பசுமைப் புரட்சியின் விளைவு!

பசுமைப் புரட்சியின் விளைவு!

Published on

“ம

ண்ணின் வளம் என்பது அதிலுள்ள கார்பன் விகிதத்தைப் பொறுத்து அமைகிறது. இன்று நாட்டில் பெரும்பாலான இடங்களில் அந்த விகிதம் 0.3 சதவீதமாக உள்ளது. ஆரோக்கியமான மண்ணில் அந்த விகிதம் 1.5 சதவீதமாக இருக்கும்.

மனிதர்களின் ஹீமோகுளோபின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், மண்ணின் வளம் எந்த அளவுக்கு முக்கியம் என்பது புரியும். ஆரோக்கியமான மனிதர்களின் உடலில் ஹீமோகுளோபினின் அளவு 10 முதல் 12 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால், வெறும் 4 எண்ணிக்கையில் இருந்தால் எவ்வளவு கெடுதியோ அதுபோலத்தான் மண்ணில் கார்பனின் விகிதம் 0.3 சதவீதமாக இருப்பது. சுருக்கமாகச் சொன்னால், மண்ணின் வளம்தான் மனிதரின் நலம். அதை நோக்கித்தான் நாங்கள் பயணிக்கிறோம்” என்கிறார் கிருஷ்ண குமார்.

கிருஷ்ண குமார் தமிழர். பிறந்தது வளர்ந்தது எல்லாம் கர்நாடகத்தில். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ஐ.சி.ஏ.ஆர்.) கீழ் தோட்டக்கலைத் துறை தொடங்கப்பட்டபோது, அத்துறையின் ஆய்வுத் தலைவராக முதன்முதலில் பொறுப்பேற்றவர். அத்துறையில் 24 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். தற்போது, சர்வதேச உயிரினப் பன்மை அமைப்பின் தெற்கு, மத்திய ஆசியாவின் பிரதிநிதியாக உள்ளார். இவரின் முயற்சியால்தான் கடந்த 2016-ம் ஆண்டு, டெல்லியில் வேளாண் உயிரினப் பன்மையின் (அக்ரோ பயோடைவர்சிட்டி) முதல் மாநாடு நடைபெற்றது.

சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரிடம், வேளாண் உயிரினப் பன்மையின் முக்கியத்துவம் குறித்து உரையாடியதிலிருந்து…

“தோட்டக்கலைத் துறை தொடங்கப்படுவதற்கு முன்புவரை, நமது வேளாண்மைத் துறை சுமார் 26 கோடி டன் அளவுக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்துவந்தது. தோட்டக்கலை வந்த பிறகு, உணவு தானியங்களின் உற்பத்தியின் அளவைவிட, பழங்கள் - காய்கறிகள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட ஆரம்பித்தன. அவற்றின் அளவு சுமார் 28 கோடி டன்.

ஆனால், இன்று நமது விவசாயக் கொள்கைகள் எல்லாம், உணவு தானியங்களைப் பெருக்குவதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதனால் கனிகள், காய்கறிகள், சிறுதானியங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதைக் குறைத்துவிட்டோம். இது ஒரு வகையில், பசுமைப் புரட்சியின் விளைவுதான்!” என்று சொல்லும் கிருஷ்ண குமார், அதற்கான காரணத்தையும் ஆழமாக விளக்குகிறார்.

“60-களில் இந்தியாவில் மழை பொய்த்துப் போய் பஞ்சம் ஏற்பட்டது. உணவுக்காக வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றைய மத்திய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியம், வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரால் ‘பசுமைப் புரட்சி’ கொண்டு வரப்பட்டது.

‘பசுமைப் புரட்சி’ வந்த பிறகே, நமது நாடு பிச்சைப் பாத்திரமாக இருந்த நிலையிலிருந்து, அட்சயப் பாத்திரமாக மாறிய நிலை உருவானது. தன்னிறைவு பெற்றுவிட்டதாக நம்பினோம்.

அந்த நேரத்தில்தான் ரேச்சல் கார்சனின் ‘மவுன வசந்தம்’ நூல் வெளியானது. அதன்மூலம் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தீமைகள் பற்றி நமக்குத் தெரியவந்தது. பசுமைப் புரட்சியின்போது உணவு உற்பத்தியை அதிகப்படுத்துவதில் இருந்த கவனம், அதிகப்படியான ரசாயனப் பயன்பாட்டின் மீது இருக்கவில்லை. அதிக அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால், இன்று கெடுதல் செய்யும் பூச்சிகள் அந்த ரசாயனங்களையே எதிர்க்கும் தன்மையைப் பெற்றுவிட்டன. இத்தனைக்குப் பின்னாலும், நம்மிடையே இருக்கும் 1 சதவீதப் பூச்சிகள் மட்டுமே கெடுதல் செய்பவை என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

