

வியாபார நோக்கில் வளர்க்கப்படும் பன்றிகள் மூங்கில், அல்லது பனை மரத்தால் செய்யப்பட்ட தொழுவத்தில் வளர்க்கப்படுகின்றன. தொழுவத்தின் பக்கச் சுவர்கள் 4 – 5 அடி இருக்க வேண்டும்.
பன்றிகளின் உடலில் மிக குறைவான வியர்வை சுரப்பிகள் மட்டுமே உள்ளன. வெப்பம் அதிகம் உள்ள சூழ்நிலையில் அவற்றின் உடலிலுள்ள அதிக வெப்பத்தை வெளியேற்றியாக வேண்டும். இதற்கு ஆழம் குறைந்த சிறிய சிமெண்ட் தொட்டிகளைக் கட்டித் தருவதன் மூலம், அவற்றில் பன்றிகள் படுத்துக்கொள்ளும்.
குட்டி பராமரிப்பு
பன்றிகள் விரைவாக வளர்ந்து 6 முதல் 8 மாதங்களில் பருவத்துக்கு வருகின்றன. தாய்ப் பன்றிகள் குட்டிகளை ஈணுவதற்கு 3-4 நாட்கள் முன்னதாகத் தனி தொழுவத்தில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. கலப்பினப் பன்றிகள் ஒருமுறைக்கு 7 முதல் 10 குட்டிகள்வரை ஈணும். பிறந்த குட்டிகள் 2 முதல் 5 கிலோ எடை இருக்கலாம். இவற்றுக்கு உடனடியாக இரும்புச் சத்து தரப்பட வேண்டும்.
குட்டிகள் 5-7 வாரங்களில் தாயிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. சரியான நேரத்தில் குடற்புழு நீக்க மருந்துகள் தரப்படுகின்றன. இப்பன்றிகள் பன்றித் தீவனம் மட்டுமல்லாமல் காட்டு முந்திரி, மக்காச்சோளம், தீவனத் தட்டை, மல்பெரி, கிழங்கு வகைகளை உண்கின்றன. நுணா பழங்கள் இவற்றுக்குச் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
இறைச்சியும் உரமும்
வளர்ந்த பன்றிகளின் எடை 110 முதல் 130 கிலோவரை எட்டக்கூடும். அந்தமானில் இதன் இறைச்சி கிலோ 250 முதல் 350 ரூபாய்வரை விற்பனையாகிறது. சுகாதாரமான முறையில் கூட்டுப் பண்ணையத்தில் வளர்க்கப்படும் பன்றிகள் இரண்டு ஆண்டுகளில் சராசரியாக மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை பொருளாதாரப் பலன்தர வல்லவை.
மேலும், பன்றிப் பண்ணைகளிலிருந்து பெறப்படும் தொழுஉரம் அதிகளவு மணிச்சத்தும் தழைச்சத்தும் கொண்டது. இவை மக்கிய உரம் தயாரிப்பதிலும் பண்ணையின் அங்ககக் கழிவு சுழற்சிக்கும் பயன்படுகிறது. முதன் முதலாக பன்றி வளர்க்க விரும்புபவர்கள் அருகில் உள்ள கால்நடை பண்ணையிலிருந்து நல்ல தரமான பன்றி இனத்தை வாங்குவது நல்லது.
- கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: velu2171@gmail.com