

ராஜபாளையத்தைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் டி.எஸ்.சுப்ரமணிய ராஜா, காட்டுயிர் பாதுகாப்புக்கு ஆற்றிய பணிகளுக்காக இந்த ஆண்டுக்கான ‘சேஞ்சுவரி ஏசியா’ இதழ் வழங்கும் விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் இயற்கை, காட்டுயிர் பாதுகாப்புக்காக வழங்கப்படும் முக்கியமான விருது இது. இதற்கு முன் இந்த விருதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிலரே பெற்றுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள ராஜபாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணிய ராஜாவுக்கு இயல்பாகவே இயற்கை மீதும் காட்டுயிர்கள் மீதும் ஆர்வம் இருந்தது. அவர் பள்ளியில் படித்த காலத்தில் வனத்துறை நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்றபோது, காட்டுயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் உதித்தது. அவர் மிகவும் விரும்பிய காட்டு பகுதி அழிக்கப்பட்டதை நேரில் கண்ட பிறகு, ராஜபாளையம் காட்டுயிர் சங்கம் (Wildlife Association of Rajapalayam (WAR) for Nature) என்ற அமைப்பை உருவாக்கினார்.
"மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென்பகுதியைப் பாதுகாப்பதில் அவரும் அவர் சார்ந்த ராஜபாளையம் காட்டுயிர் சங்கமும் தொடர்ந்து பங்காற்றிவருகின்றன. இயற்கை சார்ந்த விழிப்புணர்வு, ஆராய்ச்சி, அரசு சார்ந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக வில்லிப்புத்தூரில் உள்ள மலை அணில்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.
மலை அணிலைப் பாதுகாப்பதில் உள்ளூர் விவசாயிகளின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார். அத்துடன், ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள புலிகள் வாழிடத்தில் நடக்கும் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார்" என்று மேற்கண்ட விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான செய்தியில் சேஞ்சுவரி இதழ் குறிப்பிட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவில் காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாக்கக் குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர் சுப்ரமணிய ராஜா. ராஜபாளையம் காட்டுயிர் சங்கத்தின் இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களைச் சென்றடைந்து, காட்டுயிர்கள், காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.
"எங்களுடைய அமைப்பின் சுருக்கமான பெயர் WAR. காடுகளைப் பாதுகாக்க, நிஜமாகவே நாம் ஒரு போரைத் தொடுக்க வேண்டியுள்ளது. இந்தப் போரில் வெற்றி பெறும் வரை நான் ஓய மாட்டேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, இயற்கை அறிஞர் எம்.கிருஷ்ணன் நூற்றாண்டு விழாவில் "சிறப்புப் பாதுகாப்பு விருது" அவருக்குக் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.