிந்து வருவதைத் தடுக்க முடியாது. அதேபோல, இந்த மீன் இனங்களின் பெயர்கள் பரவலாகப் புழக்கத்தில் இல்லாத நிலையில், அவையும் நினைவைவிட்டு அகன்றுவிடும்.
இயற்கையை-காட்டுயிர்களைப் புரிந்துகொள்வதன் முதல் படி அவற்றை வகை பிரித்து அறியக் கற்பதும், அவற்றின் அடிப்படை வாழ்க்கையைப் புரிந்துகொள்வதும்தான். அந்த வகையில் இந்த நூல் எடுத்து வைத்துள்ள அடி, முக்கியமானது.
பன்மீன் கூட்டம்,
மோகன ரூபன், வெளியீடு:
வலம்புரிஜான் இலக்கிய வட்டம்.
தொடர்புக்கு: 9841364236