குறுந்தொடர் - விதை: நாம் தொலைத்துவிடக் கூடாத பொக்கிஷம்

குறுந்தொடர் - விதை: நாம் தொலைத்துவிடக் கூடாத பொக்கிஷம்
Updated on
2 min read

‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என்கிறது புறநானூறு. அந்தக் காலத்தில் விதையும் எருவும் பொதுச் சொத்தாக இருந்ததால் இப்படிப் பாடினார்கள். இந்தக் காலத்தில் உணவெனப்படுவது நிலம், நீர், மக்கிய எரு, பாரம்பரிய விதைகள், உயிர்ப் பன்மயம், பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பம், இயற்கை வேளாண்மை எல்லாம் சேர்ந்திருக்கிறது. இதில் ஒன்று குறைந்தாலும் உணவின் தரம் குறைந்துவிடும்.

உயிர் பன்மயப் பாதுகாப்புதான் உண்மையான உணவுப் பாதுகாப்பு. அதிலும் விதைகள் அழிந்துவிட்டால், ஒரு பயிர் ரகமே அழிந்து விடும். எனவே, நமக்கு உணவு தரும் பயிர்களுக்கு ஆதாரமானது விதை. இப்படி நம் பாரம்பரிய விதை வளத்தில் இழந்தது ஏராளம். அதேநேரம் மனிதப் பேராசையால் எத்தனை விஷயங்கள் மோசமாக அழிக்கப்பட்டாலும், ஒரு சில தனிமனிதர்கள் சுயநலமின்றி, எதிர்பார்ப்பின்றி, சேவை எண்ணத்துடன் தங்களால் இயன்ற ஆக்கபூர்வப் பணிகளைப் பல்வேறு தளங்களில் செய்துவருகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பவர்கள் பணி மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

பன்மயப் பாதுகாவலர்கள்

விஜய் ஜர்தாரி:

இமயமலையில் பாரம்பரிய இயற்கை வேளாண்மை, பண்டைய வேளாண் முறைகள், விதை பன்மயத்தை மீட்டெடுத்தவர் இவர். 'பாரா நாஜா' (bara naja) என்றழைக்கப்படும் இமயமலைப் பகுதிக்கே உரித்தான பல பயிர்/கலப்புப் பயிர் விதைப்பு முறையை நடைமுறைப்படுத்தியவர். பல நூறு பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்து வருபவர்.

டாக்டர் அனுபம் பால்:

மேற்கு வங்க அரசின் வேளாண் துறை உதவி இயக்குநர். 13 ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு 300-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளைப் பரப்பி வரும் மனிதர்! அரசு வேலையில் இருந்துகொண்டே வேளாண் துறையின் நிலத்திலேயே இதையெல்லாம் சாதித்திருக்கிறார்.

தேபால் தேவ்:

ஒடிசாவில் 2.5 ஏக்கரில் இரண்டு மீட்டருக்கு இரண்டு மீட்டரில் 1,300 நெல் வகைகளைச் சேமித்துவரும் அபூர்வ விதை வித்தகர்.

மைசூர் அப்துல் கனி:

800 நெல் வகைகளையும் 120 மாங்கனி வகைகளையும் பயிரிட்டு வருபவர்.

சங்கரப்ப லங்கோட்டி:

ஹூப்ளியைச் சேர்ந்த இவருடைய தந்தை கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதால் சிறு வயதிலே விவசாயத்துக்குள் நுழைந்தவர். சிறுதானியங்கள், பருப்பு வகைகள், நெல் ரகங்கள் பலவற்றைப் பாதுகாத்து வருகிறார்.

இவர்களைப் போன்ற தனிநபர்கள் தவிர டி.டி.எஸ். என்னும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கான் டெவலப்மெண்ட் சங்கம் என்ற ஆதிவாசி பெண்களின் குழு, பெங்களூருவின் சகஜ சம்ருதா, விதர்பா இயற்கை விவசாயிகள் விதை சேமிப்புக் குழு, ஒடிசாவின் வசுந்தரா (ம) சேத்னா, மத்தியப் பிரதேசத்தின் சம்பர்க், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் எனப் பல மாநிலங்களைச் சேர்ந்த விதை பாதுகாவலர்கள் நாடெங்கிலும் உள்ளனர்.

