

மகாரஷ்டிர மாநிலத்தைக் களமாக கொண்டது ‘மண்டி’ (MANDI) குறும்படம். ஏழ்மையான உழவர் ஒருவர் தான் அறுவடைசெய்த வெங்காயத்தை மூட்டைகட்டி மொத்த வியாபாரியிடம் சந்தையில் (மண்டி) விற்பனை செய்யப் போகிறார். “இன்னும் இரு நாட்களில் பண்டிகை இருக்கும் நிலையில் மாட்டுக்கு அலங்காரம் செய்ய வேண்டும்” எனக் கூறியபடி மனைவி பணம் கொடுப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.
உற்பத்தி செய்ததைப் பரிதாபமான நிலையில் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் உழவர் தனது உழைப்பைப் பறிகொடுக்கப் போகிறோம் என்று தெரியாதவாறு வெள்ளந்தியாக இருக்கிறார். நகரத்தைப் பார்க்க வேண்டும் என அடம்பிடிக்கும் உழவரின் மகன் சொல்லாமலேயே வண்டியில் ஏறிவிடுவது எதிர்பாராதது.
வெங்காயச் சந்தையில் உழவருக்கும் வியாபாரிக்கும் நடக்கும் பேரம் நெஞ்சை உலுக்கக்கூடியது. ஒரு கிலோ வெங்காயத்துக்குச் சொற்பமான விலையை நிர்ணயிக்கிறார் வியாபாரி. குறிப்பாக, அந்தத் தொகை வேளாண் பொருட்களுக்குச் செலவுசெய்ததைவிடக் குறைவானது. வண்டி வாடகை, சங்கத்துக்கான வரி எனப் பிடித்தத்தையும் நிர்ணயித்த தொகையில் கழித்துக்கொள்கிறார்.
அதனால் அந்த உழவர் விளைபொருள் போக தன் கையிலிருந்து பணம் கொடுக்க நேர்கிறது. தொடக்கக்காட்சியில் அப்பாவிடம் பொம்மை வேண்டுமெனக் கேட்ட மகன் தாங்கள் ஏமாற்றப்படுவதை நேரடியாகப் பார்த்தபின் ‘அடுத்த வெள்ளாமையில் பொம்மை வாங்கிக்கலாம்’ என்கிறான். இந்தக் காட்சி உழவர்களின் சொல்ல முடியாத தவிப்பையும் காட்டுகிறது. ஒரு சிறுவனின் மனத்திலும் ஏழ்மையின் ஆழம் பதிந்திருப்பது செறிவாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.
ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை யஷோவர்தன் மிஸ்ரா இயக்கியுள்ளார். கதைக்குத் தேவையான எளிமையான கதாபாத்திரமும் கனமான நடிப்பும் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மேலும், குறும்படத்துக்கான சாரமும் அதற்கேற்ற காட்சி அமைப்பும் கவனம் பெறச் செய்கிறது.
உற்பத்திசெய்யும் சவால்களில் இருந்து மீள்வதையே பெரும் சவாலாகக் கொண்டுள்ளது உழவர்களின் வாழ்க்கை. தண்ணீர்ப் பஞ்சம், இயற்கைப் பேரிடர் போன்றவை ஒருபுறம் இருக்க, வேளாண் குடும்பங்கள் வியாபாரிகள் சிலரால் ஏமாற்றப்படுவதுண்டு. இந்த அவலத்தைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளது இந்தக் குறும்படம்.
‘மண்டி’ படத்தின் திரைமுன்னோட்டத்தைக் காண: