ஏழு புதிய வகை தவளைகள்

ஏழு புதிய வகை தவளைகள்

Published on

இந்தியா மற்றும் இலங்கையில் தங்க முதுகு தவளையினத்தைச் சேர்ந்த ஏழு புதிய வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. நெதர்லாந்தைச் சேர்ந்த நேச்சுரலிஸ் பயோடைவர்சிட்டி சென்டர் சார்பில் கொண்டுவரப்படும் இதழான 'கான்ட்ரிபியூஷன்ஸ் டு ஜூவாலஜி'யில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.டி. பிஜூ தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, மரபணு ஆராய்ச்சித் தொழில்நுட்பத்தைக் கொண்டு விதவிதமான தவளை இனங்களின் பரவலை ஆராய்ந்தனர். இதில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு புதிய வகைகளில் ஒன்று இலங்கையிலும், மற்ற ஆறு வகைகள் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. வாழிடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால், தவளைகளின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஏழு புதிய வகைகளில் ஒன்றான ஹைலரானா உர்பிஸ் (Hylarana urbis) தவளை வகை கொச்சி நகர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை விஞ்ஞானிகளின் கண்களில் தென்படாமல், அவை வாழ்ந்துவந்துள்ளன. இத்தவளை வகைக்கும் மனிதர்களால் அச்சுறுத்தல் உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in