

ஓணான்கள் பெரும்பாலும் அழகற்ற உயிரினங்களாகவும் பழிக்கப்படுபவையாகவும் இருந்துவந்துள்ளன. ஆனால், ஓணான்கள் மிகவும் அழகானவை என்பதை, அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது உணரலாம். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு விசிறித்தொண்டை ஓணான்கள்.
11-ல் ஒன்று
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென்தமிழகத்தில் சித்தானா மருதம் நெய்தல் என்கிற புதிய ஓணான் வகை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இவற்றின் கழுத்துப் பகுதியில் விசிறி போன்ற அமைப்பு இருப்பதால், இவை விசிறித்தொண்டை ஓணான் (Fan throated lizard) வகைகளின் கீழ் வருகின்றன.
விசிறித்தொண்டை ஓணான் பிரிவில் 11 துணை வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. மூன்று வகைகள் நேபாளத்திலும், இரண்டு வகைகள் இலங்கையின் கடற்கரை- தாழ்வான பகுதிகளிலும், ஒரு வகை மத்திய இந்தியாவிலும், நான்கு வகைகள் இந்தியாவின் வறண்ட பகுதிகளிலும், புல்வெளிப் பரப்புகளிலும் வாழ்வதாக நம்பப்படுகிறது. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக்கு பின்பு தமிழகம், இலங்கையில் இவ்வகை ஓணான்களை அதிகம் காண முடியும்.
பொட்டல் நில ஓணான்
தென் தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ள சித்தானா மருதம் நெய்தல் வகை காணப்படுகிறது. இந்த ஓணான் கண்டறியப்பட்ட இடங்கள் பெரும்பாலும் பொட்டல் நிலம், தரிசு நிலப்பரப்புகளே.
அதிக மழை பொழியும் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படக்கூடிய சித்தானா விசிறித்தொண்டை ஓணான் இனத்தைப் போலவே இந்தப் புதிய வகை காணப்பட்டாலும், உடல் வெளிப்புற திசுக்களின் எண்ணிக்கையும் உருவமும் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது. இந்த விசிறித்தொண்டை ஓணான் புது வகையைச் சேர்ந்தது என்பது மூலக்கூறு பகுப்பாய்வு மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கழுத்தில் விசிறி போன்று தொங்கும் பகுதி கருநீல நிறத்திலும், ஆரஞ்சு நிற இணைப்பு அல்லது புள்ளிகளையும் கொண்டிருக்கும். மஞ்சள் நிறப்பட்டை ஒன்று அடிவாயில் தொடங்கி விசிறியின் இரண்டு பக்கங்களிலும் பரவியுள்ளது. இந்த இனத்துக்கே உள்ள தனிச்சிறப்பு இந்த வடிவமைப்பு.
இவை புற்கள் நிறைந்த சமவெளி நிலப்பரப்பு, வறண்ட புதர்க்காடு, கடற்கரை ஓரங்கள் போன்ற இடங்களில் மட்டுமே வசிக்கின்றன. இவை வசிக்கும் வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு, இவற்றுக்கு சித்தானா மருதம் நெய்தல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
“தாமிரபரணி ஆற்றுக்கு சற்றுத் தொலைவில் இவை கண்டறியப் பட்டுள்ளது. பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்தில், இது போன்ற இனங்கள் மற்ற இடங்களுக்கு பரவாமல் போனதற்கு ஆறு ஒரு தடையாக இருந்திருக்கலாம். அதனால் இந்த இனம் இங்கு மட்டுமே வசிக்கிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் தீபக் வீரப்பன்.
அறியப்படாத உயிரினங்கள்
அடர்த்தியான, பசுமைமாறா, உயரமான மலைப்பகுதி போன்ற காடுகளில் மட்டுமே புது வகை உயிரினங்கள் கண்டறியப்பட வேண்டும் என்பதில்லை. திறந்த வெளி, கட்டாந்தரை என சொல்லும் பல சாதாரண இடங்களிலும் இன்னும் நமக்குத் தெரியாமல் இது போன்று கண்டறியப்படாத பல சின்னஞ்சிறு விலங்குகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தக்காண பீடபூமி, கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள், சமவெளிப் பகுதிகளில் இன்னும் நிறைய களஆய்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே நமக்குத் தெரியாமல், சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் உயிரினங்கள் அறிவதற்கு வழி பிறக்கும்.
ஓணானுக்கு ஆபத்து
காடுகளை காட்டிலும் இம்மாதிரியான வறண்ட நிலங்கள் அதிக ஆபத்தையும் அழிவையும் சந்தித்து வருகின்றன. அபரிமித மேய்ச்சலால் வேகமாக அழிக்கப்படும் புல்வெளிப் பகுதிகள், அதிகரிக்கும் காற்றாலைகள், விறகுக்காகவும் மரக்கரிக்காகவும் வெட்டப்படும் மரங்கள், சுருங்கும் தேரிநிலங்கள், வீட்டுமனைகளின் ஆக்கிரமிப்பு, தொடர்ச்சியாக நடைபெறும் காட்டுயிர் வேட்டை போன்றவை அரிய உயிரினமான விசிறித்தொண்டை ஓணானுக்கு ஆபத்தாக முடிகின்றன. முயல், மரநாய், அலங்கு மட்டுமின்றி, இந்த சிறிய ஓணான்களையும் சிலர் வேட்டையாடி உண்கின்றனர்.
முறையான-பரவலான விழிப்புணர்வு, ஒருங்கிணைக்கப்பட்ட களப்பணிகள், வேட்டைத் தடுப்புச் சட்டங்கள், வனத்துறை உதவியுடன் எஞ்சியுள்ள இவற்றின் வாழிடத்தைப் பாதுகாக்க வேண்டும். நமது பூர்விகச் சொத்தான, வேறெங்கும் காணக் கிடைக்காத, நம்முடனே வாழும் சின்னஞ் சிறிய உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டியது உடனடித் தேவை.
கட்டுரையாளர், ஆய்வு மாணவர்
தொடர்புக்கு: brawinkumarwildlife@gmail.com