அந்தமான் விவசாயம் 27: அந்தமான் தென்னையைத் தேடிய அந்நியர்கள்

அந்தமான் விவசாயம் 27: அந்தமான் தென்னையைத் தேடிய அந்நியர்கள்
Updated on
1 min read

தற்போது சுற்றுலாத் தலங்களில் கிங் கோகனெட் எனப்படும் மஞ்சள், ஆரஞ்சு, பச்சை வண்ணம் கொண்ட இளநீர் வகையைக் காண முடியும். அந்தமான் தீவுகளின் தென்னை வளத்தைக் கண்டோ என்னவோ, 11-ம் நூற்றாண்டில்  விஜயத்தை வெற்றி கண்ட சோழப் படைகள் இத்தீவுகளில் கால் பதித்து இளநீரால் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு, நீரையும் கிழங்கு வகைகளையும் சேகரித்துச் சென்றனர்.

அதற்குப் பின்னர் இடைப்பட்ட காலத்தில் வணிகம் செய்த அரேபியர்களும் ஐரோப்பியர்களும் நிகோபார் தீவுகளை இளநீரும் கொப்பரையும் கிடைக்கும் இடமாகத் தங்கள் வரைபடத்தில் குறித்துக்கொண்டனர். எனவேதான் இயற்கையின் ஓர் அங்கமான தென்னை, இத்தீவுகளின் முகவரி என்றாகிவிட்டது.

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம்

அந்தமான் நிகோபார் தீவுகளில் பொதுவாக இயற்கை வழியிலும் பாரம்பரிய முறையிலும் ரசாயன உரங்கள் இன்றியும் தென்னை வளர்க்கப்படுகிறது. இருப்பினும் அங்ககப் பொருட்கள் சுழற்சி, மண்வளம், போதுமான மழை, வெப்பநிலை ஆகியவை நிலவிவருவதால், சராசரியாக மரத்துக்கு 55 முதல் 70 தேங்காய்கள் ஓர் ஆண்டில் காய்க்கின்றன.

உலக, இந்தியத் துணைக்கண்டத்தின் தேங்காய் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் இது குறைவு. இருந்தாலும் தென்னையிலிருந்து பெறப்படும் பொருட்களின் தரம் உயர்வாக இருப்பதால், இக்குறைபாடு ஈடு செய்யப்படுகிறது. பொதுவாகத் தென்னை விளைச்சலைத் தவிர அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பமே விவசாயிகளுக்கு அதிக லாபம் தரவல்லது.

மதிப்புக்கூட்டுப் பொருட்கள்

தென்னையிலிருந்து சமையலுக்குப் பயன்படும் தேங்காய் பருப்பு (வெள்ளை நிற என்டோஸ்பெர்ம்), இளநீர், தேங்காய் எண்ணெய் போன்றவை கிடைக்கின்றன. உரித்து எடுக்கப்பட்ட நார்ப்பகுதியில் இருந்து பல்வேறு பயன்படு பொருட்கள் பெறப்படுகின்றன.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்நாளில் மதிப்புக் கூட்டப்பட்ட பல பொருட்களும் தென்னையிலிருந்து பெறப்படுகின்றன. குறிப்பாகத் தேங்காய் சீவல், துருவல், மாவு, தேனில் ஊறவைத்த துண்டுகள், தேங்காய் சாஸ், நேட்டோ, தேங்காய் தேன், உலர்ந்த பொடி, செறிவூட்டப்பட்ட இளநீர், கள், பதனீர், வெல்லம், வினிகர் ஆகியவை தேங்காயிலிருந்து சந்தைப்படுத்தப்பட்ட பொருட்களாகும். இவற்றுக்கான தேவை சர்வதேசச் சந்தையில் பெருகிவருவதால் தென்னை விவசாயிகள் பயனடைய முடியும். இருந்தாலும் அந்தமானில் இத்தொழில்கள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன.

(அடுத்த வாரம்: தேங்காய் சந்தைப்படுத்துதல்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிமன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in