

ஈரோடு அருகேயுள்ள குட்டப்பாளையத்தில் உள்ளது சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாகக் காங்கேயம் நாட்டு மாடுக் கண்காட்சி-முகாம் நடத்தப்பட்டுவருகிறது. 2016-ம் ஆண்டுக்கான கண்காட்சி சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்றது.
பார்ப்பதற்கு உக்கிரமாகத் தோன்றினாலும், முதுகில் எழுந்து நிற்கும் திமில், தலையில் கிளைத்த கொம்புகளுடன் கம்பீரமாகவும் அழகு பொருந்தியும் நின்ற காங்கேயம் காளைகளைப் பார்க்க, இளம்காளைகள் அதிகமாகவே குழுமியிருந்தனர். பலரும் காளைகளுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர்.
பராமரிக்க எளிதானவை
தமிழகத்தின் நாட்டு மாடு வகைகளில் தலையாயது காங்கேயம். மற்ற மாட்டினங்கள்: பர்கூர், புளியகுளம், ஆலம்பாடி, உம்பளச்சேரி, தேனி மலை மாடு. கடுமையாக உழைக்கக்கூடிய, கிடை போட வாய்ப்புள்ள, பராமரிக்க எளிதானவை இந்த மாடுகள். காங்கேயம் காளை சாதாரணமாக ரூ. 30,000-க்கு மேல் விற்கப்பட்டுவந்தது. 2012-13-க்குப் பிறகு காங்கேயம் மாட்டினத்துக்கான வரவேற்பு குறைந்துவருகிறது. இதனால் சமீபகாலமாக ரூ. 7,000-8,000-க்கே காங்கேயம் காளைகள் விலைபோகின்றன.
இந்த மாடுகளுக்கான வரவேற்பு குறைவதற்கு முக்கியக் காரணம் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை. தடையை விலக்கினால்தான், நாட்டு மாட்டு வகைகளைப் பாதுகாக்கவும் பரவலாக்கவும் முடியும் என்கிறார்கள் நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள். அதேபோல, விவசாயப் பயன்பாட்டிலும் நாட்டு மாடு வகைகள் தற்போது குறைந்துவருகின்றன. ஜெர்ஸி, ஃபிரீசியன் போன்ற வெளிநாட்டு கலப்பின மாடுகளின் பயன்பாடு பெருகிவருகிறது.
பால் வியாபாரம் செழிக்கும்
இந்தப் பின்னணியில்தான் காங்கேயம் நாட்டு மாடுகளின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காங்கேயம் வகை மாடுகள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றன. அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மாடுகளை வாங்குவதற்காக வந்திருந்ததைக் காண முடிந்தது.
இந்தப் பின்னணியில்தான் காங்கேயம் நாட்டு மாடுகளின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காங்கேயம் வகை மாடுகள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றன. அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மாடுகளை வாங்குவதற்காக வந்திருந்ததைக் காண முடிந்தது.
“நாட்டு மாடு வகைகளின் சத்தான பாலைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். நாட்டு மாடு வகைகளின் பால், குறிப்பாகக் காங்கேயம் வகை மாடுகளின் பால் லிட்டர் ரூ. 80-100 வரை விற்பனை ஆகிறது. அதனால் இதை நல்ல வியாபாரமாகவே எடுத்துச் செய்ய முடியும்” என்கிறார் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி
நாட்டு மாடு வகைகளைப் பாதுகாக்க விரும்புவோர் மகிழ்ச்சியடையும் வகையில், இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். இந்த நாட்டு மாடு வகைகளை நேரில் கண்டு இவற்றின் சிறப்பை அறிய அதிக அளவில் அவர்கள் திரண்டிருந்தது, உற்சாகம் அளிப்பதாக இருந்தது.
சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை
தொடர்புக்கு: 04257 294234, 96295 28888