

கரையை எப்போதும் நனைக்கும் வெள்ளை நுரைதான், கடற்கரையின் நிரந்தர அடையாளம். ஆனால், சென்னை கடற்கரைகள் இன்றைக்கு முகத்தில் கரியைப் பூசிக்கொண்டதுபோல், கறுப்பேறிக் கிடக்கின்றன. சென்னை கடற்கரைகளில் காணுமிடமெல்லாம் கறுப்பு கச்சா எண்ணெய் மிதந்து, கலந்து, பிரிக்க முடியாத வகையில் ஆக்கிரமித்துக் கிடக்கிறது.
எண்ணூர் துறைமுகத்தில் இருந்து திரும்பிய இரான் நாட்டின் எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள் என்ற கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு வந்த எம்.டி. டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் துறைமுகத்தில் இருந்து ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் மோதிக்கொண்டன. கடலோரப் பாதுகாப்பு படையினர் இரு கப்பல்களையும் மீட்டாலும், மும்பை கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் எண்ணூர் தொடங்கி ராயபுரம் வரையிலான கரையோரப் பகுதிகளில் எண்ணெய் படிந்து காணப்படுவதாகச் செய்தி வெளியானது. நான்கு நாட்கள் கழித்து அந்தக் கடற்கரைப் பகுதிக்கு அதிகாலையில் புறப்பட்டேன்.
பதறிய மனம்
எர்ணாவூர், பாரதியார் நகருக்கு எதிர்ப்புறம் கற்களின் மீது மனிதத் தலைகள் அதிகமாகத் தென்பட்டன. கால்களை வைத்தால் நிற்க முடியாத அளவுக்குப் பாறைகளில் எண்ணெய் படிந்து வழுக்கியது. எச்சரிக்கையுடன் மெல்ல ஏறிச்சென்று கடலைக் கண்டபோது, மனம் பதறியது.
நீலக் கடல் கறுப்பேறி, எண்ணெய் படலம் அடர்த்தியாய்ப் படிந்து மூடியிருந்தது. கரைகளில் இருந்த பாறைகளும் எளிதில் பிரித்துவிட முடியாத கறுப்பு நிறத்தைப் போர்த்திக் கொண்டிருந்தன. எப்போதும் வியக்க வைக்கும் பிரம்மாண்டக் கடல் அன்றைக்குத் தன்னியல்பு இழந்து கிடந்தது. உயிரினங்கள் சுவாசிக்கத் தகுதியற்ற நிலையில் அநாதரவாக நின்ற கடலை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்பகுதி மீனவர்களிடம் பேசியபோது, காற்றோட்டம், அலைகளின் வேகம் காரணமாக அப்பகுதியில் எண்ணெய்ப் படலம் அதிகளவில் சேர்ந்திருந்ததாகத் தெரிவித்தனர்.
பலியான ஆமைகள்
இந்த மோசமான விபத்து கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகப் பெரிய சாவுமணியை அடித்துள்ளது. தமிழகக் கடற்கரைகளில் ஐந்து வகைக் கடலாமைகள் தென்படுகின்றன. இவற்றில் பங்குனி ஆமைகள் (Olive Ridley) டிசம்பர் தொடங்கி ஏப்ரல் மாதம்வரை இனப்பெருக்கத்துக்காகச் சோழமண்டலக் கடற்கரைக்கு வருகை தருகின்றன. ஒடிசா கடற்கரைக்கு அடுத்தபடியாகச் சென்னைக்கே அவை அதிக எண்ணிக்கையில் வருகின்றன. இப்படி வந்த நூற்றுக்கணக்கான ஆமைகள் எண்ணெய் படலத்தால் இறந்திருப்பதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடற்கரைக்கு இனப்பெருக்கத்துக்காக வருகை தரும் பங்குனி ஆமைகள் ஏற்கெனவே பல்வேறு ஆபத்துகளை எதிர்கொண்டு இறந்துவரும் நிலையில், தற்போது நேரிட்டுள்ள எண்ணெய் படலக் கசிவு பங்குனி ஆமைகளின் வாழ்வை ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
தத்தளிக்கும் மீனவர்கள்
நம்முடைய உணவுத் தேவையில் பெருமளவை மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகளே நிறைவு செய்கின்றன. அந்த வகையில் மீன் குஞ்சுகளை உணவாகக் கொள்ளும் சொறி மீன்களை (ஜெல்லி மீன்) பங்குனி ஆமைகள் உணவாக்கிக் கொள்கின்றன. இதன்மூலம் மீன்களின் பெருக்கத்துக்கு மறைமுகமாக அவை உதவுகின்றன. இந்தப் பங்குனி ஆமைகள், சொறி மீன்கள், மிதவை உயிரினங்கள், நுண்ணுயிர்கள், சிறு மீன்கள், இறால்கள் எனப் பல வகை கடல் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளதால், மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறி ஆகியுள்ளது.
எண்ணூர் முதல் ராயபுரம்வரை கடற்கரை நெடுகத் துர்நாற்றம் வீசுவதாலும், மீன்பிடி வலைகள் சேதம் அடைவதாலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதுபோன்று பல்வேறு பாதிப்புகள் 30 ஆண்டுகளுக்கு முன்னால் அடிக்கடி ஏற்பட்டதை நினைவுகூரும் மீனவர்கள், அதற்குப் பிறகு தற்போதுதான் கடலில் எண்ணெய் கொட்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
தற்போது கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெயில் உள்ள வேதிப்பொருட்களால் பின்விளைவுகளை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தால் மட்டுமே கடல் உயிரினங்கள் நீண்டகாலத்தில் சந்திக்கும் ஆபத்தைத் தெளிவாக உணர முடியும். அது மட்டுமில்லாமல் கடல் உயிரினங்களின் இறப்பால், மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி ஆய்வுகளும், பாதிப்பைச் அகற்றும் நடவடிக்கைகளும், பாதிப்பை சீரமைப்பதற்கான செயல்திட்டமும் அவசியம்.
ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் சென்னை மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களது வாழ்வை சில மாதங்களுக்காவது குலைத்துப்போடும் வகையில் இந்த எண்ணெய்ப் படலம் கருமையாகப் படர்ந்திருக்கிறது. இந்த இருள் விலகும் நாள் எப்போது?