

‘விசும்பின் துளி வீழின் அல்லால் பசும்புல்
தலை காண்பது அரிது'
என்பார் வள்ளுவப் பெருமான். மழைத்துளி இல்லை எனில் சிறு புற்கள்கூட முளைக்க முடியாது என்பதே இதன் பொருள். நீரை முதன்மையாகப் போற்றிய மரபு நம்முடையது. பண்ணை உருவாக்கத்திலும் நீரின் பங்கு மிகவும் இன்றியமையாதது, மழைப்பொழிவாகவும் பனிப்பொழிவாகவும் மண்ணில் நீர் சேருகிறது. இது தவிர ஆறுகள், கிணறுகள் போன்றவற்றின் மூலமாகவும் பண்ணைக்கு நீர் கிடைக்கிறது.
பொழிவில் மாற்றங்கள்
பொழிவு என்று எடுத்துக்கொண்டால் மழைப்பொழிவும் பனிப்பொழிவும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. கடல், ஏரி முதலிய பெரிய நீர்ப் பரப்புகளிலிருந்து ஆவியான நீர், மேகமாக மாறுகிறது. மேகக்கூட்டம் காற்றின் மூலம் பரவி எங்குக் குளிர்கிறதோ அவ்விடத்தில் மழையாகப் பொழிகிறது.
உலகச் சராசரி மழைப் பொழிவு 860 மில்லிமீட்டர். இதில் உலகிலேயே ஒரே மாதத்தில் அதிக மழை பெறும் சிரபுஞ்சி முதல் வறண்ட சகாரா பாலைவரையிலான பல்வேறுபட்ட நிலப்பகுதிகள் அடங்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை சராசரியாக 900 முதல் 950 மி.மீ. பொழிவு உள்ளது. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு மழைப்பொழிவில் மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன. மழை நாட்கள் குறைகின்றன, அத்துடன் குறைந்த நாளில் பெய்யும் மழையின் செறிவு அதிகமாக இருக்கிறது. இதனால் திடீர் வெள்ளம் வருகிறது.
அழிந்துவரும் மரபு அறிவு
தமிழகத்துக்குள்ளேயும் மழைப்பொழிவு இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 1,400 மி.மீ. மழைப்பொழிவு பெறும் குமரி மாவட்டமும் 660 மி.மீ. மழைப் பொழிவு பெறும் தூத்துக்குடி மாவட்டமும் உள்ளன. ஆகவே, சராசரியாக எடுத்துக்கொண்டால் உலகச் சராசரியைவிட கூடுதலாகத் தமிழகம் மழைப்பொழிவைப் பெற்றாலும், இடத்தின் அடிப்படையில் குறைவாக மழை பெறும் இடங்களும் நம் பகுதியில் உள்ளன.
ஆகவே மழையைச் சேகரித்து அதை முறையாகப் பயன்படுத்துவது மிகவும் அடிப்படையானது. எனவேதான், நமது முன்னோர் ஏரிகளையும் குளங்களையும் பெருமளவில் உருவாக்கியிருந்தனர். மழை நீரைச் சேகரிக்கும் உழவியல் முறைகளையும் பயன்படுத்திவந்தனர்.
ஆனால், அந்த மரபு அறிவு இன்றைக்கு வேகமாக அழிந்துவிட்டது. மிகச் சில இடங்களில் அந்த அறிவு எஞ்சியுள்ளது. பண்ணை உருவாக்கத்தில் மழையின் பங்கு மறுக்க முடியாத இடத்தை வகிக்கிறது. பயிர்களின் வளர்ச்சிக்கும் விளைச்சலுக்கும் இதுவே ஆதாரமாக விளங்குகிறது.
மூன்று வகை மழை
குளிர்ந்த காற்று பெரும் மலை முகடுகளுக்கு உயர்ந்து எழுவதால் மேகங்கள் உருவாகி மழைப் பொழிவுக்குக் காரணமாகிறது. மழைப்பொழிவில் இது ஒரு முறை.
வெப்பக் காற்று, குளிர்ந்த காற்றுத் திரட்சிகள் துருவங்களின் மீது சுழன்று ஒருவகையான தட்பவெப்பத்தை உருவாக்குகின்றன. இதன் மூலமும் மழை கிடைக்கும். வழக்கமாக வெப்பக்காற்று மேலே எழுந்து அவை மேகங்களாக மாறி நகர்ந்து, பின்னர்க் குளிர்ந்து மழையாகப் பொழியும். இந்த மூன்று முறைகளிலும் மழை கிடைக்கும்.
பயிர் மூழ்கத் தேவையில்லை
பொதுவாகவே பயிர்களுக்கு நீர் தேங்கி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈரப்பதமே போதுமானது. அதிக நீர் தருவதும் பயிர்களுக்கு நல்லதல்ல. நாம் நீருள் மூழ்கி இருக்கும்போது எப்படி மூச்சுவிட முடியாதோ, அப்படியே வேர்களும் திணறும். ஏனெனில் வேர்களும் மூச்சுவிடுகின்றன. அதனால் அதிக நீர் விடும்போது அழுகல் நோய் வருவதற்கான சாத்தியம் உண்டு. எனவே, ஈரப்பதத்தை மட்டும் கணக்கில் கொண்டால் போதுமானது.
(அடுத்த வாரம்: பயிருக்குப் பனிநீர் அறுவடை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com