பறவையைக் காப்பாற்றிய நெசவு!

பறவையைக் காப்பாற்றிய நெசவு!
Updated on
1 min read

காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடுபவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச அங்கீகாரம், ‘வைட்லி விருது’. ‘பசுமை ஆஸ்கர்’ என்று இந்த விருது போற்றப்படுகிறது. சுற்றுச்சூழலியலாளர் எட்வர்ட் வைட்லி தொடங்கிய ‘வைட்லி ஃபண்ட் ஃபார் நேச்சர்’ எனும் அமைப்பால், 1994-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

சுமார் 29 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்ட இவ்விருது, கர்நாடகத்தைச் சேர்ந்த சஞ்சய் குப்பி மற்றும் அசாமைச் சேர்ந்த பூர்ணிமா பர்மன் ஆகியோருக்கு இந்த ஆண்டு கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் புலிகளின் வழித்தடங்களைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக சஞ்சய் குப்பிக்கும், அசாமில் பெருநாரைகளைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகளுக்காக பூர்ணிமா பர்மனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மைசூரில் உள்ள ‘நேச்சர் கன்சர்வேஷன் ஃபவுண்டேஷன்’ அமைப்பில் ஆய்வாளராக உள்ள சஞ்சய் குப்பி, கர்நாடக மாநில காட்டுயிர் வாரிய உறுப்பினர். சிறந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரும்கூட. அந்த மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கியமான சரணாலயங்களில் மரம் வெட்டுவதைத் தடுப்பது, மனித - விலங்கு எதிர்கொள்ளல் நிகழ்வுகளைக் குறைப்பது, காட்டின் பரப்பை அதிகரிப்பது, புலிகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் புலிகளைக் காக்க சஞ்சய் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பலனாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘ஆரண்யக்’ எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் அசாம் உள்ளூர் பெண் நெசவாளிகள் நெய்த பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்து, அதில் கிடைத்த தொகையைக்கொண்டு பெருநாரைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால், பூர்ணிமாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இயற்கையை எப்படிப் பாதுகாத்தாலும் பாராட்ட வேண்டும் தானே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in