

பன்றிகள் என்றாலே சுகாதாரமற்ற முறையில் உணவுக்காக அலைந்து திரியும் விலங்குகள் என்றுதான் பலரும் நம்புகின்றனர். ஆனால், பன்றி இனங்கள் வெப்பமண்டல நாடுகள் முழுவதிலும் இயற்கையாகக் காடுகளிலும், வளர்ப்பு விலங்காகவும் பரவிக் காணப்படுகின்றன என்பதே உண்மை. தமிழ் இலக்கியங்களில் வேடர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் பன்றிகள் இடம்பெற்றுள்ளன. இதன் உச்சமாக விஷ்ணுவின் அவதார உருவமாகவே பன்றி சித்தரிக்கப்பட்டுள்ளது.
மூவகை இனங்கள்
அந்தமான் - நிகோபார் தீவுகளில் பொதுவாக மூன்று வகைப் பன்றி இனங்கள் உள்ளன. அந்தமான் இனத்தைச் சேர்ந்தவை கறுப்பு நிறப் பன்றிகள். காட்டுக்குள் வாழும் இவ்வகைப் பன்றிகளை பாதுகாக்கப்பட்ட விலங்காக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை ஜராவா பழங்குடியினரின் முக்கிய உணவும்கூட.
இரண்டாவதாக, நிகோபார் தீவு முழுவதும் பரவிக் காணப்படும் நிகோபாரின பன்றிகள். இவை இளம்பழுப்பு, கறுப்பு நிறம் கொண்டவை. இவை நிகோபாரி, ஓங்கி, சோம்பென் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினரின் விருப்ப உணவாகும். இத்தீவில் குடியமர்ந்தோர் விரைவாக வளரும் கலப்பினப் பன்றிகளை வளர்க்கிறார்கள். இவ்வகை பன்றிகள் வெள்ளை யார்க்ஷையர் கறுப்பினப் பன்றிகளின் கலப்பாகும்.
உள்நாட்டுப் பன்றிகள்
அந்தமான் - நிகோபாரின பன்றிகள் இத்தீவுகளில் நிலவும் அதிக வெப்பம், மழையளவைத் தாங்கி நன்கு வளரும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு நிகோபார் பழங்குடி கூட்டுக் குடும்பத்துக்கும் தனித்தனியாக பன்றிக் கூட்டங்கள் இருக்கும். இவை குறியீடுகள் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.
நிகோபாரின பன்றிகள் பகல் நேரங்களில் காட்டுக்குள்ளும் தென்னந் தோப்பிலும் மேய்கின்றன. மாலை நேரத்தில் பழங்குடியினர் மூங்கிலால் ஒலி எழுப்பி பன்றிகளை அழைத்து தேய்காய், சேகரிக்கப்பட்ட பழங்களை உணவாகத் தருகின்றனர். குட்டி போட்ட பன்றிகள் இரவு நேரத்தில் வீட்டின் கீழ்ப்பகுதியில் தங்கிவிடுகின்றன. இவை ஒருமுறைக்கு 6 முதல் 8 குட்டிகள்வரை ஈணும். வளர்ந்த பன்றியின் உடல் எடை 8-வது மாதத்தில் 60 முதல் 80 கிலோவரை இருக்கக்கூடும்.
ஜல்லிக்கட்டு
நிகோபாரின பன்றிகள் பழங்குடியினரின் கலாச்சாரத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. திருமணத்தில் சீதனமாகவும் விழாக்களின்போது பரிசுப் பொருளாகவும் தரப்படுகின்றன. பழங்குடியினர் கொண்டாடும் பெருநாள் விழாவின்போது, தமிழ் மக்கள் கொண்டாடும் ஏறுதழுவுதலைப் போன்று, கூரிய பற்களும் மூர்க்கமும் கொண்ட ஆண் பன்றிகளை அந்தமான் இளைஞர்கள் பிடிப்பது இங்கே வீர விளையாட்டு.
மற்ற திருவிழாக்களின்போது காட்டின் மையப் பகுதியில் மேயும் பன்றிகளைப் பிடித்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. ஆனால், இவர்கள் ஒருபோதும் தேவைக்கு அதிகமாக பன்றிகளைக் கொல்வதில்லை. எனவேதான் இவற்றின் எண்ணிக்கை இன்றளவும் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை.
பாரம்பரிய அறிவியல்
பொதுவாகத் தீவின் மையப்பகுதியில் பன்றிகள் இனப்பெருக்கம் இயற்கையாக நடக்கிறது. அடுத்து அமைந்துள்ள தென்னந்தோப்புக் காட்டுப் பகுதியில் கிழங்கு, மற்ற உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன. மாலை நேரத்தில் நீர் மற்றும் பராமரிப்பு, பன்றிக்குட்டிகள் நன்கு வளரும்வரையில் உணவு, பாதுகாப்பான தங்கும் இடம் தந்து பராமரிப்பது பழங்குடியினரின் பாரம்பரிய அறிவியல்.
சந்தைப்படுத்தப்படாத நிகோபாரினப் பன்றிகள் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதோடு அவர்களின் சமூகப் பொருளாதார வாழ்வின் ஓர் அங்கமாகவும் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன.
(அடுத்த வாரம்: கலப்பின பன்றி வளர்ப்பு முறை)
- கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின்முதுநிலை ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: velu2171@gmail.com