

இந்தியாவில் இயற்கைப் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து செயலாற்றிவரும் ஆராய்ச்சி அமைப்புகளுள் முதன்மையானது மும்பையில் உள்ள ‘பம்பாய் இயற்கை வரலாற்று கழகம்' (பி.என்.ஹெச்.எஸ்.). இந்த மாதம் 15-ம் தேதியுடன் அந்த அமைப்புக்கு 133 வயது முடிந்து, 134-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
சமீபத்தில் இதைக் கொண்டாடும் வகையில் மும்பையில் விழா நடைபெற்றது. கழகத்தின் 133 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மிஷ்மி மலைத் தொடரில் வாழும் பூர்வகுடிகள், அவர்களுடைய பாரம்பரிய அறிவு மற்றும் அங்குள்ள சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டது.
இயற்கை ஆர்வலர்களுக்காகப் பி.என்.ஹெச்.எஸ். வெளியிடும் ‘ஹார்ன்பில்' எனும் காலாண்டிதழில், இந்தக் கழகத்தில் இயற்கைப் பாதுகாப்புக்காகப் பாடுபட்ட ஆளுமைகளைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய சிறப்பிதழ் ஒன்றும், ‘ஹம்மிங்பேர்ட்ஸ் வால்யூம் 1' எனும் தலைப்பு கொண்ட பறவை தொடர்பான புத்தகமும் வெளியிடப்பட்டன. இந்தப் புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் சங்கீதா காடூர், வைதேகி காடூர் ஆகிய இரண்டு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம்.
பி.என்.ஹெச்.எஸ். இயக்குநர் தீப ஆப்தே, டேராடூன் இந்தியக் காட்டுயிர் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஒய்.வி. ஜாலா, அருணாசலப் பிரதேச மாநிலத்தில் மெகோலாவில் உள்ள ‘இது மிஷ்மி’ பழங்குடி இனக்குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.