

வளரும் சூழலுக்கேற்ற வகையில் நன்கு பொருந்திக் zகொள்ளும் தன்மையைத் தாவரங்கள் பெற்றிருப்பதாக அந்தமான் தீவுகளை ஆராய்ந்த தாவரவியல் அறிஞர் பார்க்கின்சன் (1927) பதிவு செய்துள்ளார். இவற்றில் தாழம்பூ, பாதாம், புங்கம் மரங்கள் கடற்கரைச் சமவெளியிலும் மற்றவை மேட்டுப்பாங்கான, தீவின் உட்பகுதியிலும் அதிகம் காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்படும் வேம்பு, சவுக்கு, சுபா புல் போன்றவை அந்தமான் தீவுகளில் ஐரோப்பியர்கள் அல்லது பிற வணிகர்களால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தாவரவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
வேலி விருட்சங்கள்
இத்தீவுகளில் நிலங்களைச் சுற்றி முட்கம்பி அமைப்பதற்குப் பதிலாகக் கால்நடைகளுக்கான தீவனம், மற்றப் பயன்களைத் தரும் மரங்களை நட்டு உயிர் வேலிகள் அமைக்கப்படுகின்றன. நிலத்தைச் சுற்றிச் சற்று அடர்த்தியாக வளரக்கூடிய சீமைஅகத்தி, அகத்தி, முசாண்டா, பேமா, கல்யாணமுருங்கை, சுபா புல் போன்ற மரங்கள் இயற்கை வேலியாக வளர்க்கப்படுகின்றன.
சில இடங்களில் இவற்றில் கொடி வகைக் காய்கறிகளும் படர விடப்படுகின்றன. சில இடங்களில் உயிர்வேலிகளோடு மரக்கட்டைகளும் நடப்பட்டு வலுவான வேலிகள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து குடியமர்த்தப்பட்டோர் இவ்வாறு வேலிகள் அமைப்பதைக் கற்றுக்கொண்டதைப்போல் தோன்றுகிறது. ஆனாலும் நிகோபார், சோம்பென், ஓங்கி இனத்தைச் சேர்ந்த ஆதிகுடிகள் பன்னெடுங்காலமாக இவ்வகை உயிர்வேலிகள் அமைத்தே பன்முகத்தன்மை கொண்ட தோட்டங்களை அமைத்து வருவது வியக்கத்தக்கது. இந்த வேலிகள் காட்டு விலங்குகள், வளர்ப்பு விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்கவும் உதவுகின்றன.
மரங்களின் வளர்ப்பு முறைகள்
அந்தமானில் காணப்படும் பல்நோக்கு மரங்கள் பொதுவாக மூன்று முறைகளில் வளர்க்கப்படுகின்றன. முதலாவதாக இயற்கையில் வளரும் மரக்கன்றுகளைக் கண்டறிந்து, அவற்றை மட்கு நிரப்பப்பட்ட பைகளில் போதிய காலம்வரை வளர்த்து, பின்னர்ப் பண்ணையில் நடவு செய்கிறார்கள். சில நேரம் நேரடியாக இக்கன்றுகளைப் பண்ணையத்தில் நாற்றுப்பண்ணை அமைத்தும் நடவு செய்கின்றனர்.
இரண்டாவதாக, மரத்தின் பாகங்களிலிருந்து நேரடியாகவோ (தண்டுத் துண்டுகள்) அல்லது பதியமிடல் முறையிலோ கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன. மூன்றாவதாகத் தகுந்த தாய் மரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில நேரம் தகுந்த நிலையில் விதைக்கப்பட்டிருந்தாலும், விதைகளின் முளைப்புத்திறன் நூறு சதவீதமாக இருக்காது. விதையின் வயது, முதிர்ச்சிப் பருவம், முளை திறன், நீர், உயிரிய அளிப்பு, வெப்பநிலை ஆகியவை விதையின் முளைப்புத் திறனைக் கட்டுப்படுத்துகின்றன.
சில விதைகள் எளிதாக முளைக்காததற்கு அவற்றின் உறக்க நிலை, ஓய்வு காலம், கடினமான மேல்தோல் ஆகியவையே காரணிகளாகக் கருதப்படுகின்றன. விதைகளைத் தேய்த்தல், நீரில் ஊற வைத்தல், அமில நேர்த்தி செய்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி, விதையின் முளைப்புத் திறனை அதிகரிக்க முடியும்.
(அடுத்த வாரம்: நிரந்தர வருமானம் தரும் பண்ணையம்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com