தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 46: வீடுதான் மைய அச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 46: வீடுதான் மைய அச்சு
Updated on
1 min read

ரி. நமது பண்ணை வீடு எங்கு இருக்கும்? அந்த இடத்தைத் தேர்வு செய்யவும் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக நீர் தேங்காத இடமாக இருக்க வேண்டும். சாலையை அணுகுவதற்கு வசதியாக இருக்க வேண்டும். நெருப்புத் தாக்குதலுக்கும் கடும் புயல் தாக்குதலுக்கும் இலக்கு ஆகாத இடமாக இருக்க வேண்டும். குறிப்பாகக் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மறைவாக இருக்க வேண்டும்.

இப்படி ஓர் இடத்தைத் தேர்வு செய்து, வீட்டை அமைக்க வேண்டும். இதுவே நமது பண்ணையில் மையப் புள்ளி அல்லது வண்டியின் அச்சு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது பண்ணை முழுவதும் இந்த மைய அச்சில் இருந்துதான் சுழல வேண்டும்.

இதற்கு அடுத்ததாக நமது பண்ணையின் உறுப்புகளை ஒவ்வொன்றாக நிறுவ வேண்டும். முதலில் அச்சைச் சுற்றியுள்ள அண்மை வளாகம், அச்சுக்கு வெகு தொலைவில் உள்ள சேய்மை வளாகம், இப்படியாகப் பண்ணையின் இடத்தைப் பிரிக்க நான்கு வகையான வளாகங்களை நமது வசதிக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.

1. அச்சு

2. அண்மை வளாகம்

3. இடைநிலை வளாகம்

4. கடைநிலை வளாகம்

5. சேய்மை வளாகம்

இப்படியாக அச்சு எனப்படும் பண்ணை வீடு முதன்மையானது.

அண்மை வளாகத்தில் காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டம், தானியக் களஞ்சியம், கிணறு, தண்ணீர்த் தொட்டி முதலிய உறுப்புகள் அமைக்கப்படும்.

இடைநிலை வளாகத்தில் கோழிப் பண்ணை, சிறு பழத்தோட்டம் முதலியன இடம்பெறும். கடைநிலை வளாகத்தில் கட்டை மரங்களான மரக்கா (வெட்டு மரம்), தானிய வயல்கள், மேய்ச்சல் பகுதி போன்றவை இடம்பெறலாம்.

சேய்மை வளாகம் என்பது நமது கட்டுப்பாடு குறைவானதாக இருக்கும் பகுதி. விறகுக்கான மரங்கள், பறவைகள், சில சிறு விலங்குகள் வந்து தங்கிச் செல்லும் பகுதியாக இது இருக்கும்.

இதுவே இட அடிப்படையில் நமது நிலத்தைப் பிரிக்கும் முறை.

இவ்வாறு பிரிக்கும்போது இரண்டு கூறுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது புற ஆற்றல்களான மழை, வெயில், காற்று ஆகியவற்றையும், நமது நிலத்தின் அமைப்பில் உள்ள நிலச்சரிவையும் கணக்கில் கொள்ள வேண்டும். அவற்றை நாம் துறைகள் என்று அழைப்போம். அத்துடன் நமது நிலம் எந்த நிலத் திணையில் உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். குறிஞ்சியா, முல்லையா, மருதமா, நெய்தலா என்று புரிந்துகொண்டு நமது பண்ணையின் ஒருங்கமைவுப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

அடுத்து ஓர் ஒருங்கமைப்பில் புற ஆற்றல்களை எவ்வாறு கையாள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in