Published : 25 Mar 2017 10:45 am

Updated : 16 Jun 2017 14:03 pm

 

Published : 25 Mar 2017 10:45 AM
Last Updated : 16 Jun 2017 02:03 PM

மீன்பிடி தொழில் பற்றி நமக்கு என்ன தெரியும்?

நாம் தினந்தோறும் உட்கொள்ளும் மீன் எங்கிருந்து வருகிறது? யார் இந்த மீன்களைப் பிடிக்கிறார்கள்? எந்த மாதிரியான நிபந்தனைகளுடன் மீன் உற்பத்தி நடக்கிறது? யார், எந்த சூழ்நிலையில், எந்த மாதிரியான கட்டுப்பாடுகளுடன் மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்துவது?

மேலோட்டமாகப் பார்க்கும்போது இக்கேள்விகளுக்கான பதில்கள் சுலபமாகத் தெரியலாம். ஆனால், இவை கடலினும் ஆழமானவை. மீன்பிடி தொழிலைப் பற்றி அறிய வேண்டும் என்றால், மீன்களைப் பற்றியும் மீனவர்கள் பற்றியும் மட்டுமல்லாமல் இந்த இரண்டையுமே முறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மீன்வளத்துறை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.


வெப்பமண்டல மீன் உயிரியல்

வெப்பமண்டலக் கடலில் வாழும் மீன்கள் மிதவெப்ப சூழலில் வாழும் மீன்களுடன் ஒப்பிடும்போது மிகவும் தனித்துவம் மிக்கவை. வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது வெப்பமண்டல மீன்கள் வித்தியாசமானவையும்கூட. ஏனென்றால் மிதவெப்ப மண்டலங்களில் மீன்களிடையே பன்முகத்தன்மை குறைவு. ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கு எதிர்மாறாக வெப்பமண்டலக் கடலில், அதாவது இந்திய, ஆப்பிரிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீன்களின் பன்முகத்தன்மை அதிகமாகவும் மிதவெப்ப கடலுடன் ஒப்பிடும்போது மீன் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.

பருவகால மாற்றத்தால் ஏற்படும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப வெப்பமண்டலத்தில் வாழும் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அதாவது ஒரு சுண்டு விரல் அளவு இருக்கும் நெத்திலி மீனில் இருந்து, மனிதர்களைவிட பெரிதாக வளரும் சுறா மீன்வரை அனைத்து மீன் வகைகளும் ஒரு சில காலகட்டங்களைச் சார்ந்தே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

கரைப் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, கரைப் பகுதியில் உணவு தேட வரும் சில மீன் வகைகள் மிகவும் முக்கியமானவை. இதில் தீவன மீன்களாகத் திகழும் நெத்திலி, மத்தி, பொருவா போன்ற சிறிய மீன் இனங்கள் கடல் உணவு சங்கிலியின் பகுதியாக மட்டும் இல்லாமல், கரையை ஒட்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் முக்கிய உணவுப் பொருளாகவும், அவர்களுக்குத் தினப்படி வருமானத்தை ஈட்டித்தருபவையாகவும் உள்ளன. ஆனால் தற்போது இந்தத் தீவன மீன்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஆனால், இதைப் பற்றி விரிவான அறிவியல், ஆய்வுபூர்வத் தகவல்கள் நம்மிடம் இல்லை. காரணம், நம் மீன்பிடி அறிவியல் சொந்த நாட்டு மீன்களைப் பற்றி ஆழ்ந்து ஆராயாமல், கண்மூடித்தனமாக மேற்கத்திய நாடுகளில் கண்டறிந்த மீன்பிடி அறிவியலையே பயன்படுத்திவருகிறது.

மீனவர்களின் சமூக - பொருளாதார வாழ்க்கை

ஏற்கெனவே சொன்னதுபோல் வெப்பமண்டலக் கடலின் மீன் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, மீனவ மக்களும் வெவ்வேறு முறைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருகின்றர். முக்கியமாகச் சிறுதொழில் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருக்கும் மீனவர்கள் பல மீன் இனங்களைப் பல வகையான வலைகளைப் பயன்படுத்திப் பிடிப்பதை முக்கியமாகச் சுட்டிக்காட்டலாம். உதாரணத்துக்கு - வீச்சு வலை, சாட்டு வலை, பெரிய வலை, மணி வலை, பரு வலை, சூடை/மத்தி வலை, நண்டு வலை போன்ற வெவ்வேறு வலைகளை வைத்து மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. இங்கு இதைச் சுட்டிக்காட்டுவதன் அவசியம் - சிறுதொழில் மீன்பிடித்தலை எப்படி முறைப்படுத்துவது என்பதற்காகத்தான்.

