

மனிதனின் உணவுத் தேடல் நிலையிலிருந்து இன்றைய தொழில்நுட்பம் நிறைந்த வேளாண்மைவரை கால்நடைகள் உழவுத்தொழிலின் இன்றியமையாத அங்கமாக இருந்துவருகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் வேளாண் அறிவியலின் வளர்ச்சி என்பது கால்நடைகளையும் உள்ளடக்கியது. இதற்கு அந்தமான் நிகோபார் தீவுகளின் கால்நடைவளம் சிறந்த உதாரணமாகும்.
பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்நிலத்தைப் பகுத்து இலக்கணம் வகுத்தபோது, ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய உயிரினங்களையும் தாவரங்களையும் குறிப்பிட்டுள்ளனர் என்பதை தொல்காப்பியம் உணர்த்துகிறது. அதேபோல், அந்தமான் தீவுகளில் கால் பதித்த ஒவ்வொரு பழங்குடி இனமும் குடியமர்ந்தோரும் தங்களுக்குரிய உயிரினங்களையும் தாவரங்களையும் நன்கறிந்துள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்துப் பயனடைந்து வருகின்றனர்.
நடமாடும் சேமிப்பு வங்கிகள்
இந்திய வேளாண்மையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26 சதவீதம் கால்நடைகளின் பங்களிப்பு. அந்தமான் தீவுகளைப் பொறுத்தவரை இது 30 சதவீதத்துக்கும் அதிகம். குறைந்த முதலீட்டுக்கு அதிக வேலைவாய்ப்பை இத்தொழில் வழங்குகிறது. இருந்தாலும் பொருளாதாரப் பயனைவிட, மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் கால்நடைகளின் பங்களிப்பு மிக அதிகம்.
இத்தீவுகளில் திட்டமிட்ட வேளாண்மை150 ஆண்டுகள் பழமையானது என்றாலும், வேளாண்மை வளர்ச்சி என்பது நாடு விடுதலை பெற்ற பின்பே இங்கு ஆரம்பமானது. என்றாலும், கால்நடைகளில் குறிப்பாகப் பன்றிகளை, கொப்பரைத் தேங்காய் போன்று பண்டமாற்றுப் பொருளாகப் பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வணிக நோக்கில் வந்துசென்ற பலரும் கால்நடைகளை அறிமுகம் செய்ய முயன்றுள்ளனர். மேலும், 1925-ல் பர்மாவில் இருந்து குடியமர்ந்த கரண் இனத்தவரும் நாடு விடுதலை பெற்ற பின்பு குடியமர்த்தப்பட்டவர்களும் சிறந்த கால்நடைகளை தங்களோடு எடுத்துவந்து வளர்க்கத் தொடங்கினர்.
இத்தீவுகளின் தற்போதைய கால்நடை வளத்தில் வங்காள இன ஆடுகள், தெரசா, பேரண்ட் தீவு ஆடுகள், நிகோபார் மற்றும் அந்தமான் இன பன்றிகள், நிக்போர் இன கோழிகள், ஜெர்ஸி மற்றும் அறிமுகம் செய்யப்பட்ட அதிக பால்தரும் கலப்பின மாடுகள் (ஹோல்ஸ்டைன்) முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவைகளில் கோழி, பன்றிகளின் பன்முகத்தன்மை சிறப்பானது. இதை இந்திய கால்நடை வளப் பதிவு ஆணையமும் அங்கீகரித்துள்ளது.
பொதுவாக இத்தீவுகளில் ஆடுமாடுகளை பொதுமேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டும், கோழிகளை வீட்டைச் சுற்றிலும், பன்றிகளை காட்டுக்குள் மேயவிட்டும் தேங்காய்களை உணவாகக் கொடுத்தும் வளர்க்கின்றனர். தற்காலத்தில் சில கால்நடைகள் அங்கக, இயற்கைப் பண்ணைகளிலும் வர்த்தக முறையில் வளர்க்கப்படுகின்றன.
தினசரி வருமானம்:
அந்தமான் கால்நடைகளின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள கால்நடைகளைத் தாக்கும் பல வன்மையான நோய்கள் இங்கே கிடையாது. கால்நடைகள் இந்நோய்களுக்கு எதிர்ப்புத்தன்மையைப் பெற்றுள்ளன என்றும் கொள்ளலாம்.
மேலும், இந்த இனங்கள் இங்கு நிலவும் கடினமான தட்பவெப்ப நிலையில் பொது மேய்ச்சல் நிலங்களைச் சார்ந்திருக்கும்போதிலும் நல்ல பயன்தரவல்லவை. தற்காலத்தில் கால்நடை சார்ந்த பொருட்களின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் அவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. கால்நடை வளர்ப்பு தினசரி வருமானம் தரவல்லது. எனவேதான் கால்நடைகள் நடமாடும் சேமிப்பு வங்கிகள் என்று அழைக்கப்படுகின்றன.
- கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: velu2171@gmail.com