எனினும், பசுமைப் புரட்சியை நாம் முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. அதனால் நாம் அடைந்த நன்மைகள் அதிகம். நாம் இழந்தவையும் அதிகம். மண் வளம், நீர் வளம், விவசாயம் செய்வதற்கான நிலம், விவசாயத்தின் மீது இளைஞர்களுக்கு இருந்த ஆர்வம் போன்றவற்றை இழந்தோம். அதேபோல முறையான உணவுப் பொருள் விநியோகம் இல்லாமை, பயிர் இழப்பைக் குறைக்க முடியாமல் போவது போன்ற பிரச்சினைகளாலும் நாம் திண்டாடுகிறோம்.

இந்தப் பிரச்சினைகளிலிருந்து விவசாயத்தை மீட்பதுதான், வேளாண் உயிரினப் பன்மையின் முக்கிய நோக்கம்!” என்றார்.

ஆச்சரியம் என்னவென்றால், ‘பசுமைப் புரட்சி’யின் காரணகர்த்தாவான எம்.எஸ்.சுவாமிநாதன், வேளாண் உயிரினப் பன்மை அமைப்பு தோன்றுவதற்கும் காரணமாக இருந்திருப்பதுதான்.

உலகிலுள்ள தாவர வளங்களைக் காப்பதற்காக 1974-ம் ஆண்டு தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச வாரியம், சுவாமிநாதனின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. அப்போது ஐ.நாவின் துணை அமைப்பான உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், இதன் தலைமைச் செயலகமாக இருந்தது. இந்த அமைப்பு 1991-ம் ஆண்டு, தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச நிறுவனம் என்று பெயர் மாற்றப்பட்டது. பிறகு, 2006-ம் ஆண்டு இது சர்வதேச உயிரினப் பன்மை அமைப்பாகப் (பயோடைவர்சிட்டி இண்டர்நேஷனல்) பெயர் மாற்றப்பட்டது.

“பசுமைப் புரட்சியின் வருகைக்குப் பிறகு, நம்மிடையே இருந்த நெல் வகைகள், கோதுமை வகைகள், சிறுதானிய வகைகள், விதவிதமான உணவுப் பழக்க நடைமுறைகள், கால்நடை வகைகள் போன்றவற்றின் எண்ணிக்கை குறைந்தது. இன்று நம்மிடையே நான்கு முதல் ஆறு நெல் வகைகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றைக் கொண்டுதான் உலகின் 70 முதல் 80 சதவீத உணவு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

மிகவும் ஆழத்துக்குச் சென்றுவிட்ட நிலத்தடி நீரின் அளவை உயர்த்தாமலோ காடுகளின் பரப்பளவை அதிகரிக்காமலோ நம்மால் விவசாயத்தைக் காப்பாற்ற முடியாது. ஆனால், இவை எல்லாவற்றுக்குமே மண் வளம்தான் அடிப்படை!

‘நிலத்தின் முதல் 6 அங்குலத்தில் இருக்கும் மண்ணைவிட, விலைமதிப்பற்ற செல்வம் வேறு எதுவும் ஒரு நாட்டுக்கு இருக்காது’ என்றார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன். அதை எப்போது மனிதர்கள் மறந்தார்களோ அப்போது விவசாயத்துக்குத் தொந்தரவுகள் ஆரம்பித்தன!” என்கிறார்.

“எதிர்காலத்தின் தேவைகளை, விருப்பங்களைச் சமரசம் செய்துகொள்ளாமல் நீண்ட காலத்துக்கான வளங்குன்றா வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் எங்களின் லட்சியம். அதன் முதல்படியாக, மனித மேம்பாட்டுக் குறியீடுபோல, ‘வேளாண் உயிரினப்பன்மை வளக் குறியீடு’ (அக்ரோ பயோடைவர்சிட்டி இண்டெக்ஸ்) எனும் குறியீட்டை உருவாக்க உள்ளோம்.

எவ்வாறு மாசுபாடு அளவிடப்படுகிறதோ அதுபோல நாட்டில் இருக்கும் நிலம், நீர், காடு, மண், கால்நடைகள், தாவரங்கள் போன்ற வளங்களை அளவிட இருக்கிறோம். அதன் மூலம் ஊட்டச்சத்து, உணவு உற்பத்தி, விதைப் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும்.

பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் வாழையைத் தாக்கும் ‘டிராபிகல் ரேஸ் 4’ எனும் நோய் பரவிவருகிறது. அந்த நோய், இந்தியாவுக்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதுதான், இப்போதைக்கு எங்கள் அமைப்பின் குறிக்கோள்!” என்று விடைகொடுத்தார் கிருஷ்ண குமார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in