அந்தமான் விவசாயம் 15: உணவுத் தன்னிறைவின் முதுகெலும்பு

அந்தமான் விவசாயம் 15: உணவுத் தன்னிறைவின் முதுகெலும்பு

Published on

பொதுவாக அந்தமானில் பின்பற்றப்படும் வீட்டுத் தோட்டங்கள் ஐந்து அடுக்குத் தாவர வகைகளைக் கொண்டுள்ளன:

வீட்டுத் தோட்டங்களின் அமைப்பு

முதல் அடுக்கு (1 முதல் 2 மீட்டர் உயரம்) - ஒரு வருடப் பயிர்களான இஞ்சி, மஞ்சள், மரவள்ளி, சிறுகிழங்கு, சேனைக் கிழங்கு, அன்னாசிப்பழம்.

இரண்டாம் அடுக்கு (2 முதல் 5 மீட்டர் உயரம்) – சாதிக்காய், பட்டை, இலவங்கம், மற்ற உள்நாட்டு நறுமணப் பொருட்கள்.

மூன்றாம் அடுக்கு (5 முதல் 10 மீட்டர் உயரம்) – மா, புளி, தீவன மரங்கள் மற்றும் பல வகையான முந்திரி மரங்கள்.

நான்காம் அடுக்கு (10 முதல் 15 மீட்டர் உயரம்) – பாக்கு, பலா, இலவம் பஞ்சு, நாவல், பல வகையான வெப்பமண்டல மரங்கள்.

ஐந்தாம் அடுக்கு – தென்னை (பொதுவாக அந்தமான் மற்றும் கச்சால் உயரம் கொண்ட வகை), பல வகையான வெப்ப மண்டல மரங்கள்.

வேளாண் தன்னிறைவு

இத்தகைய அடுக்குமுறை தோட்ட அமைப்பு அதிகச் சூரிய ஒளி, மண்ணின் சத்து, நீர் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திக்கொண்டு அதிக இடைவெளியின்றி நன்கு வளரக்கூடியது. இவ்வகையான தோட்டங்களின் பன்முகத்தன்மை உயிரினப் பன்மைத்தன்மையைக் காப்பதுடன், பல்வேறு வகை விளைப்பொருட்களைத் தருவதால் மக்களின் தேவைகள் பூர்த்தியாகின்றன. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத் தோட்டங்கள், அந்தமான் நிகோபார் தீவுகளின் இயற்கையின் பிரதிபலிப்பு எனலாம்.

இவ்வகையான வேளாண் காடுகள் சார்ந்த வீட்டுத்தோட்டங்கள் கோழி, வாத்துகள் வளர்ப்பதற்கு உதவியாக இருப்பதால் வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், விவசாய நிலைத்தன்மையையும் தன்னிறைவையும் தருகின்றன. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத்தோட்டங்கள் அந்தமான் தீவுகளின் உணவுத் தன்னிறைவுக்கான முதுகெலும்பென்றால் அது மிகையல்ல.

சிலப்பதிகாரச் சிறப்பு

இதற்கான மாதிரிகளைக் கேரளா, தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காண முடிகிறது. இதன் சிறப்புகளை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் காணமுடிகிறது. மழை அளவு, நீரின் கையிருப்பு, மண்ணின் தன்மைக்கேற்ப வேளாண் பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத் தோட்டங்களை அமைத்துக்கொண்டால், அவை சுற்றுச்சூழலையும் உடலையும் பேண உதவும் என்பதில் ஐயமில்லை.

(அடுத்த வாரம்: அங்கக வேளாண்மையும் ஆரோக்கியமும்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in