அந்தமான் விவசாயம் 17: அந்தமானின் அங்கக முறைகள்

அந்தமான் விவசாயம் 17: அந்தமானின் அங்கக முறைகள்
Updated on
1 min read

அந்தமான் நிகோபார் தீவுகளைப் பொறுத்தவரை, பன்னெடுங்காலமாக அங்கக வேளாண்மை பின்பற்றப்பட்டுவருகிறது. ஒட்டுமொத்த நிகோபார் தீவுகள் முழுவதும் மனிதச் சஞ்சாரம் ஆரம்பித்த நாள் முதல், வேளாண்மையில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது இத்தீவுகளின் சிறப்பம்சம். சமீபகாலமாகத் தெற்கு அந்தமான் தீவில் மட்டும் ஒரு சிலர் தென்னைக்கு உரமளிக்கத் தொடங்கிவிட்டனர். இவையன்றிப் பெரும்பாலும் தென்னையும் பாக்கும் இயற்கை முறையிலேயே இன்றும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும் கிழங்கு வகைகள், பழங்கள் அங்கக முறையிலேயே விளைவிக்கப்படுகின்றன. காய்கறிகளைத் தவிர நெல், பருப்பு வகைகள் குறைந்த அளவு இடுபொருளைக் கொண்டோ அல்லது அங்கக முறையிலோ உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தீவுகளில் பசுந்தாள் உரம், குறைந்த அல்லது உழவற்ற வேளாண்மை, அங்கக பொருட்கள் மூடாக்கு, நெல் தழைகளை விட்டுக் கதிர்களை மட்டும் அறுவடை செய்தல், மட்கு, மண்புழு உரம் போன்றவை பயன்பாட்டில் உள்ள அங்கக வேளாண் முறைகளாகும்.

இயற்கை முறைகள்

நெல், பருப்பு, காய்கறிகள் போன்ற ஒரு பருவத் தாவரங்களை அங்கக முறையில் உற்பத்தி செய்ய இடுபொருட்களும் பயிர் பாதுகாப்பு முறைகளும் மிக அவசியம். ஆனால், மர வகை பல்லாண்டுத் தாவரங்கள் இன்னும் எளிமையான மேலாண்மை முறைகள் மூலம் இயற்கைவழியில் வளர்க்கப்படுகின்றன.

மேலும் இங்கு வளர்க்கப்படும் பெரும்பாலான கிழங்கு, காய்கறிகள், நெல், வாழை, தென்னை பயிர்கள் உள்நாட்டு ரகங்களே. சில ரகங்கள் வெளிநாட்டிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகளில் சூழ்நிலைக்கு ஏற்பத் தேர்வு செய்யப்பட்ட ரகங்கள். இத்தீவுகளின் பயிர் பன்முகத்தன்மை, இயற்கை சார்ந்த முறைகள் உணவு உற்பத்தியை நிலைப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன என்றால் அது மிகையில்லை.

காரணம் என்ன?

அங்கக வேளாண்மையில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த உணவுப் பொருட்கள் அல்லது விளைச்சலின் பெரும்பகுதி இத்தீவுகளிலேயே மக்களால் உணவாக உட்கொள்ளப்படுகிறது. கொப்பரை, பாக்கு, பருப்பு வகைகள் தமிழகத்தில் உள்ள வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அப்படியென்றால் அங்கக வேளாண்மை இத்தீவுகளின் இயற்கை வளத்துக்கு இயைந்துசெல்வதால் பின்பற்றப்படுகிறதா? உணவுத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுச் சந்தையில் அதிக விலை கிடைக்கிறது என்ற காரணத்தில் அது பின்பற்றப்படுகிறதா? அல்லது பசுமைப்புரட்சியின் தாக்கம் இன்னும் இத்தீவுகளை எட்டவில்லையா? அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

(அடுத்த வாரம்: அறிவியல் சொல்லும் அடிப்படை உண்மைகள்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in