Published : 06 Jul 2019 10:32 AM
Last Updated : 06 Jul 2019 10:32 AM

பசுமை நூல்கள் உரையாடல்

“சில எழுத்துகள் வேதநூல் போன்றவை, காலத்தையும் இடத்தையும் உள்வாங்கிக்கொள்பவை, அவற்றைக் கடந்து நிற்கும் ஆற்றலும் ஒருசேரக் கைகூடி நிற்பவை. சு. தியடோர் பாஸ்கரனின் சூழலியல் எழுத்தை ‘பாஸ்கரன் சூழலியல் பள்ளி' என்று அழைத்தால் பிழையில்லை.

இயற்கை, காலம், களம், மொழி என்பதாக விரிந்துபோகும் பார்வை பாஸ்கரனுடையது. அவரது கூரிய பார்வை, பாரிய களப்பணி இரண்டும் எதிர்காலத்தின்மீது அவருக்கிருக்கும் அசையாத நம்பிக்கையைக் காட்டுகிறது. அந்த நம்பிக்கை நம்மையும் தொற்றிக்கொள்கிறது”, சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘கையிலிருக்கும் பூமி’ நூலைப் பற்றி சூழலியல் எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின் இப்படிப் பகிர்ந்துகொண்டார்.

காடும் கிளியும்

சூழலியல் பிரச்சினைகள் தீவிரமடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வெளியான முக்கிய சூழலியல் நூல்களைக் குறித்த உரையாடல் நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் வறீதையா மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்துகொண்டார். சென்னையைச் சேர்ந்த உயிர், காக்கைக் கூடு அமைப்புகள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தன.

கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா எழுதி யூமா வாசுகி மொழிபெயர்த்திருந்த ‘சிவப்புக் கிளி’ கதையை முன்வைத்து சூழலியலில் கலை இலக்கியத்தின் பங்கு குறித்து கவிஞர் வெய்யிலும், ஆனைமலைப் பகுதிப் பழங்குடிகளான காடர்களுடனான அனுபவம் குறித்து மாதுரி, மணிஷ் எழுதி வ. கீதா மொழிபெயர்த்த ‘நாங்கள் நடந்து அறிந்த காடு’ நூலைப் பற்றி முனைவர் பகத்சிங்கும் பேசினார்கள்.

‘இந்து’ வெளியீடுகள்

‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஜானகி லெனின் எழுதி கவனம் பெற்ற ‘எனது கணவனும் ஏனைய விலங்குகளும்’ பத்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு குறித்துப் பேராசிரியர் த. முருகவேளும், சூழலியலுக்குப் பங்காற்றிய, தங்கள் வாழ்வை ஈந்த பெண்களைப் பற்றி ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ந.வினோத் குமாரின் ‘வான் மண் பெண்' நூல் குறித்து காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ. சண்முகானந்தமும் கவனப்படுத்தினார்கள்.

‘தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்’ வழிகாட்டி நூல் குறித்து பறவை ஆர்வலர் ஜா.செழியன், பேராசிரியர் வறீதையா எழுதிய ‘1000 கடல் மைல்' பற்றி இதழாளர் ந. வினோத் குமார், ‘திருவண்ணாமலை பறவைகள்’ என்ற ஆங்கில வழிகாட்டி நூல் குறித்து இதழாளர் சுபகுணம் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் புதிய நூல் வெளியீடு, துணிப்பை இயக்கம், மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

- அருண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x