தமிழகப் பெருமைகள்

நூற்றுக்கும் மேற்பட்ட நெல் வகைகளைப் பாதுகாத்தும் பரப்பியும் வரும் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த நெல் ஜெயராமன், அவரது கிரியேட் குழுவினர்; பல்வேறு விவசாயிகளுடன் சேர்ந்து நாட்டுக் காய்கறிகள், பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்தும் பரப்பியும் வருபவர் முசிறி யோகநாதன்; மிகக் குறுகிய காலத்தில் 150-க்கும் மேற்பட்ட நெல் வகைகளைப் பாதுகாத்து வரும் உளுந்தூர்பேட்டை ஷாரதா ஆஷ்ரம்; ஆரோவில்லின் தீபிகா; பல அரிய மருத்துவ மூலிகைகளைப் பாதுகாத்து வரும் முதியவர் மோகனகிருஷ்ணன்; பல அரிய மர வகைகளின் விதைகளையும் தானிய ரகங்களையும் பாதுகாக்கும் ஜனகன்; பல அரிய கிழங்கு, காய்கறி வகைகளைப் பாதுகாத்துவரும் சீர்காழி புலவர் ராசாராமன் எனத் தமிழக விதைப் பாதுகாவலர்களின் பட்டியலும் நீண்டதுதான்.

இதுபோலப் பல தனிநபர்களால், குழுக்களால், சமூக விதை வங்கிகளால் பல ஆயிரம் மரபு விதைகள் பொக்கிஷம் போலப் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

பன்மயம் அழிப்புக்கு எதிராக…

இன்றைக்கு உலகில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் உண்ணும் உணவில் முக்கால் பங்கு, அதாவது 75% எட்டே எட்டு பயிர்/உணவில் அடங்கிவிடும். இந்த வகையில் உணவு, பயிர் பன்மயத்தை பன்னாட்டு விதை நிறுவனங்கள் தங்கள் ஆதிக்க வியாபாரத்தால் அழித்துவரு கின்றன. இது போன்ற அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, நம்முடைய பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவே தேசிய விதைத் திருவிழா சென்னையில் ஜூன் 9, 10, 11 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

இதுபோன்ற விதைத் திருவிழாக்களால் சாதாரண மக்களுக்கு என்ன லாபம், நாம் என்ன செய்யலாம், நகர மக்கள் பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எப்படிப் பங்கேற்கலாம் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

சென்னையில் அடுத்த வாரம் தேசிய விதைத் திருவிழா

தேசிய விதைத் திருவிழா சென்னையில் அடுத்த வாரம் நடைபெறுகிறது. ஜூன் 9, 10,11 தேதிகளில் பகல் 11 மணி முதல் இரவு 7 மணிவரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. நாடெங்கும் உள்ள முக்கிய விதை சேகரிப்போர் 2000-க்கும் மேற்பட்ட விதைகளுடன் இந்தத் திருவிழாவில் பங்கேற்கிறார்கள்.

இயற்கை பருத்தியில் நெய்யப்பட்ட கைத்தறி ஆடைகள், இயற்கை உணவு, இயற்கை காய்கறி/தானியங்கள் விற்பனை, மரபு விளையாட்டு, பாரம்பரிய இசைக்கருவிகள், சுற்றுச்சூழல் புத்தக விற்பனை, மாடித் தோட்டப் பயிற்சி, விதைப் பரிமாற்றம், வல்லுநர்கள் கருத்துரை எனப் பல்வேறு நிகழ்வுகள் இந்தத் திருவிழாவில் நடைபெறும்.

சென்னை இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த விதைத் திருவிழா அரியதொரு வாய்ப்பு.

கூடுதல் விவரங்களுக்கு: 9444926128 / 9840873859

- கட்டுரையாளர், இயற்கை வேளாண் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in