மீன் பன்முகத்தன்மை காரணமாகவும், ஒரு சில பருவகாலங்களில் மட்டும் மீன் பெருகுவதாலும் மீன்பிடிக்கும் தன்மை இந்த மாற்றங்களை ஒட்டியே அமைந்துள்ளது. இதனாலேயே மீன்பிடித்தலை நிச்சயமற்றதாகவும், அதேநேரம் உற்சாகமூட்டும் ஒரு தொழிலாகவும் மீனவர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் கண்ணுக்குத் தென்படாத ஒரு வளத்தைத் தங்கள் திறன்களை மட்டுமே பயன்படுத்திச் சேகரிப்பதுதான். அதேநேரம், ஒரு சில காலத்தில் மட்டும் மீன் கிடைப்பது மீனவச் சமூகங்களின் நிச்சயமற்ற பொருளாதார வாழ்க்கையையும் வெளிப்படுத்துகிறது.

அதுமட்டும் இல்லாமல், ஒரு மீனவன் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடித்தலில் ஈடுபடும்போது தனது வாழ்க்கையைப் பணயம் வைத்துத் தொழில் செய்கிறான். கடலில் இருக்கும்போதோ அல்லது கரையில் ஏதேனும் துன்பம் நேரிட்டாலோ அவர்களைக் காப்பற்ற முன்வருவது யார்? இன்னொரு மீனவன்தான். அதனால்தான் மீனவச் சமூகத்தில் மிகவும் நெருக்கமான பிணைப்புகளைக்கொண்ட உறவைக் காண முடியும்.

தமிழ்நாடு மீன்வளத்துறை: வரலாறு மற்றும் ஆணை

தமிழ்நாட்டின் மீன்வளத்துறை 1905-ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. அப்போதைய ஆங்கிலேய அரசு மீனவர்களின் மீன்பிடி முறை மிகப் பழமையானதாக உள்ளதாகவும், அதை மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் புதிய மீன்பிடி முறைகளை, அதாவது மிதவெப்ப மண்டலத்தில் பயன்படுத்தும் மீன்பிடி முறைகளை ஆராயத் தொடங்கியது. இழுவை மடிகளைப் பொருத்திய விசைப்படகு வைத்து அதிகம் மீன் புழங்கும் இடங்களைக் கண்டறிந்தது.

ஆரம்பகட்ட பரிசோதனைகளை வைத்து அப்போதைய ஆங்கிலேய அரசு இந்தியா இழுவை மடிகள் பயன்படுத்த ஒரு தகுந்த இடமாக இருக்கும் என முடிவு செய்தது. தமிழ்நாடு இழுவை மடிகள் பொருத்திய விசைப்படகைப் பயன்படுத்துவதில் முதல் மாநிலமாகத் திகழ்ந்தது.

நாட்டு விடுதலைக்குப் பின் இந்திய அரசின் முதல் திட்டக்குழுவின் நோக்கம் மீன் வளர்ச்சியை அதிகரித்து, மீனவ மக்களை ஏழ்மையில் இருந்து வெளியே கொண்டுவரத் திட்டமிட்டது. இதற்கு இழுவை மடிகள் பொருத்திய விசைப்படகுகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதை நியாயப்படுத்தியது. ஆனால் ஐந்தாவது திட்டக்குழுவின் முடிவில் மீனவச் சமுதாயங்கள் வறுமையில் தள்ளாடிக்கொண்டிருந்த போதிலும், அந்நியச் செலாவணியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமாக மாறியது.

வளர்ச்சி ஒரு பக்கம் இருக்க மீன்வளத் துறை மீன் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மீன்வளத் துறை மீன் வளத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளும் ஒரே முயற்சி கோடை காலத்தில் 45 நாள் மீன்பிடி தடை விதிப்பது. இந்த 45 நாள் தடைக் காலத்தில் மீன்கள் குஞ்சு பொரிப்பதாகவும், அதைப் பாதுகாக்கவே இந்த மீன்பிடி தடை என்றும் சொல்கிறது மீன்வளத் துறை. இந்த ஒரு விளக்கம் ஏராளமான அனுமானங்களை உள்ளடக்கியது.

ஏனென்றால் எல்லா மீன்களும் இந்த 45 நாட்களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்றன என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தத் தடைக்கால நடவடிக்கை 1983-ல் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பின் கடல் சூழலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் நம் மீன்வளத்துறை அதே பழைய தர்க்கத்தைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை விதிப்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மேற்கூறிய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த 45 நாள் தடைக்காலம் மீன்வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று கருதலாம்.

