நெல்லை: கன்னியாகுமரியில் ஒரு ‘நம்மாழ்வார்’

நெல்லை: கன்னியாகுமரியில் ஒரு ‘நம்மாழ்வார்’
Updated on
2 min read

இருபத்தி நான்கு மணி நேரமும் பரபரப்பான வாழ்க்கைச் சூழல், மாவட்டத்தின் ஏதோ ஒரு மூலையில் சின்ன அசம்பாவிதம் நடந்தாலும் பொறுப்பெடுத்து செயல்பட வேண்டிய கடமை, சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு என்று வாழ்க்கை விறு, விறுன்னு கடந்து செல்கிறது. அதற்கு மத்தியில் வீட்டுத் தோட்டம் தான் இளைப்பாறுதல் தருகிறது என்று ஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்துகிறார் கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்.

வீட்டுத்தோட்டம்

பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் பேசிய அவர், எனக்கு சொந்த ஊரு நாகை மாவட்டம், தத்தன்குடி கிராமம். எங்கள் குடும்பத்தின் பூர்வீகத் தொழில் விவசாயம். சின்ன வயதில் அப்பாவுடன் தோட்டத்திற்கு சென்று வேலை பார்த்திருக்கேன். பள்ளி விடுமுறை நாள்கள் எனக்கு தோட்டத்தில் தான் கழியும். இன்னிக்கும் எங்க அம்மா சரோஜா, ஊரில் விவசாயம் பார்த்திட்டு தான் இருக்காங்க.

நானும் அரசுப் பணியில் மாற்றலாகிப் போகும் ஊர்களில், என்னால முடிந்த அளவிற்கு விவசாயத்தை வீட்டுத் தோட்டமாகவாவது பண்ணிட்டு தான் இருக்கேன். இன்னிக்கு சந்தைக்கு வரும் பொருள்களில் ரசாயனம் அதிகமாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் என்று சாப்பிடும் காய்கறிகள் கூட அபாயமாகி விடுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு இயற்கை விவசாயம் தான்னு நினைத்தேன். அதன் வெளிப்பாடு தான் வீட்டுத்தோட்டம்.

மா, தென்னை மரங்கள்

கன்னியாகுமரி வந்ததும் முதலில், மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் பட்டியலைப் பார்த்தேன். அடுத்ததாக வீட்டுக்குப் பின்புறம் தோட்டம் போட இடம் இருக்கான்னு பார்த்தேன். வீட்டுக்குப் பின்னால் இரண்டரை ஏக்கரைப் பார்த்ததும் குதூகலமாயிட்டேன். அதிலும் முழுக்க செம்மண் பூமி. அதில் தனியாக 5 சென்ட் ஒதுக்கி கீரை, காய்கறி தோட்டமா மாத்திட்டேன்.

கடந்த டிசம்பர் மாசம் தான் கன்னியாகுமரிக்கு வந்தேன். தற்போது, நாகர்கோவில் வீட்டின் பின்னால் இருந்த இடத்தில் பெங்களூரா, பங்கனப்பள்ளி ரக மா மரங்கள் 25 நிற்கின்றன. இதுதவிர 25 தென்னை மரம், சப்போட்டா, கொய்யா , நெல்லி, வாழை என்று ஏராளமான மரங்கள் வளர்த்துள்ளேன். என் மகன் இமயவர்மன் பிறந்த நாளுக்கு புதுசா 27 தென்னை மரங்கள் நட்டோம். வீட்டுத் தோட்டத்தில் முளைக் கீரை, அரைக் கீரை, வெண்டை, கத்திரி, கொத்தவரை, மிளகாய், வெந்தயக்கீரைன்னு வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை போட்டுருக்கேன்.

கால்நடை வளர்ப்பு

ஒரே வகை காய்கறிகளை வரிசையா நடவு செஞ்சா, ஒரு பயிருக்கு நோய் வந்தா மொத்த வீட்டுத் தோட்டத்தையும் காவு வாங்கிடும். இதைக் கட்டுப்படுத்த வெண்டைக்கு அருகில் தக்காளி, அடுத்து கீரை என்று சுழற்சி முறையில் சாகுபடி செய்துள்ளேன்.

பராமரிப்பு என்று பார்த்தால், 15 நாள்களுக்கு ஒருமுறை செடியின் மூட்டுக்கு ஒரு கிலோ வீதம் தொழு உரம் போடுகிறேன். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுகிறேன்.

எனக்கு கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் அதிகம். வீட்டில் 20 நாட்டுக் கோழி, 2 வான்கோழி, கின்னி கோழி மூன்றும் வளர்க்கிறேன். இதோட கழிவுகளை தோட்டத்துக்கு உரமாக்கி விடுவேன்.

மனம் இலகுவாகும்

எங்க வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் எங்க வீட்டிலேயே கிடைத்து விடுகிறது. எவ்வளவு வேலை இருந்தாலும், ஒருமுறை தோட்டத்தை சுற்றிப் பார்த்தால் மனது இல வம் பஞ்சாக மாறிடும்.

தினமும் காலையில் வீட்டுத் தோட்டத்துக்குள் தான் நடைபயிற்சி செய்வேன். நாம நட்டு வைச்ச செடியும், மரமும் நமக்கு நேரே வளர்ந்து நிற்பதை பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வேற எதுல இருக்கு? என்று நம் மனதிலும் கேள்வியை விதைத்து விடை கொடுத்தார் எஸ்.பி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in