புதிய சுற்றுச்சூழல் நூல்கள்

புதிய சுற்றுச்சூழல் நூல்கள்
Updated on
1 min read

கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்த நூல்கள் தமிழில் தொடர்ச்சியாக வெளி யாக ஆரம்பித்திருக்கின்றன. கடந்த ஆண்டு மிக அதிக எண்ணிக்கையிலான சுற்றுச்சூழல் நூல்கள் வந்திருந்தன. இந்த ஆண்டு 37வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சுற்றுச்சூழல் சார்ந்த நூல்களைத் தேடியபோது, பல நூல்கள் கவனத்தைக் கவர்ந்தன.

உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் நூல்களில் முதன்மையானதான ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’ (Silent spring) தமிழில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ச.வின்சன்ட் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடு, இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தின் மூத்த பெண் சுற்றுச்சூழல் போராளிகளில் ஒருவரான கிருஷ்ணம்மாள் ஜகந்நாதனின் வாழ்க்கை வரலாற்றைப் பத்திரிகையாளர் பிரமிளா கிருஷ்ணன் எழுதியுள்ளார். மாற்றத்துக்கான பெண்கள் என்ற வரிசையில் ஒன்றான இந்த நூலைப் பூவுலகின் நண்பர்கள், தடாகம் இணைந்து வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் ‘பூமித்தாயே’ என்ற நூலை இயல்வாகை வெளியிட்டுள்ளது. அவரது ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’ நூல் மறுபதிப்புக் கண்டுள்ளது.

இயற்கை காட்டுயிர்கள் சார்ந்து முக்கிய நூல்களை வெளியிட ஆரம்பித்துள்ள தடாகம் பதிப்பகம், ‘தமிழகத்தின் இரவாடிகள்’ என்ற வண்ணப் படங்கள் நிரம்பிய நூலை வெளியிட்டுள்ளது. நூலை எழுதியிருப்பவர் ஏ.சண்முகானந்தம்.

கேரளத்தின் முக்கியச் சுற்றுச்சூழல் ஆர்வலரான பேராசிரியர் ஜான்சி ஜேக்கப்பைப் பற்றிய ‘என் வாழ்க்கை தரிசனம்’ (இயற்கையில் இசைந்த பெரு வாழ்வு குறித்து) என்ற நூலை யூமா.வாசுகி தமிழில் தந்துள்ளார். வெளியீடு புலம்.

உலகின் முக்கியச் சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ள தண்ணீர் பிரச்சினை பற்றி பத்திரிகையாளர் பாரதி தம்பி எழுதியுள்ள ‘தவிக்குதே தவிக்குதே’ நூலை விகடன் வெளியிட்டிருக்கிறது.

டீன் குட்வினின் ‘புவி வெப்பமயமாதல்’ (தொடக்க நிலையினருக்கு) என்ற நூலை அடையாளம் வெளியிட்டிருக்கிறது. உலகை உலுக்கி வரும் புவி வெப்பமடைதல்-பருவநிலை மாற்றம் பற்றி அறிமுகப் படுத்தும் இந்த நூலைப் பேராசிரியர் க. பூர்ணசந்திரன் மொழி பெயர்த்துள்ளார்.

ஜீ.கார்த்தி என்பவர் தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் என்ற நூலை எழுதி யுள்ளார். ‘பச்சை விரல்’ - தயாபாயின் சுயசரிதை என்ற மலை மண்ணை நாடிச் சென்ற பெண் குறித்த நூலைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது.

இது தவிரப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ‘சிறியதே அழகு’ எனும் வரிசையில் மழைக்காடுகளின் மரணம், ஸ்டெர்லைட், எது சிறந்த உணவு, பழந்தமிழர் வேளாண்மை, மறக்கப்பட்ட தீர்க்கதரிசி ஜே.சி. குமரப்பா, மார்க்சியச் சூழலியல் - ஓர் அறிமுகம், பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு, தாதுமணல் கொள்ளையால் காணாமல் போகும் கடலோரக் கிராமங்கள், பார்ப்பணுத்துவம் அணுத்துவம், கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள், கூடங்குளம் திட்டத்தைப் புறக்கணிப்போம் ஆகிய சிறு நூல்களைக் கொண்டு வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in