அந்தமான் விவசாயம் 38: உப்புத்தண்ணீர் குடித்து வளரும் ஆடுகள்

அந்தமான் விவசாயம் 38: உப்புத்தண்ணீர் குடித்து வளரும் ஆடுகள்
Updated on
2 min read

தாவரங்கள் அருகிய மணல் பரப்பு முதல் அடர்ந்த காடுகள்வரை வாழும் திறன் படைத்தவை ஆட்டினங்கள். நிலமற்றோரும் பரந்த புல்வெளியுடைய பண்ணையாளர்களும் பயன்பெறும் தொழில் ஆடுவளர்ப்பு என்றால் மிகையில்லை.

இறைச்சி, தோலின் சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிடுகையில் மற்ற கால்நடைகளைவிட ஆட்டின் மதிப்பு அதிகம். உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டினங்கள் இனம் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஏறக்குறைய 20 சதவீதம் இந்தியாவில் உள்ளன. அந்தமான் தீவுகளின் கால்நடை வளத்தில் மூன்றில் ஒருபங்கு ஆடுகளே. இவற்றில் வங்காள, மலபாரி, பெரல், தெரசா இன ஆடுகள் குறிப்பிடத்தக்கவை.

பெரல் ஆடுகள்

பேரண்ட், நார்காண்டம் தீவுகளில் பெரல் வகை ஆடுகள் (கால்நடையாக இருந்து காட்டுக்குத் திரும்பியவை) காணப்படுகின்றன. இந்தியாவில் நெருப்பை வெளியிடும் ஒரேயொரு எரிமலை பேரண்ட் தீவில் அமைந்துள்ளது. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், பெரல் ஆடுகள் உப்புநீரைக் குடித்தும் எரிமலைத் தீவில் வளரும் தாவரங்களை உண்டும் உயிர் வாழ்வது ஆச்சரியமான செய்தி.

மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த இன ஆடுகள் சுத்தமான நீரும் உப்புநீரும் 1: 4 என்ற விகிதத்தில் கலந்துள்ள நீரை குடிக்கின்றன எனத் தெரியவந்துள்ளது. இந்த ஆடுகள் காலை, மாலை நேரத்தில் மட்டுமே மேய்கின்றன. இவை 1 முதல் 2 குட்டிகளை ஈனும், வளர்ந்த ஆடுகள் 25 முதல் 30 கிலோ எடையுள்ளவை. இவற்றின் இறைச்சி வங்காள இன ஆடுகளைப் போன்றே சுவையானது.

தெரசா ஆடுகள்

நிகோபார் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள தெரசா தீவில் இனம் கண்டறியப்பட்ட ஆடுகள் தெரசா ஆடுகள். தற்போது இந்த வகை ஆடுகள் தெரசா, பம்பூகா, கார்நிகோபார் , கட்சால் தீவுகளில் பரவிக் காணப்படுகின்றன. இவை ஊரின் பொது மேய்ச்சல் நிலத்தில் மேயவிட்டு வளர்க்கப்படுகின்றன. மிகவும் துரிதமாக வளர்ச்சி அடையும் தெரசா இன ஆடுகள், பொதுவாக 6 மாதத்துக்குள் பருவத்தை எட்டிவிடுகின்றன. இவை ஒருமுறைக்கு 2 முதல் 3 குட்டிகள்வரை ஈனும். வளர்ந்த ஆடு 50 முதல் 60 கிலோ எடையைக் கொண்டிருக்கும். இந்த ஆடுகள் பல தொற்றுநோய்களுக்கு எதிர்ப்பாற்றல் கொண்டவை.

பொருளாதாரப் பயன்

ஆடுகள் வலுவான பற்களைக்கொண்டு சிறு புற்களைக்கூட வேருடன் பிடுங்கித் தின்றுவிடுவதால் மலைச்சரிவுகள், மழையளவு குறைவாக உள்ள பகுதிகளில் சூழலியல் சீர்கேட்டை விரைவுபடுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால், பெரும்பாலான இடங்களில் தீவனத் தட்டுப்பாடும் போதிய மேய்ச்சல் நிலம் இன்மையுமே முக்கியக் காரணங்களாகும். பசுமை படர்ந்துள்ள அந்தமானைப் பொறுத்தவரை முறையாக வளர்க்கப்படும் ஆடுகள், நிலமற்ற ஏழைகளுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயிகளுக்கும் பொருளாதாரப் பயன் தரவல்லவை என்பதே ஆராய்ச்சி முடிவு.

பொதுவாகத் தெருவில் விடப்படும் ஆடுகள் நோய்க்கு உள்ளாவதோடு போதிய வளர்ச்சியை எட்டுவதில்லை. போதிய மேய்ச்சல், பராமரிப்பு, நோய்க் கண்காணிப்பு ஆகியவற்றுடன் வளர்ப்பதற்குத் தகுந்த ஆட்டினங்கள் விவசாயிகளிடம் இருக்குமானால், நிலமற்றோரும் ஆட்டுப்பண்ணைகள் மூலம் அதிக லாபம் பெற முடியும் என்பதில் ஐயமில்லை.

(அடுத்த வாரம்: பன்றி ஜல்லிக்கட்டு!)
- கட்டுரையாளர்,
இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: velu2171@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in