

விதை – வேளாண்மையின் ஆணிவேர். நமது மரபில் பல்வேறு தாவர, பயிர்களின் விதைகள் காலம்காலமாகக் காப்பாற்றப்பட்டும், மறுஉற்பத்தி செய்யப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் வந்துள்ளன. இதைச் செய்தவர்கள் ‘அறிவியல் அறிவற்றவர்கள்’ என்று இகழப்பட்ட சாதாரண விவசாயிகள்.
ஆனால், பசுமைப் புரட்சிக்குப் பிறகு வீரிய விதைகள் என்ற பெயரில் கலப்பின விதைகளை பெருமளவில் அரசு நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதைகள் அமோக விளைச்சல் தரும் என்று முன்மொழியப்பட்டது. விளைச்சல் கிடைத்தது, ஆனால் அதற்காக நாம் இழந்த இயற்கை வளங்கள், சீர்கெட்ட சுற்றுச்சூழல் பற்றி முழுமையாகப் பேசப்படவில்லை. இதனால் நாம் இழந்தவற்றில் முக்கியமானவை பாரம்பரிய விதைகள்.
விதைப் பாதுகாவலர்கள்
நமது பாரம்பரிய விதைகளைச் சேகரிக்கும், மறுஉற்பத்தி செய்யும் விவசாயிகள் இன்றைக்கும் நாடெங்கிலும் இருக்கிறார்கள். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விதைப் பாதுகாவலர்கள் பங்கேற்கும் தேசிய விதைத் திருவிழா சென்னையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அரிசி, பருப்பு, அவரை, சிறுதானியம், கீரை, காய்கறி, பழ விதைகள் என 2000 வகை விதைகள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்தத் திருவிழாவில் இந்தியாவின் செழுமை மிகுந்த வேளாண் பயிர்ப் பன்மைத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 9-11-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்தத் திருவிழா நடைபெறுகிறது.
யாருக்கு ஊக்கம்?
இன்றைக்கு இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமான காய்கறிகளைத் தேடி உண்ண விரும்புபவர்கள் மாடித் தோட்டங்கள், வீட்டுத் தோட்டங்கள் வழியாக இந்தப் பாரம்பரிய விதைகளை விதைத்துப் பயன்பெற முடியும். உழவர்களுக்கும் வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்கும் இந்தத் திருவிழா பெரும் ஊக்கம் கொடுக்கும்.
- நேயா