மீன் வள மேலாண்மை சில எண்ணங்கள்

முதலில் நம் கடலில் வாழும் மீன் இனங்களைப் பற்றி நமக்குப் பெரிதும் தெரியாது என்பதை ஒத்துக்கொள்வது நல்லது. இது வெப்பமண்டல மீன் சூழலியல் பற்றி ஆழ்ந்து ஆராயவும், புரிதலை மேம்படுத்தவும் சில வாய்ப்புகளை ஈட்டித்தரும். நிறைய மீன் இனங்கள் இப்பொழுது காணாமல் போய்விட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீன்பிடித்தலை முறைப்படுத்த முதலில் மீன் உயிரியலைப் பற்றி அறிய வேண்டும். அதாவது மீன் என்ன உணவை உட்கொள்கிறது, பருவநிலைக்கு ஏற்ப எங்கு நீந்துகிறது, எந்தக் காலகட்டத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு, சில மீன் இனங்களைப் பற்றித் தகவல் கிடைத்தாலும் பெரும்பாலான மீன்களைப் பற்றி நமக்குத் தகவல்கள் இல்லை. இதை முழுமையாக அறிந்தால் எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த வகையான வலைகளைப் பயன்படுத்த வேண்டும், எவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்பதை அறிய முடியும்.

இரண்டாவதாக, மீனவச் சமூகங்களின் கொள்கை-உருவாக்கம் செயல்முறைகளில் பங்கேற்பது. இந்தியாவைப் பொறுத்தவரை மீன் அறிவியல் என்பது களத்துக்கு நேரடித் தொடர்பில்லாத வல்லுநர்களை மட்டுமே கொண்டு இயங்குகிறது. கடற்கரையில் பிறந்து கடல் தொழில் செய்து அதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு ஒரு சிறந்த ஆராய்ச்சியாளரைவிட அனுபவ அறிவு அதிகம் என்பதை முதலில் உணரவேண்டும்.

மூன்றாவதாகத் தற்போது உள்ள மீன்வளத்தைக் கட்டுப்படுத்தும் அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும். மீன் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் தவறல்ல. ஆனால், உயிர் சூழலையும் அதில் வசிக்கும் மீன்களையும் நம்பி வாழும் எண்ணற்ற மக்களையும் பாதிக்கும் வகையில் மீன்வளத்தைக் கட்டுப்படுத்தும் அம்சங்கள் அமைந்துள்ளன. உலகெங்கிலும் மீன்பிடித்தல் குறைந்துவரும் நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை மீன்பிடித்தல் அதிகரித்துவருகிறது. இது எப்படிச் சாத்தியம்? மீன்பிடி தொழிலின் உயிரியல், சமூகம், பொருளாதார நிலைமையை உற்று ஆராயாமல் நம் மீன்வளத் துறை அரசியல் நோக்கங்களில் முடங்கிக் கிடக்கிறது.

தற்போது நாம் உணர்ந்துவரும் பருவநிலை மாற்றங்களால் நம் உணவுப் பாதுகாப்பைச் சீர்குலைப்பதற்கு மிக அதிகச் சாத்தியம் இருக்கிறது. மீன்பிடி தொழில் உணவு உற்பத்திக்கும், அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கும் வேலைவாய்ப்பு தரும் ஒரு தொழிலாக இருக்கும். அதற்கு நம் மீன்வளங்கள் நன்றாக மேம்படுத்தி, வளங்களைச் சரியான முறையில் எவ்வாறு பரவலாக்குவது, எவ்வாறு நீண்ட காலப் பாதுகாப்பு வழங்குவது எனக் கண்டறிய வேண்டியது நம் கடமை.

இது போன்ற கேள்விகளுக்கு நமக்கு உடனடியாக விடை தெரியாவிட்டாலும் இவற்றைக் கேட்பது அவசியம். இப்போது சொல்லுங்கள், நாம் சாப்பிடும் மீன் எப்படி வருகிறது என்பதும் அதைச் செய்யும் மீன்பிடி தொழில் எப்படி இருக்கிறது என்பது பற்றியும் நமக்கு என்ன தெரியும்?

கட்டுரையாளர், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான
அசோகா அறக்கட்டளையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: rahul.muralidharan@atree.org


மீன் பிடித்தல்மீன் பிடி தொழில்மீன் உணவுமீன் உற்பத்திமீன் பிடி தொழில் நிபந்தனைதமிழ்நாடு மீன்வளத்துறைவெப்பமண்டல மீன் உயிரியல்வெப்பமண்டலக் கடல்மீன்கள் வாழ்வாதாரம்பருவகால மாற்றம்பருவநிலை மாற்றம்மீனவர்கள் வாழ்வாதாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x