மல்பெரி சாகுபடியில் கூடுதல் லாபம் தரும் ஊடுபயிர்

மல்பெரி சாகுபடியில் கூடுதல் லாபம் தரும் ஊடுபயிர்
Updated on
2 min read

தமிழ்நாட்டில் சுமார் 35,000 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு 20,000-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். பட்டுப்புழு வளர்ப்பு மாத வருமானம் தருவதாலும், ஒரு ஏக்கர் மல்பெரியில் பட்டுப்புழு வளர்த்தால் சராசரியாக ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை லாபம் கிடைப்பதாலும் பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் பரவலாக உள்ளது எனச் சேலம் மண்டலப் பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி என். சக்திவேல் தெரிவிக்கிறார்.

அதிகரிக்கும் மல்பெரி

மல்பெரி சாகுபடி, அதில் ஊடுபயிர் முறைகள் குறித்து மேலும் அவர் பகிர்ந்துகொண்டது:

கிராமப்புறங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்களும் பெண்களும் பட்டு வளர்ப்பு தொழிலை சுய வேலைவாய்ப்பாகத் தேர்ந்தெடுத்துப் பயனடைந்துவருகிறார்கள். மல்பெரி சாகுபடி பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பட்டுப் புழுவுக்கு உணவான மல்பெரி பயிரிடுவதே, இத்தொழிலின் முதல் கட்டம். மல்பெரி பல்லாண்டு வாழும் ஒரு மர வகைப் பயிர். இத்தொழிலில் ஆர்வமுள்ளவர்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை மாதந்தோறும் பெற முடியும்.

களைக்கொல்லி வேண்டாம்

மல்பெரியை ஒருமுறை பயிரிட்டால் 20 முதல் 25 ஆண்டுகள்வரை தொடர்ந்து பயன்படுத்தலாம். செடிகள் செழிப்பாக வளரவும் தரமான இலைகளை உற்பத்தி செய்யவும், அகன்ற இடைவெளி விட்டு இணை வரிசையில் (5’ + 3’ x 2’) என நடவு செய்வதே சிறந்ததது. மல்பெரி நாற்றுகளை நடவு செய்த பின், அவை வளர்ந்து சுமார் ஆறு மாதக் காலத்துக்குப் பின் பட்டுப்புழு வளர்ப்பதற்கான முதல் அறுவடைக்குத் தயாராகிவிடுகின்றன. இக்காலகட்டத்தில் திறந்தவெளியாகக் காணப்படும் தோட்டத்தில், மல்பெரி தளிர் விடும் முன்பே ஏராளமான களைகள் முளைத்து வளர்ந்துவிடும்.

இதனால் மல்பெரி வளர்ச்சி, இலைகளின் தரம், மகசூல் பாதிக்கப்படும். எனவே, முதல் புழு வளர்ப்புக்கு முன் இரண்டு, மூன்று முறை களையெடுப்பது அவசியம். ஒரு ஏக்கருக்குச் சுமார் ரூ. 15,000 முதல் ரூ.20,000 வரை செலவாகும். மேலும், களைக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் பல நாற்றுகள் தளிர் விடாமல் காய்ந்துவிடலாம். அதனால் களைக்கொல்லிகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்பெரித் தோட்டத்தில் களை

புதிய தோட்டத்தில் களைகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் மண் வளத்தைப் பாதுகாத்து மல்பெரியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், திறந்த மண் பரப்பை மூடும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்வது அவசியம். இதனால், பட்டுப்புழு வளர்ப்பைத் தொடங்குவதற்கு முன் களையெடுக்கும் செலவு குறைவதோடு, கணிசமான வருமானமும் கிடைக்கும்.

ஊடுபயிர் தேர்வு

ஊடுபயிரைத் தேர்வு செய்யும்போது பயிரிடப்படும் பகுதி, பருவம், மண் வகைக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். குறுகிய காலப் பயிராக இருக்க வேண்டும்; வேகமாக வளர்ச்சியடையாததாகவும் குட்டையானதாகவும் இருக்க வேண்டும்; குறைந்த அளவு தண்ணீர் தேவையுடையதாக இருக்க வேண்டும்; அதிக மகசூல் தரும் ரகமாக இருக்க வேண்டும்; அறுவடைக்குப் பின் மண் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரமாகப் பயன்படும் வகையில் அதிகபட்சத் தழைகளைக் கொண்டிருப்பது சிறப்பானது. மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா, நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கும் பயிர்களான பயறு வகைகளைத் தேர்வு செய்யலாம்.

பாசிப் பயறு, உளுந்து, கொள்ளு, கொண்டைக் கடலை, நிலக்கடலை, சின்ன வெங்காயம், பெல்லாரி, முள்ளங்கி, கீரைகள், கொத்தவரை, மிளகாய், தக்காளி, வெள்ளரி, பூசணி, சுரை, சாமந்தி, கேந்தி (துலுக்க சாமந்தி), தக்கை பூண்டு போன்ற பயிர்களைப் புதிய மல்பெரித் தோட்டத்தில் ஊடுபயிராகப் பயன்படுத்தலாம்.

ஊடுபயிர் அறுவடை

ஊடுபயிர் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதோடு, களையெடுக்கும் செலவையும் மிச்சப்படுத்துகிறது. பட்டுப்புழு வளர்ப்பைத் தொடங்குவதற்கு முன் கணிசமான வருமானமும் கிடைக்கும். இந்தப் பணத்தைப் புழு வளர்ப்பு மனை அமைக்கவோ அல்லது தளவாடங்கள் வாங்கவோ பயன்படுத்திக்கொள்ளலாம். ஊடுபயிர் மழைக்காலத்தில் மண்ணரிப்பைத் தடுக்கும்; நன்மை தரும் நுண்ணுயிரிகளை ஊக்குவித்து மண் வளத்தை மேம்படுத்த உதவும்;. மண்ணின் மேற்பரப்பில் பாசன நீர் ஆவியாவதைத் தடுத்து ஈரப்பதத்தைத் தக்க வைக்கும்; வேர் அழுகல், வேர்முடிச்சு நோய்களின் தாக்கத்தையும் குறைக்கும்.

சில பயிர்கள், மல்பெரியைத் தாக்கும் பூச்சியினங்களைக் கவர்ந்து தாக்குதலிலிருந்து காக்கின்றன. தீமை தரும் பூச்சிகளை அழிக்கும் இரை விழுங்கிகள், சிலந்தி போன்றவற்றின் செயல்பாட்டையும் ஊடுபயிர் ஊக்குவிக்கிறது. எனவே, புதிதாக மல்பெரித் தோட்டம் அமைக்கும் விவசாயிகள் இதுபோல ஊடுபயிர் சாகுபடி செய்து பயனடையலாம். மல்பெரி வரிசைகளுக்கு இடையே ஐந்து அடி இடைவெளியில் தொடர்ந்து ஊடுபயிர் செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.

விஞ்ஞானி சக்திவேல் தொடர்புக்கு: 98427 61789

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in