கழுவில் ஏற்றப்படும் கழிவெளி

கழுவில் ஏற்றப்படும் கழிவெளி
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொசஸ்தலையாறு, சென்னைக்குக் குடிநீர் தரும் மூன்று ஆறுகளில் முக்கியமானது. அந்த ஆறு சென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில் இருக்கும் கழிவெளியில் (சதுப்பு நிலம்) கடலுடன் கலக்கிறது.

நன்னீர் நிறைந்த இந்தக் கழிவெளிப் பகுதிதான், சென்னையை மூழ்கடிக்கும் வெள்ளநீர் வடிகாலாகவும், சென்னை நிலத்தடி நீருக்கான ஆதாரமாகவும் விளங்குகிறது. எண்ணூர் பகுதியையொட்டி அமைந்திருக்கும் 24 கிராமங்களில் சுமார் ஆறு மீனவக் கிராமங்களுக்கு இந்தக் கழிவெளிதான் வாழ்வாதாரம். காரணம், கடலின் உப்புநீரும் நன்னீரும் சேரும் இந்தப் பகுதியில்தான் மீன்கள், இறால்கள் போன்றவை இனப்பெருக்கம் செய்கின்றன.

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதி, கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பின் கீழ் வருகிறது. இது அவசியம் காப்பாற்றப்பட வேண்டிய பகுதி. 70, 80-களில் தூத்துக்குடி உப்பளங்களுக்குப் பிறகு இந்தப் பகுதியில்தான் அதிக அளவில் உப்பு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்திருக்கிறது.

இப்படிப் பல பெருமைகள் கொண்ட இந்தப் பகுதி, இன்னும் கொஞ்சக் காலத்துக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். காரணம், வடசென்னை அனல் மின்நிலையத்தால் அங்குத் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவை இங்கே ஒளிப்படங்களாக...


அலையாத்தி மரங்கள், வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றக்கூடியவை. அதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் துறைமுகத்தால் கொட்டப்பட்டிருக்கும் மணல்.


பல ஏக்கருக்குப் பரந்து விரிந்துள்ள இந்தக் கழிவெளியை இரண்டாகப் பிரிக்கும் விதமாக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.


அம்பத்தூர் தாலுகாவில் உள்ள சாத்தான்காடு பகுதி இது. புழல் ஏரியின் உபரி நீர் இந்த வழியாகச் சென்று எண்ணூர் கழிவெளியில் சேரும். நிலத்தடி நீர் மட்டத்தைப் பராமரிக்கவும் இந்தப் பகுதி பயன்படுகிறது. ஆனால் அடையாளம் தெரியாத சில நபர்களால், இந்தப் பகுதியில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளிடம் கேட்டால், தங்களுக்குத் தெரியாது என்று கைவிரிப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.


மீன்களும் இறால்களும் இனப்பெருக்கம் செய்யும் இந்தப் பகுதியில் அனல்மின் நிலையத்தால் கொட்டப்பட்டிருக்கும் மரக் கழிவுகள், கண்ணாடித் துண்டுகள், சாம்பல் கலந்த குப்பை.


சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஒரு நிறுவனமும் தன்னுடைய வளாகத்தில் 30 சதவீதப் பரப்புக்கு மரங்கள் அடர்ந்த ‘பசுமைப் பட்டை'யை உருவாக்கிப் பராமரிக்க வேண்டும் என்பது விதி. அனல் மின்நிலையம் அந்த விதியைக் காற்றில் பறக்க விட்டிருக்கிறது. சுமார் 240 ஏக்கர் அளவில் அந்த நிறுவன வளாகத்தில் பராமரிக்கப்பட்டுவந்த ‘பசுமைப் பட்டை'யில் 50 ஏக்கர் அளவுக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in