

நறுமணப் பொருட்களுக்கான சர்வதேசச் சந்தை மதிப்பு பழங்காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. பண்டைத் தமிழகம் ரோமப் பேரரசுக்கு இடையில் நடைபெற்ற வணிகத்தில் பெரும்பாலும் நறுமணப் பொருட்களும் தங்கமும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்திய அராபியர்களின் வணிகத்தில் குதிரையும் நறுமணப் பொருட்களும் கைமாறின. இதன் உச்சமாகக் கொலம்பஸ் உலகைச் சுற்றிவந்ததும் இந்தியாவுக்கான கடல்வழிப் பாதையை ஐரோப்பியர்கள் கண்டறிந்ததும் நறுமணப் பொருட்களின் வணிகத்துக்காகத்தான். அதுவே உலக வரலாற்றை மாற்றியமைத்தது.
இடைப்பட்ட காலத்தில் வெனிஸ், அரேபியா, இலங்கை, இந்தியா, மலாகா, மொளுக்காஸ், சீனாவை உள்ளடக்கிய நறுமணப்பொருட்களின் வர்த்தகப் பாதை, வரலாற்று காலத்தில் புகழ்பெற்ற பட்டுப்பாதை எனப்படும் பட்டு வர்த்தகத்துக்கு இணையானது.
சர்வதேசச் சந்தையும் நறுமணப் பொருட்களும்
இன்றும் சர்வதேசச் சந்தையில் நறுமணப்பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியா ஆண்டுக்கு 60 லட்சம் டன் நறுமணப்பொருட்களை உற்பத்தி செய்வதோடு, இதில் 11% ஏற்றுமதியும் செய்கிறது.
அதேவேளை, இந்தியாவில் அங்கக முறையில் உற்பத்தியான பொருட்களின் ஏற்றுமதியில் 1% மட்டுமே நறுமணப் பொருட்கள். ஆனால் இதன் சந்தை மதிப்பு அதிகம். அந்தமானைப் பொறுத்தவரை உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்களும் இங்கேயே பயன்படுத்தப்படுகின்றன. மாபெரும் சந்தை வாய்ப்புகள் இருந்தபோதும், அதை நாம் இன்னமும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.
(அடுத்த வாரம்: உற்பத்திக்கு ஊக்கம்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிமன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com