எல்லை வரையறுக்கப் புலிக்கு உதவும் மரம்

எல்லை வரையறுக்கப் புலிக்கு உதவும் மரம்
Updated on
1 min read

சோழவேங்கை என்கிற மரம் இந்தியா உள்ளிட்ட தெற்கு, பசிபிக் பகுதிகளில் வளர்கிறது. இதற்கு மலைப் பூவரசு, மிலச்சடையான், மூலா மரம் என்ற பெயர்களும் உண்டு. ஆங்கிலத்தில் பிஷப் வுட், ஜாவா சிடார் என அழைக்கப்படுகிறது. தாவரவியல் பெயர் பிஸ்சோபியா ஜவானிக்கா (Bischofia Javanica). இந்த மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரமான பகுதிகளில் நன்கு வளர்கின்றன. சோலைக் காடுகளில் மிகவும் வயதான மரங்களைக் காணலாம்.

சோழவேங்கை 12 முதல் 50 மீட்டர் உயரம்வரை வளரும். எப்போதும் பசுமையாகக் காணப்படும். பச்சை நிறத்தில் பூக்களும், பழங்கள் இளம் சிவப்பு பழுப்பு நிறத்தில் கொத்தாகவும் காணப்படும்.

புலிக்குப் பிடித்த மரம்

சோழவேங்கை மரம் சில பகுதிகளில் புனித மரமாகக் கருதப்படுகிறது. காடுகளில் இந்த மரத்தைப் புலிகள் அதிகம் பயன்படுத்துகின்றன. தங்கள் எல்லைப் பகுதியை வரையறுத்துக்கொள்வதற்காகக் கால் நகங்களால் மரத்தின் பட்டையைப் பிறாண்டிக் கீறுகின்றன. அசாம் காடுகளில் இப்படி நடைபெறுகிறது.

சிவப்பு நிறம் கொண்ட இந்த மரம் உறுதியானது. பாலங்கள் கட்டுவதற்கும், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் இலைகளைச் சில நாடுகளில் உணவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பழத்திலிருந்து ஒயினும், விதைகளிலிருந்து எண்ணெயும், பட்டையிலிருந்து சிவப்புச் சாயமும் தயாரிக்கப்படுகின்றன. இம்மரத்தின் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.

மிகப் பெரியது

சோழவேங்கை மரங்கள் அதிகபட்சமாக 10 அடி விட்டமும், 20 அடி சுற்றளவும் கொண்டவையாக இருக்கும். இதைவிட அதிகச் சுற்றளவு கொண்ட மரங்கள் சில இடங்களில் காணலாம். ஏற்காடு மலையில் மிக அதிகச் சுற்றளவு கொண்ட மரம் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்காடு மலை அசம்பூர் கிராமத்தில் மணிவண்ணன் என்பவரின் தோட்டத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய ஒரு பழமையான சோழவேங்கை மரம் உள்ளது. இம்மரத்தின் தூண் பகுதியானது 15 மீட்டர் உயரம்வரை உள்ளது. அதன் பிறகே கிளைகள் பிரிகின்றன.

மரத்தூண் பகுதியானது அடியில் பெருத்தும், மேலே செல்லச் செல்லப் புணல் வடிவிலும் உள்ளது. அடிப்பகுதி மிகவும் அகன்று அமைந்துள்ளது. தரையுடன் ஒட்டிய பகுதியின் சுற்றளவு 66 அடி. 10 பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அளவுக்கு இந்த மரம் மிகப் பெரியது. மரத்தின் சுற்றுப்பகுதியானது மேடு பள்ளங்கள் கொண்டதாக உள்ளது. இது உலகிலேயே அதிகச் சுற்றளவு, விட்டம் கொண்ட சோழவேங்கை மரமாக இருக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in