

காட்டில் குவிந்து கிடக்கும் அழிந்த உயிரினங்களின் எலும்புகள், கடலில் செத்து மிதக்கும் திமிங்கிலங்கள், காடுகளுக்குச் செல்பவர்கள் வீசும் காலி மதுபாட்டில்கள், கர்ப்பிணிப் பெண்ணைப் போல் காட்டைப் பாதுகாக்க வேண்டிய அவசியம், மரங்களை வெட்டி ஆலைகள் வெளியிடும் கரும்புகை என அந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அத்தனை ஓவியங்களும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் தற்போதைய நிலையையும், அதனால் எதிர்காலத்தில் நேரிடவுள்ள ஆபத்துகளையும் தூரிகையால் தோலுரித்துக் காட்டுகின்றன.
“மலைகள் முழுவதும் சோலைக்காடுகளாலும் புற்களாலும் சூழப்பட வேண்டும். காடுகள் பெருகுவதற்கு வாய்ப்பில்லாத வகையில் அயல் மரங்களையும், பயிர்களையும் விளைவிக்கிறார்கள் மனிதர்கள். இதனால் மலை மலடாகிறது. இயற்கை மீது ஆதிமனிதனுக்கு இருந்த அப்பழுக்கற்ற அக்கறை நவீன மனிதனிடம் முற்றிலும் அழிந்து போனது. காய்ந்த விறகுகள், புற்கள், மண் ஆகியவற்றால் குடிசை அமைத்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். ஆனால் இன்றைக்கு இயற்கை வளங்களைச் சுரண்டி சுரண்டி நாசம் செய்கிறோம்” என அழுத்தமாகப் பேசுகிறார் இந்த ஓவியங்களை வரைந்த ஈரநிலம் ந. தமிழரசன்.
விட்டுச்செல்ல உந்துதல்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மன்னம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். “சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தேன். அதன் பின் ஓவியம் வரைவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டேன். சமூகத்துக்கும், நம் சந்ததிகளுக்கும் விட்டுச்செல்ல ஏதாவதொரு வகையில் உதவ வேண்டும் என்கிற உந்துதல்தான், தொய்வின்றி என்னை இயங்க வைக்கிறது” என்கிறார் தமிழரசன்.
கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள தனியார், அரசுக் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பல்லாயிரக்கணக்கானோரைச் சந்தித்து, ஆண்டுதோறும் மூன்று மாதக் காலம் சுற்றுச்சூழல் ஓவியங்களைக் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு விதை தூவுகிறார்.
திருப்பூர் குமரன் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் தமிழரசன் படங்கள்: இரா.கார்த்திகேயன்
மாற்றம் தரும் பூரிப்பு
“கல்லூரியில் இரண்டாம் பருவத்துக்கான தொடக்கத்தில் ஓவியக் கண்காட்சியை நடத்தத் தொடங்குவேன். தொடர்ச்சியாக ஒரு நாள் இடைவெளியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாவட்டத்துக்கு ஒரு கல்லூரியில் கண்காட்சி நடத்திவருகிறேன்.
மலைகளில் சோலைக்காடுகளும் புல்வெளிகளும் அதிகரிக்க வேண்டும். நீரை உறிஞ்சும் மரங்களை நடுவதைத் தவிர்த்து, மண் மற்றும் மலை சார்ந்த மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். மலை முழுவதும் புற்கள் நிறைந்திருந்தால் மட்டுமே மண்ணில் மழை சாத்தியப்படும். இயற்கையை ஆக்கிரமிப்பதை மனிதர்கள் தவிர்க்க வேண்டும்.
பூமி மனிதர்கள் வாழ்வதற்கு மட்டும் அல்ல. வண்டு, எறும்பு, குயில், குரங்கு, புலி, யானை எனப் பல உயிரினங்களும் சூழ்ந்தது அது. காடுகளைப் பரவலாக்குவது எத்தனை முக்கியமோ அதேயளவு காட்டுயிர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். திருப்பூர் போன்ற சாயத் தொழிற்சாலைகளின் பாதிப்பு உள்ள பகுதி கல்லூரிகளில் என் ஓவியக் கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது
நாகை மாவட்டம் பொறையாறு அருகே கல்லூரியில் வைக்கப்பட்ட என்னுடைய கண்காட்சியைப் பார்த்த இளைஞர் ஒருவர், தன் தந்தை மரம் வெட்டும் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். இது போன்று சமூகத்தில் சிறிய மாற்றங்களை நிகழ்த்த எனத் தூரிகை பயன்படுவது மகிழ்ச்சி” எனப் பூரிப்புடன் சொல்கிறார் தமிழரசன்.
அழியாத சொத்து
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் இவருடைய ஓவியங்கள் சமீபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களைக் கண்டு ரசித்த கல்லூரி மாணவி அனிதா, “நாம் வாழும் சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஓவியங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. இயற்கைதான் என்றைக்கும் அழியாத சொத்து என்பதை எங்களுக்கு உணர்த்துகின்றன” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
இயற்கைதான் அழியாத சொத்து... அதற்குச் சாட்சியாய் இருக்கின்றன தமிழரசனின் ஓவியங்கள்!